உண்டாட்டுப் படலம் - 1103

bookmark

நாணுத் துறவுரைத்தல்

1103.

பொன் அருங் கலனும். தூசும்.
   புறத்து உள துறத்தல் வம்போ?
நல் நுதல் ஒருத்தி. தன்பால்
   அகத்து உள நாணும். நீத்தாள்;-
உன்ன அருந் துறவு பூண்ட
   உணர்வுடை ஒருவனேபோல்.
தன்னையும் துறக்கும் தன்மை
   காமத்தே தங்கிற்று அன்றே.
 
புறத்துள்  பொன் அரும்  கலனும் தூசும் துறத்தல் வம்போ? -
(உடலின்)  வெளியேயுள்ள   அணிகலன்களையும்  ஆடைகளையும் (ஒரு
மங்கை)  துறந்தாள்  (முன்பு)  புகன்றது (ஒரு)  புதுமையோ?; நல்நுதல்
ஒருத்தி - அழகிய நெற்றியினையுடையாள் ஆகிய  (இன்னும்)  ஒருத்தி;
தன்பால்   அகத்துள்  நாணும்  நீத்தாள்  - தன்னிடத்தே.  (பிரிதற்
கியலால் கிடந்த) உடலின் உள் உள்ள  நாணத்தையும் து றந்துவிட்டாள்;
உன்ன அருந்துறவு பூண்ட உணர்வுடை ஒருவனே போல் - நினைப்
பதற்கும்     அருமையான   துறவினைப்  பூண்ட மன உறுதிமிக்க ஒரு
துறவியைப்போல; தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று
அன்றே!  -  தான்  என்று  சொல்லத் தக்கதையும் துறந்து விடக்கூடிய
இயல்பு. காமத்தினிடத்தில் மட்டுமே தங்கியுள்ளதன்றோ?

கலனும்     தூசும்     அகற்றியபின்     வரும்     நாணுந்துறந்து
அவசமுற்றிருந்தாள். உயிரினும் சிறந்தது  பெண்மைக்கு  நாணம் (தொல்.
கல.   22)  ஆதலின்.   அதனைத்  துறத்தல்.   தன்னையே   துறத்தல்
ஆயிற்று.  காமக்  கணிச்சி   உடைக்கும்   நிறையென்னும்  நாணுத்தாழ்
வீழ்த்த கதவு” (திருக். 1251) - வேற்றுப் பொருள் வைப்பணி.        57