கடிமணப் படலம் - 1299

bookmark

முத்தாரம் அணிதல்

1299.    

சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி.
மொய்க் கருங் குழலினாள். முறுவல் உள்ளுறப்
புக்கன நிறைந்து. மேல் பொடிப்ப போன்றவே.
 
சக்கரத்து அயல்வரும் சங்கம் ஆம் என-(திருமாலின்  சுதரிசனம்
எனும்)   சக்கராயுதத்துக்கு    அருகில்   ஏந்தியுள்ள   பாஞ்சசன்னியம்
என்னும்  சங்கு  இது  என்னுமாறு; மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள
வெண்கொடி - மிக  ஒளிதரும்   கழுத்திலே  முத்தாலான   வெண்மை
ஒளி  தரும் மாலை வரிசைகள்; மொய்க் கருங்குழலினாள் முறுவல் -
அடர்ந்த   கருங்  கூந்தலையுடையவளான  சீதையின்  புன்சிரிப்புக்கள்;
உள்ளுறப்புக்கன  நிறைந்து  மேல்  பொடிப்ப போன்ற - (இராமன்)
மனத்தின்  உள்ளே  புகுந்து. உள்ளிடம் முழுதும்  நிறைந்து  உடம்பின்
மேலே வெளிப்பட்டன என்னுமாறு தோன்றின.

கொடி:   வரிசை. முத்தனைய பற்கள் சிறிதே தோன்ற  முறுவலிக்கும்
பிராட்டியின்  புன்னகை இராமன்  நெஞ்சமெல்லாம்  நிறைந்து  கிடந்தது
என்பதோடமையாது அம்முறுவல்   பொங்கி  வழியும்  அளவு  மிக்கும்
இருந்தது  என.  கழுத்தில்  அணியும்   முத்துமாலை   கொண்டு  தன்
குறிப்பை  ஏற்றிக்  கூறியவாறு.  தரளம்:   முத்து.   சக்கரம்  இராமனது
திருமுகத்துக்கும்.  சங்கு அவன்  கழுத்துக்கும்  ஒளிபற்றிய  உவமைகள்
ஆயின.  பிராட்டியின் புன்  முறுவல்  பெருமானின்  நெஞ்சம் கொண்ட
பெருமை  வாய்ந்தது  என்பதனை “வாள் நிலா முறுவற்  கனிவாய்  மதி
காணலாவதோர்   காலம்  உண்டாம்  கொல்”  (கம்ப.  622)   எனவும்.
“உண்ண வந்த நகையும் என்று  ஒன்று  உண்டால்” (கம்ப.623) எனவும்
பிறவிடத்தும் ஓதுவதால் உணரலாம்.                            54