கடிமணப் படலம் - 1307

bookmark

வெண்ணிறப் பட்டுச் சாத்தல்

1307.    

‘மண்ணுறு’ சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண்ணுறு கருங் கடல்அதனை. கை வளர்
தண் நிறப் பாற்கடல் தழீஇயது ஆம்’ என.
வெண் நிறப் பட்டு. ஒளி விளங்கச் சாத்தியே;
 
மண் உறு சுடர்மணி வயங்கித் தோன்றிய கண்ணுறு கருங்கடல்
அதனை   -   சாணைப்    பிடித்துத்   தீற்றிய   ஒளி  விளங்குகின்ற
மாணிக்கங்கள்  தோன்றுதற்கு   இடமாய்க்  கண்ணுக்குப்  புலப்படுகின்ற
கரிய கடலை;கைவளர் தண் நிறப் பாற் கடல் தழீஇயது ஆம் என -
அலைக்கரங்கள்  வளர்கின்ற   குளிர்ந்த  தன்மையையுடைய  பாற்கடல்
தழுவிய  காட்சி  இது  என்று  கூறலாம்படி;  வெண்நிறப் பட்டு ஒளி
விளங்கச்  சாத்தியே  -  வெண்மை  நிறமுடைய  பட்டாடையை ஒளி
விளங்குமாறு தன் இடையிலே உடுத்து (அணி செய்தான் இராமன்).

கருங்கடல்     பாற்கடல்  உடுத்தது  போல.  இராமன்  தன்  கரிய
திருமேனியில்    வெண்பட்டை    உடுத்தான்   என்க.    மண்ணுதல்;
கழுவுதலுமாம்.  முத்து   முதலிய    இரத்தினங்கள்   நீராற்   கழுவித்
தூயதாக்கலின்  “மண்ணுறு  சுடர்மணி” என்றார்  எனினுமாம்.  “கற்பால்
உமிழ்ந்த  மணியும் கழுவாது   விட்டால்.   நாற்பால  அழியும்” (சீவக.
அவையடக்)  என்பர்.  மணி   அணிகள்   பல  அணிந்து   விளங்கும்
கருநீலக்  கடலும்  உடுத்திருந்த  வெண்   பட்டாடைக்குப்  பாற்கடலும்
உவமை. மங்கல நிறமாதலின் வெண்பட்டாடை கூறினார்.           62