உலாவியற் படலம் - 1169
ஒருத்தி இராமனைக் கரும்பு வில் ஒடிக்க வேண்டுதல்
1169.
அருப்பு மென் முலையாள். அங்கு. ஒர் ஆயிழை.
‘இருப்பு நெஞ்சினையேனும். ஒர் ஏழைக்கா.
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா’ என்றாள்.*
அங்கு அருப்பு மென்முலையாள் ஒர் ஆயிழை- அப்பொழுது
(தாமரை) மொக்கினைப் போன்ற மார்பகங்களையுடைய ஆய்ந்தெடுத்த
அணிகலன்களை யணிந்தாள் ஒருத்தி; இருப்பு நெஞ்சினைப் போலும்
- (இராமனை நோக்கி) எனக்கு இரங்காமையால் இரும்பு போன்ற
வலிய மனமுடையாய் ஆயினும்; ஒர் ஏழைக்கா பொருப்பு வில்லைப்
பொடி செய்த புண்ணியா! - ஒரு பேதைப் பெண்ணாகிய சீதைக்காக
மலை போன்ற சிவதனுசையொடித்த புண்ணியனே!; கருப்புவில்
இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் - (நானும் ஒரு பெண் ஆதலால்)
(எனக்காக) (என்மேல் மலர்க்கணை பொழியும் மன்மதனின்)
கரும்புவில்லை ஒடித்து என்னைக் காப்பாற்றுக என்று வேண்டினாள்.
எனக்காக மிக வலிய மலையை ஒடிக்க வேண்டா; மிக எளிய
கரும்பை ஒடித்துக் காப்பாற்றுக என்று நயமுறக் கேட்டவாறு. அரும்பு
அருப்பு எனவும் இரும்பு இருப்பு எனவும் கரும்பு கருப்பு எனவும்
எதுகைக்காக வலிந்தது. (ஒரு பெண்ணுக்கு வாழ்வுதர வேண்டி
மேருமலையனைய வில்லை ஒடித்து அவளைக் காத்தவனே! நானும்
ஒரு பெண் தானே? எனக்காக மன்மதன் பிடித்துள்ள வில்லை ஒரு
கரும்பு வில்லை ஒடித்துக் காப்பாற்றல் ஆகாதா? என்று
மன்றாடுகிறாள். செயலில் உள்ள நியாயத்தையும் செயலாற்ற
வேண்டுவாற்குரிய ஆற்றலையும் உணர்த்தி வேண்டியவாறு. சீதையே
ஏழையென்றால் நான் எத்தனை பெரிய ஏழை? எண்ணிப்பார் என்று
இறைஞ்சியவாறு. 22
