எழுச்சிப் படலம் - 829
சேனையில் உள்ளவர் அணிந்த ஆபரணங்கள்
முதலியவற்றின் செயல்
829.
இழையிடை இள வெயில் எறிக்கும்; அவ் வெயில்.
தழையிடை நிழல் கெடத் தவழும்; அத் தழை.
மழையிடை எழில் கெட மலரும்; அம் மழை.
குழைவுற முழங்கிடும். குழாம் கொள் பேரியே.
இழை இடை- (சேனையிலுள்ள மாதரும் வீரரும் அணிந்துள்ள)
அணிகலன்களிலிருந்து; இளவெயில் எறிக்கும் - இளவெயில் வீசும்;
அவ் வெயில் - அந்த வெயிலானது; தழை இடை - மயில்பீலிக்
குடைகளினிடையே தோன்றும்; நிழல்கெட - நிழல் ஒழியும்படி;
தவழும் - எங்கும் பரவும்; அத் தழை - அந்தப் பீலிக்குடைகள்;
மழை இடை எழில் - நீரைக் குடித்த மேகங்களின் அழகு; கெட
மலரும் - அழியும்படி விளங்கித் தோன்றும்; அம்மழை குழைவு உற
- அம் மேகங்கள் தளர்ச்சியடையும்படி; குழாம் கொள் பேரி -
கூட்டமான பேரிகைகள்; முழங்கிடும் - முழங்கும்.
அணிகலன்களின் இளவெயில் வீசும்;அவ்வெயில் மயில் பீலிக்
குடைகளின் நிழல் அழியுமாறு அந்த நிழலில் தவழும். அப் பீலிக்
குடைகள் தம் நீல நிறத்தால் மேகங்களின் அழகு கெட அங்கங்கே
விளங்கித் தோன்றும்; அம் மேகங்களும் இத்தகைய இனிய பேரொலி
நமக்கு இல்லையே என்று நாணிக் குழைய முரசக்கூட்டங்கள்
முழங்கும் என்பது. 13
