இல்லற ஒழுக்கம்

bookmark

இல்லற ஒழுக்கம் சகர மாமன்னன் அவுர்வ முனிவரை நோக்கி சுவாமி இல்லறத்தான் கடைபிடிக்க வேண்டிய நல்ல ஒழுக்கங்களை பற்றி நான் அறிய விரும்புகிறேன். எத்தகைய நல்ல ஒழுக்கங்களில் ஒரு மனிதன் இம்மையிலும், மறுமையிலும் துன்பமடைய மாட்டானோ அத்தகையவற்றை எனக்கு சொல்லியருள வேண்டும் என்றான். வேந்தரே! இல்லற வாழ்க்கையில் நல்ல ஒழுக்க முறையை சொல்கிறேன் கேட்பாயாக. நல்லொழுக்கமுடையவனால் இம்மை, மறுமைகள் சாதிக்கப்படும். சாதுக்கள் என்போர் தோஷம் இல்லாதவர்கள். அவர்களுடைய ஒழுக்கமே சதாசாரம் எனப்படும். இவற்றை சொன்னவரும், செய்தவரும் சப்த ரிஷிகளும், மனுக்களும், பிரஜாபதிகளுமாவர். புத்திசாலியாக இருக்கக்கூடியவர் பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து எழ வேண்டும். மனதில் தருமத்தையும், அதனோடு தொடர்பு கொண்ட அதர்மம் இல்லாத அர்த்தத்தையும் சிந்திக்க வேண்டும். இந்த இரண்டு விதமான சிந்தனைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும், விரோதத்தையும் ஏற்படுத்தாத காமத்தை சிந்திக்கலாம். இவ்விதமான சிந்தித்து செயல்படுவதால் இம்மை, மறுமையில் ஏற்படக்கூடிய பயன்கள் யாவும் கெடாமல் இருக்கும். தர்மத்திற்கு எதிரான அர்த்தம் கொண்ட காமங்களை விட்டுவிட வேண்டும். நாம் செய்யக்கூடிய செயலானது தர்மமாக இருந்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் பின்பு சுகத்தை உண்டாக்காததாயும், லோக விரோதமாயும் இருக்குமானால் அதை விட்டுவிட வேண்டும். இவ்விதமாக சிந்தித்து எழுந்த பிறகு நைருதி மூலையில் அம்பு பாயுமளவு தூரத்துக்கு அப்பால் சென்று, ஜலமலாதிகளை கழிக்க வேண்டும். வீட்டிலேயே கால் கழுவுதல் முதலிய அசுத்தமான காரியங்களை செய்யக்கூடாது. தனது நிழல், மரத்து நிழல், பசு, சூரியன், அக்னி, காற்று, பெரியோர் ஆகியவைகளுக்கு எதிராக இருந்து மலஜலங் கழிக்கலாகாது. உழுத நிலத்திலும், பயிர்களின் நடுவிலும், பசுக்கள் இருக்குமிடத்திலும், ஜன சமூகத்திலும், வழியிலும், ஆற்றங்கரைகளிலும், தண்ணீரிலும், மயானத்திலும் மலஜலங் கழிக்கலாகாது. மலஜலங் கழிக்குமிடங்களில் நீண்ட நேரம் இல்லாமல் பேச்சுக்கள் ஏதும் பேசாமல் கடனுக்கு உண்டான காரியம் நிறைவுபெற்றவுடன் செத்தைகளால் (செத்தை ஸ்ரீ உலர்ந்த சருகு, குப்பை முதலியன) அந்த இடத்தை மறைத்துவிட்டு வரவேண்டும். பிறகு புற்றுமண், பெருச்சாளி தோண்டிய மண், தண்ணீருக்குள் இருக்கிற மண், சவுசஞ் செய்து மிகுந்த மண் (சவுசம் ஸ்ரீ சுத்தம் செய்தல்), அசுத்த பூமியிலிருக்கும் மண், மிகச்சிறிய பூச்சிகளோடு கூடிய மண், கலப்பையால் கிளப்பப்பட்ட புழுதி மண் ஆகியவற்றை விட்டு வேறு வகையான மண்ணைக் கொண்டு வந்து முதலாவதாக அசுத்தத்தின் நாற்றமும், பற்றும் போகும்படி சவுசம் செய்ய வேண்டும். பிறகு சுத்திக்காக இலிங்கத்தில் (இலிங்கம் ஸ்ரீ ஆண்குறி) ஒருமுறையும், அபானத்தில் (அபானம் ஸ்ரீ மலவாய், ஆசனவாய்) மூன்று முறையும் இடக்கையில் பத்துத் தரமும், மறுபடியும் இரண்டு கைகளையும் ஏழு முறை மண்ணிட்டு சுத்தமான நீரினால் கழுவிக்கொண்டு