உலாவியற் படலம் - 1175

bookmark

ஒருத்தி ‘கனவில் இராமன் தனி வருமோ ‘எனல்

1175.    

நனி வருந்தி. நலம் குடிபோயிட.
பனி வரும் கண் ஒர் பாசிழை அல்குலாள்.
‘முனிவரும் குல மன்னரும் மொய்ப்புற அற.
தனி வரும் கொல் கனவின்தலை?’ என்றாள்.
 
பனிவரும்    ஒர் பாசிழை அல்குலாள்- கண்ணீர்  நீர்த்துளிகள்
ததும்பிய  கண்ணையும்  பச்சைக்  கற்கள் பதித்த  (மேகலை  முதலிய)
அணிகலனையும் அணிந்த இடைப் பக்கத்தையும்  உடையாள்  ஒருத்தி;
நலம் குடிபோயிட  நனி  வருந்தி - (இவ்வளவு நாளும் தன் உடலில்
குடியிருந்த)  தன்  அழகு  இடம்  பெயர்ந்து   நீங்கிடுமாறு  (இராமன்
மேற்கொண்ட    வேட்கையில்)    மிகவும்   துயருற்று;   முனிவரும்
குலமன்னரும் மொய்ப்பு அற - (இவ்விராமன்) முனிவர்களும் மன்னர்
குலத்தினரும்  (இப்போது)  மொய்த்துக்  கிடப்பது போல்  அல்லாமல்;
கனவின்  தலை தனிவரும் கொல் என்றாள்- என் கனவில் தனியாய்
வருவானோ?’ என்று (ஏக்கத்தோடு) கூறினாள்.

தனித்து     வந்தால் தன்வேட்கை தீரத் தழுவி மகிழ்வேன் என்பது
குறிப்பு.  கூடி இருப்பார் முன் தழுவல் நாணத்தால்  இயலாது.  நனவில்
தழுவுதல்    தவமின்மையால்     இயலாது.     ஆதலால்.   “கனவில்
தனிவருங்கொல்” என்றாள்.                                  28