கங்கைப் படலம் - 2038
சீதையின் குழற்கற்றை கங்கைநீரிடைத் தாழ்ந்து
குழைந்த காட்சி
2038.
மங்கை வார் குழல் கற்றை மழைக் குலம்
தங்கு நீரிடைத் தாழ்ந்து குழைப்பன,
கங்கை யாற்றுடன் ஆடும் கரியவள்
பொங்கு நீர்ச் சுழி போவன போன்றவே.
மங்கை வார் குழல் கற்றை மழைக்குலம் - சீதையின் நீண்ட
கூந்தல் தொகுதியாகியமேகக் கூட்டம்; தங்கும் நீரிடைத் தாழ்ந்து
குழைப்பன - அவள் குளிக்கின்றநீரிடத்து உள் தாழ்ந்து சுழலுவன (எது
போலும் எனில்); கங்கையாற்றுடன் ஆடும் கரியவள் -கங்கை
யாற்றுடனே வந்து கலக்கின்ற யமுனா நதியின்; பொங்கு நீர்ச்சுழி -
மேல்எழும்பிய கரிய நீர்ச்சுழிகள்; போவன போன்ற - போகின்ற
தன்மை போலும்.
கங்கை வெண்ணிறமுடையது. யமுனை கருநிறம் உடையது. சீதையின்
கூந்தல் முழுகுங்கால் நீரில்சுழலுதல் யமுனையின் சுழி போல்
தோன்றுவதாகக் கற்பனை. கங்கையும் யமுனையும் கலக்கின்ற இடம்
பிரயாகையாம். 23
