இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள்

bookmark

வாழ்க்கை வரலாறு

இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கர் அவர்களின் மகளாவார். பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது. இராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது ‘மங்கம்மாள் சத்திரம்’ என இன்றும் அழைக்கப்படுகிறது. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை ‘மங்கம்மாள் சாலை’ என அழைக்கப்படுகிறது. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார். தொழில் வளர்ச்சி, மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார். தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகும். இதிலுள்ள தமுக்கம் மைதானத்தில் தான் அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்றன. மிகத்திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாளால் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே அவர் சிறையிலிடப்பட்டார். இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று இராணி மங்கம்மாள் 1706- ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.