சுத்தமாகவும், துர்நாற்றம் அற்றவராவும், குமிழி கிளம்பாததாயுமுள்ள ஜலத்தினால் மும்முறை ஆசமனஞ் செய்து, தலையைத் துடைத்து, சிரசில் புரோஷித்தல், இருதயம் முதலான அங்கங்களை தொடுதல் முதலிய விதிகளை முறைப்படிச் செய்து, பிறகு அகமர்ஷண சூத்த முதலான மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே நீராடி, சந்தியா வந்தனம் முதலிய கிரியைகளை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். பிறகு தலை ஆற்றி, அலங்கரித்தல் முதலிய மங்களங்களை செய்து கொண்டு தனக்கு விதித்திருக்கிற வகையால் திரவிய சம்பாதனை செய்தல் வேண்டும். சோம ஸம்ஸ்தைகள், ஹவிஸ் ஸம்ஸ்தைகள், பாக ஸம்ஸ்தைகள் என்ற யாகங்களெல்லாம் திரவியத்தை கொண்டே செய்ய வேண்டியவைகள் ஆகையால், வேதம் அறிந்தவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வாழ்வதற்கு உண்டான தனத்தை நியாயமான முறையில் முயற்சி செய்து சம்பாதிக்க வேண்டும். நடுப்பகலானவுடன் மறுபடியும் நீராட வேண்டும். எப்போதும் நதிகள், தடாகங்கள் இவற்றின் நன்னீரிலே நீராட வேண்டும். இவைகள் கிடைக்காமல் போனால், கிணற்று நீரை எடுத்துக் கொண்டாகிலும் அதற்கும் சக்தியில்லாமற் போனால், ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்தாகிலும் நீராட வேண்டும். இப்படி குளித்த பிறகு சுத்தமாக இருக்கக்கூடிய வஸ்திரங்களை அணிந்து தேவதைகளுக்கும், ரிஷிகளுக்கும், பிதுர்க்களுக்கும் அவரவர் தீர்த்தத்தினாலே விதிப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். பிதுர்க்கள், பிதாமகர், பிரபிதாமகர், மாதாமகர், மாத்ரு பிதாமகர், மாத்ரு பிரபிதாமகர் ஆகியோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். காமியமாய் மாதா, மாதாமகி அவர்களுடைய தாய், குருபத்தினி, குரு, அம்மான் முதலானோர், இஷ்டமித்திரன், அரசன் இவர்களுக்கும் ப்ரீதியுண்டாகும்படி தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் செய்கின்ற பொழுது ஜெபிக்க வேண்டியது தேவாசுர, யக்ஷ, நாககந்தருவ, ராக்ஷச, பைசாச, குஹ்யக, சித்த, கூச்மாண்ட, தருக்களும் ஜலம், பூமி, காற்று இவைகளைப் பற்றிய ஜந்துக்களும் என்னால் கொடுக்கப்படுகின்ற இந்தத் தண்ணீரால் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைய வேண்டும். நரகங்களில் பல யாதனைகளில் (யாதனை ஸ்ரீ வேதனை, துக்கம், நரகவேதனை) இருப்பவர்களுடைய சோர்வுகள் அனைத்தும் நீங்குவதற்காக இந்த தண்ணீரை நான் மனதார விடுகிறேன். எனக்கு உறவினராக இருப்பவர்களுக்கும், உறவினராகாதாருக்கும், ஜென்மாந்தரத்தில் என்னிடத்தில் பந்துக்களாக இருந்தவர்களுக்கும், என்னிடத்தில் பழகியவருக்கும், என்னிடத்தில் இருந்து தண்ணீரை வேண்டுவோருக்கும் எங்கேயாவது பசி, தாகங்களால் வருந்தியிருப்போருக்கும் நான் விடுகின்ற இந்த எள்ளுந் தண்ணீரும் திருப்தியை உண்டாக்கக் கடவன என்று இவ்விதமாக சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். அரசனே! இந்த தர்ப்பணத்தை மனப்பூர்வமாக சிரத்தையோடு மேற்கொள்ளும் பொழுது அதிக அளவிலான