எதிர்கொள் படலம் - 1143
அப்போது சேனை அடைந்த மகிழ்ச்சி
1143.
காதலோ! அறிகிலம். கரிகளைப் பொருவினார்;
தீது இலா உவகையும். சிறிதுஅரோ? பெரிதுஅரோ?
கோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்.
தாதையோடு ஒத்தது. அத் தானையின் தன்மையே!
கரிகளைப் பொருவினார் - யானைகளைப் போன்ற அப்படை
வீரர்களுடைய; காதலோ அறிகிலம் - (அரச குமாரர்களிடத்து
வைத்துள்ள) அன்பின் மிகுதியோ (இவ்வளவென்று) எம்மால்
அறியமுடியாததாய் உள்ளது; தீது இலா உவகையும் சிறிதரோ?
பெரிதரோ? - (அவர்கட்கு அப்போது உண்டான) மாசற்ற மகிழ்ச்சிப்
பெருக்கு குறுகிய காலத்ததா? நீண்ட காலத்ததா? (அறியோம்.);
கோதை சூழ் குஞ்சிக் குமரர் வந்து எய்தலும் - மாலைகளைச் சூடிய
மயிர் முடியோடு காணப்பெறும் அரசகுமாரர்கள் வந்து அடைந்த
அளவிலே; அத்தானையின் தன்மை தாதை யோடு ஒத்தது - அந்தப்
படையின் இயல்பு (இராம இலக்குவர்களைக் கண்ட) தந்தையாகிய
தசரதன் இயல்போடு சமமாகியது.
அரோ - அசைகள்: “தாதையோடு ஒத்தது” என்றதனால். தசரதன்
அடைந்த பேருவகையினைப் படைகளும் அடைந்தன என்றார்.
எனவே. இராம இலக்குவர் அத்தனை பேர்க்கும் மக்களாயினர்;
அத்தனை பேரும் இராம இலக்குவர்க்குத் தந்தையர் ஆயினர்
என்பது கருத்தாகக் கொள்க. 30
