உண்டாட்டுப் படலம் - 1108

bookmark

காரிகை ஒருத்தி கணவன் முதுகை நோக்கல்

1108.

 கொலை உரு அமைந்தெனக்
   கொடி நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள்.
   கணவற் புல்குவாள்.
சிலை உரு அழிதரச்
   செறிந்த மார்பில் தன்
முலை உருவின என.
   முதுகை நோக்கினாள்.
 
கொலை  உரு  அமைந்து எனக் கொடிய நாட்டத்து - கொலைச்
செயல் (ஒரு) வடிவம்  பெற்றாற்  போன்ற கொடுமையான கண்களையும்;
ஓர்  கலை  உருவு  அல்குலாள்  - ஆடையை ஊடுருவிப் புறப்படும்
இடைப்  பகுதியினையும்  உடையாள்  ஒருத்தி;  கணவற் புல்குவாள் -
(தன்)  கணவனை  இறுகத் தழுவினாள்; சிலை உரு அழிதரச் செறிந்த
மார்பில்   -  மலையும்  உருவழியும்  படியாகத்   திண்ணிதான  (தன்
கணவன்)  மார்பில்; தன் முலை உருவின என முதுகை நோக்கினாள்
- தன்  இரு  தனங்களும்   ஊடுருவிப் போயிருக்கக்கூடும் என (அவன்)
முதுகை (எட்டிப்) பார்த்தாள்.

அணைப்பின்     வன்மை   அறிவித்தவாறு யானையின் கொம்புகள்
அனைய  வன்மையும் வளைவும்  உடைய  அவள்  மார்பகங்கள். இறுக
அணைத்ததனால்.    அவன்     மார்பைத்    துளைத்து    மறுபக்கம்
வந்திருக்கக்கூடும்  என  அவன்  முதுகைப்  பார்த்தாள்   -   உயர்வு
நவிற்சி.                                                   62