கடிமணப் படலம் - 1300
தோள்வளை தரித்தல்
1300.
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி அழலின் தோன்றலால்.
சுந்தரத் தோள் அணி வலயம். தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே.
பந்தி செய்வயிரங்கள் பொறியின் பாடுற-ஒழுங்குறப் பதிக்கப்பட்ட
வச்சிர மணிகள் (பாம்பின் படப்) புள்ளிகள் போல் ஒளி பொருந்த;
அந்தம் இல் சுடர் மணி அழலின் தோன்றலால் - எல்லையிலாத
செந்நிறமாய் விளங்கும் மாணிக்க மணிகள் தீயின் செந்நிறம் போலத்
தோன்றுவதனால்; சுந்தரத் தோள் அணிவலயம் - (இராமனின்)
அழகிய தோள்களில் அணியப்பெற்ற தோள்வளைகள்; தொல்லை
நாள் மந்தரம் சுற்றிய அரவை மானும் - முன்பு. பாற்கடல் கடைந்த
காலத்தில். மத்தாக நின்ற மந்தர மலையைச் சுற்றிப் பிணைத்திருந்த
கடைகயிறாகிய (வாசுகி என்னும்) பாம்பைப் போன்றிருந்தன.
இராம பிரானின் திருத்தோள்கட்கு. மந்தர மலையும் அவற்றைச்
சுற்றியுள்ள தோள் வளைக்கு. வாசுகியும் உவமைகள் ஆயின. தோள்
வளையின் வாய்ப் பொருத்தில் பதிக்கப் பெற்றுள்ள மணி. வாசுகியின்
தலையில் ஒளியுமிழும் சீவரத்தினத்துக்கு உவமையாம். “இருள் இரியச்
சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி” (பெருமாள். திரு. 1.1)
என்பவாதலால். “அந்தமில் சுடர் மணி அழலின் தோன்றலால்”
என்றார். 55
