எதிர்கொள் படலம் - 1127
நிழல்களின் தன்மை
1127.
மன்றல் அம் கோதையார்
மணியினும் பொன்னினும்.
சென்று வந்து உலவும் அச்
சிதைவு இலா நிழலின் நேர்.
வென்ற திண் கொடியொடும்.
நெடு விதானமும் விராய்.
நின்ற வெண்குடைகளின்
நிழலுமே - நிழல் எலாம்.
மன்றல் அம்கோதையார் மணியினும் பொன்னினும்- மணம் மிக்க
அழகிய மாலையினை யணிந்த மகளிரது பொன் ஆபரணங்களிலும்.
மணியாபரணங்களிலும்; அச்சிதைவிலா நேர் நிழலின் சென்று வந்து
உலவும் - (அங்குள்ள சேனைகளின் வெண்குடை. கொடி
முதலியவற்றின்) சிதைவில்லாத (எதிர் ஒளி) நிழல்கள் நேராகச் சென்று
உலாவி வரும்; வென்ற திண்கொடியோடும் - இவற்றோடு வெற்றிக்கு
அறிகுறியான வலிய துவசங்களுடன்; விதானமும் விராய் -
மேற்கட்டிகளும் கலந்து நின்ற; வெண் குடைகளின் நிழல்களே-
வெண் கொற்றக் குடைகளின் நிழல்களே; நிழல் எலாம் - அவ்வழியில்
உள்ள) நிழல்கள் எல்லாம்.
இரு மன்னர்களின் குடைகள் இன்றும் நிழல் தரத் தவறவில்லை
என்றபடி. எதிர் ஒளிபட்டு வரும் ஒளிகளில் வெப்பம் வாராது
குளிர்வே வரும் என்பது அன்றே உணர்ந்திருந்தனர் என்பது.
“மன்றலங்கோதையார் மணியினும் பொன்னினும் சென்று வந்து
உலாவும் அச்சிதைவு இலா நிழல்” என்றார். சந்திரன் ஒளி
குளிர்வதற்கும் அது சூரியனின் எதிர் ஒளியாவதே காரணம் என்பார்.
மகளிர் அணியில் பட்டு வரும் எதிர் ஒளி நிழலும். கொற்றக் குடை
நிழலும் அங்கு நிழல் என்றார். 14
