உலாவியற் படலம் - 1168

bookmark

ஒருத்தி தோழியர் கைத்தாங்கலில் செல்லுதல்

1168.    

அலம்பு பாரக் குழலி ஒர் ஆயிழை.
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட.
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்.
புலம்பு சேடியர் கைமிசைப் போயினாள்.
 
அலம்பு   பாரக்   குழலி  ஒர்  ஆயிழை- (மிகுந்த கனத்தால்)
அலைகின்ற கூந்தலையுடைய  ஆய்ந்தெடுத்த   அணிகலன்களையணிந்த
ஒரு மங்கை;சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட - (காலில்) சிலம்பும்
(இடையில்)  மேகலையும்  ஒலியெழுப்ப; நலம்பெய் கொம்பின் நடந்து
வந்து எய்தினாள் - (இராமனைக் காண) அழகுமிக்க  பூங்கொடி ஒன்று
நடந்து  வருவது  போல வந்தடைந்தாள்; புலம்பு  சேடியர் கைமிசைப்
போயினாள் - இராமனைக் கண்ணுற்றலால் வந்த விரகதாப  மிகுதியால்
தன்வயம்  இழந்து  பரவயப்  பட்டு  சோர்ந்து   இவள்   நிலை கண்டு
வருந்தும் தோழியர் கைத் தாங்கலில் போய்ச் சேர்ந்தாள்.

இராமனைக்     காண மகிழ்ச்சியும் உல்லசாமும் ஒய்யாரமும் துள்ள
வந்தவள்.   கண்டபின்  அடைந்த  நிலை   கூறப்படுகிறது.   சிலம்பும்
மேகலையும்  ஒலிக்க  ஆர்ப்பரித்து நடந்து வந்த  கொடி  ஒலியடங்கிக்
கைக்குள்    எடுத்துச்   செல்லுமாறு    துவண்டு    போனது   என்க.
இறையழகால்  ஈர்க்கப்படும்  உயிர்கள்   ஆர்ப்படங்கிச்   செயலிழந்து
மெய்ம் மறக்கும் திறம் செப்பியவாறு.                           21