உண்டாட்டுப் படலம் - 1109
கலவியின் விளைவு
1109.
குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
சங்கு இனம் முரன்ற; கலையும் சாறின;
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன;-
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே.
மங்கையர் இளநலம் மைந்தர் உண்ண - மாதர்களுடைய புதிய
இன்பத்தை ஆடவர் நுகர்கையில்; குங்குமம் உதிர்ந்தன - (மங்கையர்
மார்புக்) குங்குமக் கோலங்கள் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன -
கூந்தல்கள் அவிழ்ந்தன; சங்கு இனம் முரன்றன - (கையில்
அணிந்திருந்த) சங்கு வளையல்கள் ஆரவாரித்தன; கலையும் சாறின -
ஆடைகளும் நழுவின; சிலம்புகள் பொங்கின பூசல் இட்டன - காலில்
உள்ள சிலம்புகள் மிகுந்து ஒலி செய்தன.
ஒரு செயலுக்காக இத்தனை செயல்கள் நிகழ்ந்தன என
வியந்தவாறு. மங்கையர் இளநலம் மைந்தர் உண்ண - குங்குமம்
உதிர்ந்தன; கோதைகள் சோர்ந்தன; சங்கு இனம் முரன்றன; கலைகள்
நழுவின; சிலம்புகள் பொங்கின; பூசல் இட்டன எனக் கூட்டுக.
மைந்தர்கள் உண்பதற்காக மங்கையரிடத்தே இளமையும் நலமுமாகிய
பெருவிருந்து படைத்து வைக்கப்பட்டுள்ளமையறிந்து துய்த்து
மகிழ்ந்தனர் என்க. முதல் மூன்றடிகளிலும் ஒரு போர்க்களத்தின்
சூழலைச் சுட்டினார் கலவிப் போர் ஆதலின். 63
