உண்டாட்டுப் படலம் - 1104
வெல்வார் யார்?
1104.
பொரு அரு மதனன் போல்வான்
ஒருவனும். பூவின்மேல் அத்
திருவினுக்கு உவமை சால்வாள்
ஒருத்தியும். சேக்கைப் போரில்
ஒருவருக்கு ஒருவர் தோலார்.
ஒத்தனர்; - ‘உயிரும் ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே’
என்ற போது யாவர் வெல்வார்?
பொரு அறு மதனன் போல்வான் ஒருவனும் - (அழகில் தனக்கு)
உவமை சொல்ல ஒருவனும் இல்லாத மன்மதனைப் போல் வான்
ஒருவனும்; பூவின் மேல் அத் திருவினுக்கு உவமை சால்வாள்
ஒருத்தியும் - (தாமரை) மலர் மேல் வாழும் மங்கையாகிய
திருமகளுக்கு உவமிக்கத் தகுதியுடையாள் ஒருத்தியும்; சேக்கைப்
போரில் - மஞ்சத்தில் நிகழ்ந்த கலவிப் போரிலே; ஒருவருக்கு ஒருவர்
தோலார் ஒத்தனர் - ஒருவருக்கு ஒருவர் பின்னடையாமல்
சமநிலையிலேயே (இன்பப் போர் புரிதலில்) இருந்தனர்; இருவரது
உயிரும் ஒன்றே உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வர்-
ஏன் எனில் இருவருக்கும் உயிரும் உணர்ச்சியும் ஒன்றேயாக
இருக்கையில் யார் வெல்ல இயலும்? (யார் தோற்க இயலும்)
உடல் அன்றி உயிர் ஆற்றலும் உணர்வாற்றலுமே வெற்றி
தோல்வியை நிர்ணயிப்பன; அவை இரண்டும் இவ்விருவர்க்கும் சமம்
ஆதலின். கலவிப் போரில் ஒருவர்க்கொருவர் தோற்காமல் போர்
புரிந்தனர். ஒருவரும் தோற்க இயலாத போது ஒருவரும் வெற்றி
பெறலும் இயலாது என்பார். “ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர்”
என்றும். காரணம். “இருவரது உயிரும் ஒன்றே; உணர்வும் ஒன்றே
என்றபோது யாவர் வெல்வார்?” என்றார். 58
