உலாவியற் படலம் - 1162
ஒருத்தி இராமனைக் காணும் பிறரைச் சினத்தல்
1162.
தாக்கு அணங்கு அனைய மேனி.
தைத்த வேள் சரங்கள் பாராள்;
வீக்கிய கலனும் தூசும்
வேறு வேறு ஆனது ஓராள்;-
ஆக்கிய பாவை அன்னாள்
ஒருத்தி - ஆண்டு. அமலன் மேனி
நோக்குறுவாரை எல்லாம்
எரி எழ நோக்குகின்றாள்.
ஆக்கிய பாவை யன்னாள் ஒருத்தி - (கைவல்லான் ஒருவனால்)
ஆக்கப்பட்ட பதுமை போன்றாள் ஒருத்தி;தாக்கு அணங்கு அனைய
மேனி; தைத்த வேள் சரங்கள் பாராள் - தாக்கி வருத்தும் தெய்வ
நங்கை போன்ற தனது மேனியில் பாய்ந்த மன்மத அம்புகளை
மதியாதவளாய்; வீக்கிய கலையும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள்
- தான் இடையில் கட்டியிருந்த மேகலையும் ஆடையையும்
வேறுவேறாகப் பிரித்துள்ளதையும் உணராதவளாய்; ஆண்டு அமலன்
மேனி நோக்குவாரை எல்லாம் - அங்கே. தூயவனான இராமனின்
திருமேனியை (அன்போடு) பார்ப்பவரையெல்லாம்; எரி எழ
நோக்குகின்றாள் - (கண்களிலிருந்து) தீப்பொறி எழுமாறு (சினத்துடன்)
நோக்குவாள் ஆனாள்.
எரி எழ நோக்கியதற்கு ஏது பெருமானின் திருமேனிக்குக்
கண்ணேறு படக்கூடும் என்பது. தன் காதற்குரியவனைப் பிறர்
பார்ப்பது பொறாமையினாலும் எரி எழ நோக்கினாள் ஆதல்வேண்டும்.
தாக்கணங்கு - தீண்டி வருந்துகின்றமோகினி என்னும் அழகுத் தெய்வம்
“தாக்கணங்கு தானைக் கொண்டன்ன துடைத்து” (திருக்.1082) 15
