எழுச்சிப் படலம் - 819
இராமன் வீரங்கேட்ட தயரதன் மகிழ்ச்சி
819.
இலை முகப் படத்து அவன் எழுதிக் காட்டிய
தலை மகன் சிலைத் தொழில் செவியில் சார்தலும்.
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட.
மலை என வளர்ந்தன. வயிரத் தோள்களே.
இலைமுகப் படத்து- பனையோலையின் முகப்பாகிய படத்தில்;
அவன் எழுதிக் காட்டிய - அச் சனக மன்னன் எழுதிக் காண்பித்த;
தலைமகன் சிலைத் தொழில் - (தன்) மூத்த மைந்தனாகிய இராமனது
வில்லாற்றலானது; செவியில் சார்தலும் - (தன்) காதில் பட்டவுடனே;
வயிரத் தோள்கள் - (தசரதனுடைய) வயிரம் போன்ற உறுதியான
தோள்கள்; நிலைமுக வலையங்கள் - தம்மிடம் நிலை பெற்ற
தோள்வளைகள்; நிமிர்ந்து நீங்கிட - வாய்விட்டுக் கழன்றுபோகும்படி;
மலை என வளர்ந்தன - மலைபோலப் பூரித்தன.
தன் மூத்த மைந்தனான இராமனது வீரச் செயலை வேறொரு
மன்னன் புகழ்ந்து எழுதியதைக் கேட்டுத் தசரதன் மகிழ்ச்சியடைந்து
தோள் பூரித்தான் என்பது. 4
