எழுச்சிப் படலம் - 830

bookmark

குதிரைமீதும் யானைமீதும் மகளிர் ஊர்தல்

830.    

மன் மணிப் புரவிகள் மகளிர் ஊர்வன.
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன;
பொன் அணி புணர் முலைப் புரி மென் கூந்தலார்
மின் என. மடப் பிடி மேகம் போன்றவே.
 
மகளிர்      ஊர்வன- மகளிர் ஏறிச் செலுத்தக்கூடிய;  மணி மன்
புரவிகள் - கிண்கிணி மாலை பூண்ட குதிரைகள்; அன்னம்  உந்திய -
அன்னப்   பறவைகளைச்  சுமக்கின்ற;  திரை   ஆறு  போன்றன  -
அலைகளையுடைய  ஆறுகளை ஒத்தன; பொன் அணி  புணர்முலை -
பொன்  அணிகளைப்  பூண்ட  நெருங்கிய   தனங்களையும்;  புரிமென்
கூந்தலார்  - பின்னப்பட்ட மெல்லிய கூந்தலையுமுடைய  மகளிர்; மின்
என   -   மின்னலைப்   போலத்   தோன்ற;  மடப்பிடி-  (அவர்கள்
ஏறியிருந்த)  இளம்பெண்  யானைகள்;   மேகம் போன்ற - மேகத்தை
ஒத்தன.

கிங்கிணியின்     ஓசை  அன்னத்தின்  குரலையும்.     குதிரைகள்
அலைகளையும்.   மகளிர்   அன்னப்  பறவையையும்    ஒத்துள்ளமை
காணலாம். - தற்குறிப்பேற்ற அணி.

மகளிர்    பெண்யானைகள்மேல் ஊர்தல் மரபு: களிறு ஆணாதலால்
கற்பிற்கு  இழுக்காதல்  நோக்கியும்  களிறு மதம் கொள்ளின்   அதனை
அடக்கியாளும் வன்மை இவர்களுக்கு இல்லையாதலானும் எனலாம்.   14