இல்துமிஷின் சூழ்ச்சி பலித்தது

bookmark


சில நாட்கள் கடந்த மாத்திரத்தில் பாக்தாத் நகரத்தையும் அடைந்தான் அவன் (இல்துமிஷ்). முன்பு சம்சுதீன் காட்டிய வழியில் நடந்து அலாவுதீனின் வீட்டையும் கண்டு பிடித்து விட்டான் அவன். அத்துடன் வெளியில் நின்று இருந்த அலாவுதீனிடம் தன்னை அவனது சிற்றப்பா என்று கூறி நம்ப வைத்து அதில் வெற்றியும் பெற்றான்.

வெகுளியான அலாவதீனும் தனது சிற்றப்பா அப்துல்லா தான் வந்து உள்ளதாக நம்பினான். அதனால் பாசம் கண்களை மறைக்க, மாறுவேடத்தில் அங்கு வந்திருந்த அந்த துஷ்ட மந்திரவாதியை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான் அலாவுதீன். அத்துடன் அவனைத் தனது தாயிடமும் அறிமுகம் செய்து வைத்தான். இறந்து விட்டதாகக் கருதப்பட்ட தனது கணவனின் தம்பி அப்துல்லா உயிருடன் நின்று கொண்டு இருப்பதைக் கண்ட அலாவுதீனின் தாய் ஆச்சர்யத்தில் திக்கு முக்காடிப் போனாள்.

ஏன்? தனது பாச வார்த்தைகளால் அவளையும் நம்பவைத்தான் அந்த மாறுவேட மந்திரவாதி. அத்துடன் தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களையும் கூட அலாவுதீனிடம் கொடுத்து அவனை மகிழ்வித்தான் அந்த துஷ்ட மந்திரவாதி.

அலாவுதீனின் தாயாரிடம் தான் ஒரு பெரிய வியாபாரியாக பாரசீகத்தில் வாழ்ந்து வருவதாகவும், தான் அலாவுதீனை அவனது தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ஒரு பொறுப்புள்ள ஆளாக மாற்றத் துடிப்பதாகவும் கூறினான் அப்துல்லா ரூபத்தில் இருந்த இல்துமிஷ். அதனை உண்மை என்றே நம்பினர் அலாவுதீனும் அவனது தாயாரும்.

இப்படியாக சில நாட்கள் இல்துமிஷ் அலாவுதீனின் இல்லத்தில் தங்கினான். அங்கு இருக்கும் அலாவதீனுக்கும் அவனது தாய்க்கும் அவன் பெயரில் முமுவதுமாக நம்பிக்கை வரும்படியாக நடந்து கொண்டான். சில நாட்கள் சென்ற பிறகு அலாவுதீனை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புவதாகவும். அவனை ஒரு ஆளாக்கி தன்னைப் போலவே பெரிய வணிகனாக ஆக்கப் போவதாகவும் அலாவுதீனின் தாயாரிடம் கூறினான் அந்தப் பொல்லாத மந்திரவாதி. அலாவுதீனின் தாயாரும் தனது மகன் விளையாட்டுத் தனத்தை விட்டு விட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என விரும்பினாள். அதனால் அலாவுதீனை, அப்துல்லாவுடன் (இல்துமிஷ்) அனுப்ப ஒரு வழியாக ஒப்புக் கொண்டாள்.

அதன்படி அலாவுதீனும் வந்திருப்பது யார் என்று தெரியாமல் புறப்படத் தயார் ஆனான்.

மறுபுறம் அப்துல்லா ரூபத்தில் வந்திருந்த அந்த மந்திரவாதி அலாவுதீனை அழைத்துக் கொண்டு புறப்படத் தொடங்கினான். அப்போது அலாவுதீனின் தாயார் அவனை முத்தமிட்டு வழி அனுப்பி வைத்தாள்.