எதிர்கொள் படலம் - 1126
வழியில் படர்ந்த சேற்றின் தன்மை
1126.
நறு விரைத் தேனும். நானமும். நறுங் குங்குமச்
செறி அகில் தேய்வையும். மான்மதத்து எக்கரும்.
வெறியுடைக் கலவையும். விரவு செஞ் சாந்தமும்.
செறி மதத் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம்.
நறுவிரைத் தேனும் நானமும்- நறுமணமுடைய தேனும். (கூந்தலில்
கலந்தொழுகும்) புனுகும்; நறுங்குங்குமச் செறிஅகில் தேய்வையும்-
நல்ல வாசனையுடைய குங்குமப் பூவோடு சேர்ந்த திண்ணிய
அகிற்கட்டைத் தேய்வினால் ஆகிய குழம்பும்; மானமதத்து எக்கரும் -
மான்மதமாகிய கத்தூரியின் மிகுதியும்; வெறியுடைக் கலவையும் -
பரிமளமுடைய பல்வேறு வாசனைப் பொருள்களின் சேர்க்கையும்;
செஞ்சாந்தமும் - செந்நிறச் சந்தனமும்; விரவு செறி மதக் கலுழியாய்
சேறுமே - சேர்தலால் உண்டான சேறுகளுடனே. மிகுந்த
யானைகளின் திரள்களில் உண்டான மதநீர் பாய்கின்ற சேறுகளும்;
சேறு எலாம் - (சேர்ந்த கலவையே படைசெல்லும் வழியில் உள்ள)
சேறுகள் யாவும்.
இழிகுணச் சேறின்றி. நறுமணச் சேறே வழியெங்கும் என்று கற்பித்து.
செல்வ வளமும். நாகரிகச் செழுமையும் சுட்டியவாறு. கலுழி - வெள்ளம்.
13
