எதிர்கொள் படலம் - 1124

bookmark

குடைகளும் அணிகலங்களும்

1124.    

மன் நெடுங் குடை மிடைந்து
   அடைய வான் மறைதர.
துன்னிடும் நிழல் வழங்கு இருள்
   துரப்பு எளிதுஅரோ-
பொன் இடும். பூண் இடும்.
   புனை மணிக் கலன் எலாம்
மின் இடும்; வில் இடும்;
   வெயில் இடும்; நிலவு இடும்!
 
மன்நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறை தர- அந்தச்
சேனையில்   மன்னர்களின்  நீண்டகுடைகள்   நெருங்கி.   (அதனால்)
வானம் முழுவதும்  மறைபட; துன்னிடும் நிழல் வழங்கு இருள்துரப்பு
எளிது  - (அங்கு) நிறைந்த நிழலானது தருகின்ற இருட்டை  ஓட்டுவது
எளியதேயாம்; பொன் இடும்  பூண்இடும் புனைமணிக் கலன் எலாம்
மின் இடும் - (எங்ஙனமெனில்) பொன்னால் செய்யப்பட்ட  அணிகளை
இட்டு (அதன் மேல்) அழகிய மணிகளைப் பதித்த    (அச்சேனையினர்)
ஆபரணங்கள்  எல்லாம்  மின்னலைப்போல்  ஒளிவிடும்; வில்இடும் -
பன்னிற மணிகள் (தம்) ஒளிவீச்சால் வானவில் போல் பலநிற   ஒளிகள்
சிந்தும்; வெயில் இடும் - (சில மணியாபரணங்கள்) கதிரவனின் வெப்ப
ஒளியை  வீசும்;  நிலவு  இடும்  -  (சில  மணியணிகள்)  சந்திரனின்
குளிர்ந்த ஒளிகளை உமிழும்.

‘புவியிடும்     “எனும்  பாடத்திலும்”  பூண்  இடும்”  எனும் பாடம்
பொருட்சிறப்புடையது.   இறுதியிரண்டடிகள்   உயர்   கவிகளுக்கேயுரிய
சொல் இன்பச்சுவை பிலிற்றி  நிற்றலை ஓதி யுணர்க. படையின்  செலல்.
இருள் நீங்கி ஒளிமிகுவதை  “எரிந்தெழுபல்  படை”(கம்ப: 8329)  எனும்
பாடலிலும் உரைப்பார்.                                       11