கடிமணப் படலம் - 1308
உடைவாள் அணிதல்
1308.
சலம் வரு தரளமும். தயங்கு நீலமும்.
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்.
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம்வரு கதிர் என. வாளும் வீக்கியே;
சலம் வரு தரளமும். தயங்கு நீலமும்- கடல் நீரில் தோன்றுகின்ற
(வெண்) முத்துக்களும். ஒளிகின்ற நீல நிறமுடைய மாணிக்கங்களும்;
அலம் வரு நிழல் உமிழ் அம்பொன் கச்சினால் - அசைவதனால்
ஒளி உமிழ்கின்ற அழகிய பொன்னால் ஆகிய இடைக்
கச்சினால்; குலம் வரு கனகவான் குன்றை நின்று உடன் வலம் வரு
கதிர் என - சிறப்புடைய பொன்மயமான மேருமலையைச் சேர வலம்
வந்து நிற்கின்ற சூரியனைப் போல; வாளும் வீக்கியே - உடை
வாளினை இடையில் கட்டி (இராமன் அணிசெய்தான்.)
இராமனது திருமேனி கரிய நிறத்தது ஆயினும். அணிந்த
அணிகளின் ஒளியால் பொன்னிறம் பெற்றதாதலின் இடையினை.
கனகக் குன்றாகிய மேரு மலைக்கும். உடைவாளினைச் சூரியனுக்கும்
உவமித்தார். தரளம்: முத்து. கனகம்: பொன். 63
