உலாவியற் படலம் - 1182

bookmark

ஒருத்தி இராமனைப் படுகொலையான் எனல்

1182.    

‘மருள் மயங்கு மடந்தையர்மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே; இவன்
கருணை என்பது கண்டு அறியான்; பெரும்
பருணிதன்கொல்? படு கொலையான்!’ என்றாள்.
 
மருள் மயங்கு மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன்-
‘இராமன்  (ஆகிய   இவன் எது கேட்டாலும் தரவுள்ள) மோக மயக்கில்
உள்ள     மகளிர்      எவரிடத்திருந்தும்     ஒரு    பொருளையும்
விரும்பாதவனாய்;   இவன்   போகின்றதே!  -   இவன்   இப்படிப்
போகின்றானே!  (இது  தகுமா?); கருணை  என்பது  கண்டறியான் -
(இவன்) அருள் என்னும்  (பெருங்)  குணத்தின்  தன்மையைச்  (சிறிதும்)
அனுபவித்து  அறியானோ?;  பெரும் பருணிதன்கொல்? - (மகளிரைச்
சிறிதும்   விரும்பாக்   குணம்)    பரிணமித்த    சிறந்த  ஞானியோ?;
படுகொலையான்  என்றாள்  - (ஞானி மணந்து கொள்ளச் செல்லான்)
ஆதலின்   (இவன்   பெண்களைக்  கொல்லும்)  படுகொளையாளனே
ஆகல் வேண்டும் என்றாள் ஒருத்தி.

பருணிதன்:     குணங்கள்  பரிணமித்த  பக்குவ  ஞானி. புன்னகை.
கடைக்கண்   வீச்சு   முதலியவை   மங்கையர்   மாட்டு  ஆடவர்க்குக்
கிடைக்கும்  பொருள்கள்.  இராமன்   இத்தகைய  எந்தப் பொருளையும்
மகளிரிடத்துப்    பெற   விரும்பாமல்    செல்கின்றானே    என்பாள்.
“மடந்தையர்  மாட்டு  ஒரு  பொருள்  நயந்திலன்;  போகின்றதே! என
வியந்தாள்.  விருப்பு  வெறுப்பு   ஆகியவற்றையெல்லாம்  இந்த  இளம்
வயதிலேயே  வென்றுவிட்ட  பக்குவ  ஞானி  போலும் இவன் என்பாள்
“பருணிதன் கொல்!” என்று மேலும் வியந்தாள்.                  35