எழுச்சிப் படலம் - 817
தூதர்கள் தசரதனை வணங்குதல்
817.
முகந்தனர் திருவருள். முறையின் எய்தினார்;
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது. செல்வனைப்
புகழ்ந்தனர்; ‘அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது’ என. நெடிது கூறினார்.
திருவருள் முகந்தனர்- (வாயிலையடைந்த தூதர்) உள்ளே செல்ல
அரசனது அருளைப்பெற்றவராய்; முறையின் எய்தினார் -
அரசவையில் செல்ல வேண்டிய முறைப்படி அரசன் முன்பு சென்று;
திகழ்ந்து ஒளிர் - மிக விளங்குகின்ற; கழல் இணை தொழுது - தசரத
மன்னனின் அடிகளை வணங்கி; செல்வனைப் புகழ்ந்தனர் -
அவ்வரசனைப் புகழ்ந்து; அரச - மன்னரே; நின் புதல்வர் - உன்
மைந்தர்; போய பின் - (விசுவாமித்திரனுடன்) இங்கிருந்து சென்றபின்;
நிகழ்ந்ததை - நடந்த செயல்; இது என - இதுவாகும் என்று; நெடிது
கூறினார் - விரிவாகக் கூறினர்.
அரசவைக்கு அன்னிய நாட்டுத் தூதுவர் வருங்காலத்து வாயில்
காப்பவர் ‘அரசனிடம் சென்று இந்த நாட்டுத் தூதுவர் வந்துள்ளார்’
என்று உணர்த்தி. அவனது உத்தரவின்படி உள்ளே விடுதல் மரபாகும்.
முறை: அரசவையில் செல்லும் தூதர்கள் அடக்கத்துடன் நிற்கும்
முறைமையை உணர்த்தியது. செல்வனைப் புகழ்தல்: தூதர்கள்
அரசனை வணங்கி எழுந்ததும் அவனைப்புகழ்தல் மரபாகும். 2
