எழுச்சிப் படலம் - 820
தசரதன் வியத்தல்
820.
வெற்றிவேல் மன்னவன். ‘தக்கன் வேள்வியில்.
கற்றை வார் சடை முடிக் கணிச்சி வானவன்.
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொல் அன்று இடித்தது. ஈங்கு?’ என்றான்.
வெற்றிவேல் மன்னவன் - வெற்றி பொருந்திய வேலை ஏந்திய
தசரதன்; கற்றை வார் சடைமுடி - தொகுதியான நீண்ட சடை
முடியையும்; கணிச்சி வானவன் - மழுப்படையையும் உடைய
தேவனாகிய சிவ பெருமான்; தக்கன் வேள்வியில் - தக்கனது
யாகத்தை அழித்த போது; ஏழ் உலகையும் - ஏழு உலகத்தையும்;
முற்றவும் வென்ற - முற்றும் வெற்றிகண்ட; மூரிவில் - வலிய
வில்லானது; இற்ற - முறிந்ததனால் உண்டான; பேரொலிகொல் -
பெரிய ஓசையோ; அன்று - அன்றைய தினம்; ஈங்கு இடித்தது -
இங்கே இடித்தது; என்றான் - என்று வியந்து கூறினான்.
வெற்றிவேல் - உடையவனது தன்மை உடைமைப் பொருள் மேல்
ஏற்றப் பெற்றது. தக்கன் வேள்விக்கு வந்த. வானுலகில் வாழும் சிறந்த
தேவர்களின் வலிமைக்கும் விஞ்சியது ஆதலின் அவ் வில்லுக்கு
‘முற்ற ஏழுலகையும் வென்ற’ என்ற அடைமொழி? தந்தார். 5