புண்ணியம் என்பது செய்வோருக்கு கிடைக்கும். இந்த தர்ப்பணத்திற்கு காமியத் தர்ப்பணம் என்று பெயர். இதனால் சகல லோகத்துக்கும் பிரீதியுண்டாகும். காமிய தர்ப்பணத்தை செய்த பிறகு மாத்தியான்னிகம் செய்து, வேதங்களாலே பிரகாசித்துக் கொண்டு உலகப் படைப்பு கர்த்தாவாய், மகாசுத்தியுள்ளவராய், கர்மசாக்ஷியாய், ஸ்ரீவிஷ்ணு தேஜோமயராய் விளங்கும் சூரிய பகவானுக்கு நமஸ்காரம் என்று சொல்லியவண்ணம் சூரியார்க்கியம் விட வேண்டும். பிறகு தன் வீட்டிலிருக்கும் தேவதா பிம்பத்துக்குத் திருமஞ்சனம், திருமாலை, தூபதீபாதிகள், தளிகைகள் முதலிய உபசாரங்களினால் ஆராதனை செய்ய வேண்டும். பிறகு, பிரமாகுதி முதலானவை சுவ தேவஞ்செய்து, கிரகங்கள், காசியபர், அனுமதி இவர்களுக்கு அன்னபலியிட்டு (கோயில் பலி பூஜைக்காக எழுந்தருளப்பண்ணும் தெய்வத் திருமேனி) அதன் மீதியை பிருத்துவீபர்ச் சனியர்களுக்காக அவுபாசன சமீபத்திலிட வேண்டும். பிறகு, வீட்டின் வாசலில் தாதாவிதாதாக்களுக்கும் (பெரியோர்கள்), நடுவில் பிரம்மாவுக்கும், நான்கு திசைகளில் இந்திரன், யமன், வருணன், சந்திரன் என்ற நான்கு திக்குத் தேவதைகளுக்கும், வாயுவுக்கும், பிரம்மா, அந்தரிஷம், சூரியன் இவர்களுக்கும் வடகிழக்கில் தன்வந்தரிக்கும் அன்ன பலியிட வேண்டும். இவ்விதமாக சைசுவதேவ பூதபலி கருமத்தை செய்து விசுவதேவர், பூதங்கள், விசுவபதி, பிதுர்க்கள், யக்ஷர், இவர்களை எண்ணிப் பலியிட்டு, பிறகு அன்னத்தை சுத்தமான பூமியிலே சகல பூதங்களுக்காகப் போட்டு தேவதைகள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், சித்தர், யக்ஷர், நாசர், தைத்தியர், பிரேதங்கள், பிசாசுகள், மரங்கள், எறும்புகள், பூச்சிகள், புழுக்கள் முதலிய சகல ஜந்துக்களுக்கும் யார் என்னாலே கொடுக்கப்படும். அன்னத்தை இச்சிக்கிறார்களோ அவர்களுக்கும் யாருக்கும் தாய் தந்தை சுற்றத்தார் யாவரும் இல்லாமலும் அன்னங்கிடைக்காது இருக்கிறார்களோ அவர்களுக்கும் இதோ இங்கு நான் அன்னத்தை கொடுத்தேன். இதனால் அவர்கள் திருப்தியடைந்து சுகமாக இருக்கக்கடவர். சகல பூதங்களும் நானும் இந்த அன்னமும் எல்லாம் ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறில்லாமையால் சகல பூதங்களுக்கு சரீரமான இந்த அன்னத்தை அவர்களது நன்மைகளுக்காகவும் இங்கே இடுகிறேன். தேவகணங்கள் எட்டு வகையினருக்கும் ஒருவிதமான மனுஷ்ய கணமும், ஐந்து விதமான திரியக்குக் கணமுமாகிய பதினான்கு பூதகணங்களிலும் சேர்ந்த சகல பிராணிகளுக்கும் திருப்தி ஏற்பட இந்த அன்னத்தை இங்கு விடுகிறேன். இதனால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடையக் கடவர் என்று சொல்லிப் பூமியில் அன்னத்தைப் போட வேண்டும். இல்லறத்தானே எல்லோருக்கும் ஆதாரமானவன். நாய், சண்டாளன், பறவைகள் இவைகளுக்காகவும், பதிதர்களினாலும் (பதிதன் : ஒழுக்கங்களை தவறியவன், விதிமுறைகளை மீறியவன்) புத்திரர் இல்லாதவர்கள் யாரோ அவர்களுக்காகவும், நிலத்தில் அன்னத்தை போட வேண்டும். இவ்விதம் செய்த பின்பு கால் நாழிகையாவது அதிதிகளை (அதிதி : தேவர்களின் தாய், தேவமாதா) எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். தன்னை காணவந்த அதிதிகளை நல்லமுறையில், நல்ல கருத்துக்களும், சொற்களும் கொண்டு வரவேற்று, அவர்கள் அமர்வதற்கு ஆசனங்கொடுத்து உபசரித்து உட்காரவைத்து அன்போடும், பண்போடும், அன்னமிடுவதனாலும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்முகத்தோடு பிரியமாக பதில் எடுத்து உரைப்பதாலும் அவர்கள் போகும் போது அவர்கள் பின்சென்று அவர்களை வழியனுப்புவதனாலும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். குலமும், பெயரும் தெரியாதவனாக வேறிடத்திலிருந்து வந்தவனாக, நிலையாக ஓரூரிலே வாசஞ்செய்யாதவனாக இருக்கிற அதிதியை நன்றாக பூஜிக்க வேண்டும். அன்னிய தேசத்திலிருந்து வந்தவனாகவும், தனக்கு யாதொரு உறவும் இல்லாதவனாகவும், தரித்திரனாகவும் இருந்து போஜனம் செய்ய வந்த அதிதியை பூஜித்து போஜனம் செய்வித்து விடாமல் தான் மட்டுமே சாப்பிடுகிறவன் நரகத்தை அடைவான். இவ்விதமாக வந்த அதிதியை குலம், கோத்திரம், சாகாதிகளை விசாரிக்காமல் சதுர்முகப் பிரம்மனைப் போல பாவித்து பூஜிக்க வேண்டும். மேலும் சுதேசியாய் பஞ்சயக்ஞ பராயணனாய், குலகோத்திர ஆசாரங்களிலே தனக்கு நன்றாய் தெரிந்தவனாக இருக்கிற ஒருவனையாகிலும் பிதுருக்களுக்காகப் போஜனம் செய்விக்க வேண்டும். இது தவிர தான் உண்டு மிகுதியான அன்னத்தை தனியே எடுத்து வைத்திருந்து அதை நன்றாய் வேதமோதியிருக்கிற ஒருவருக்கு கொடுக்க வேண்டும். சந்நியாசி, பிரம்மச்சாரிகளுக்கும் மும்மூன்று கவளங்களுக்கும் குறையாமல் கொடுக்க வேண்டும். விபவமிருந்தால் (விபவம் : பெருமை) தடையில்லாமல் எவ்வளவாகிலும் யாவருக்கும் வேண்டியமட்டும் கொடுக்கலாம். இவ்விதமாக முன் சொன்னவர்கள் உட்பட நான்கு வகைப்பட்ட அதிதிகளை பூஜிப்பவன் அதிக கடினமான பாவங்களிலிருந்தும் நீங்குவான். அதிதியானவன் எவன் ஒருவன் வீட்டுக்கு வந்து தனது ஆசை அனைத்தையும் முறிந்து திரும்பிச் செல்கிறானோ அந்தக் கிரஹஸ்தனுடைய புண்ணியங்களையெல்லாம் அவன் கொண்டு செல்கிறான். தாதவும், பிரம்மனும், இந்திரனும், வசுக்களும், அக்னியும், சூரியனும் ஆகிய இவர்கள் அதிதியினிடத்தில் பிரவேசித்து அவன் கொடுக்கும் அன்னத்தைப் புசிக்கிறார்கள். ஆகையால் அதிதி பூஜை செய்ய முயற்சிக்க வேண்டும். எவன் ஒருவன் தன்னை காண வந்திருக்கும் விருந்தினனை விட்டு தான் மட்டும் உண்கிறானோ அவன் அன்னத்தை புசிக்காமல் பாவத்தை புசிப்பவனாவான். பின்பு புக்ககம் (கணவன் வீடு) செல்லாத கன்னியரையும், கர்ப்பவதியான பெண்களையும், வயதில் மூத்தவர்களையும், பாலகர்களையும் முன்னதாக உணவு உண்ணும் படி செய்து பிறகுதான் இல்லறத்தான் உணவு உண்ண வேண்டும். மேற்கூறியவர்களில் இவர்கள் யாரும் உண்ணாமலிருக்க தான் மட்டும், முன்னதாக உண்பவன் இவ்வுலகில் பாவத்தையே சாப்பிட்டு மரணமடைந்த பின் நரகத்திற்கு சென்று சிலேஷ்மத்தை உண்பான். நீராடாமல், ஜெபம் செய்யாமல், வைசுவதேவாதி சுத்தியில்லாமல், பாலகர் முதலானோருக்கு முன்னதாக புசிப்பவன், அதிதிகளுக்குக் கொடாமல் புசிப்பவன் விஷத்தைப் புசிக்கிறான்.