கங்கைப் படலம் - 2039
சீதை பாற்கடலிடைத் தோன்றிய திருமகள்போல
விளங்குதல்
2039.
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று, தன்
விழியின் சேல் உகள் வால் நிற வெள்ளத்து,
முழுகித் தோன்றுகின்றாள், முதல் பாற்கடல் -
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள்.
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று - சுழிகள் உண்டாகப் பெற்று
மேல் எழும்பிஅசைகின்ற பேரொலி உடைய கங்கை ஆற்றில்; தன்
விழியின்சேல் உகள் - தன்கண்களைப் போல் மீன்கள் துள்ளுகின்ற;
வால் நிற வெள்ளத்து - வெண்மையான நிறமுடையநீர்ப்பெருக்கில்;
முழுகித் தோன்றுகின்றாள் - முழுகி எழும்புகின்ற சீதை; முதல்- ஆதி
நாள்; பாற்கடல் அழுவத்து - பாற்கடற் பெருக்கிலே; அன்று எழுவாள் -
அன்று தோன்றியவளாகிய திருமகள்; எனல் ஆயினாள் - என்று
சொல்லும்படிதோன்றினாள்.
கங்கையின் வெண்ணீர்ப் பெருக்கில் முழுகி மேல் எழும் சீதை
திருப்பாற்கடல் கடைந்தபோதுஅதன் பரப்பின் மேல் எழுந்த திருமகள்
போல் வாள் ஆயினள் என்க. 24
