ஆற்றுப் படலம் - 20
மழைவெள்ளம் கடலணை கண்ட கவிவெள்ளம் ஒத்தமை
வானரக் கூட்டம்: வெள்ளம்
20.
மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்,
அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீக்கம் - அந் நீத்தமே.
மலை எடுத்து - மலைகளைப் பெயர்த்துக் கொண்டும்; மரங்கள்
பறித்து - மரங்களை வேருடன் பறித்துக் கொண்டும்; மாடு-பக்கங்களில்
உள்ள; இலை முதல் பொருள்-இலை முதலிய பொருள்களாகிய;
யாவையும் ஏந்தலான்-எல்லாவற்றையும் ஏந்தி வருவதால்; அலை கடல்
தலை-அலைகளையுடைய கடலிடத்தே; அன்று-இராமபிரான் கடலைக்
கடக்க நேர்ந்த அந்தக் காலத்தில்; அணை வேண்டிய- அணை கட்ட
விரும்பிய: நிலையுடைக் கவி நீத்தம்- (இராமபிரான் திருப்பணியிலே)
நிலைபேறுடைய வானரப் பெருங்கூட்டத்தைப் போலவே; அந்
நீத்தமே- அந்தச் சரயுவின் வெள்ளம் (விளங்கியது)
தலை ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தது. வேண்டுதல்;
விரும்புதல்.
அணை வேண்டுதல் என்பது குரங்குச் சேனைக்குச் செல்லும்போது
அணை கட்ட விரும்பியதையும், ஆற்று வெள்ளத்துக்குச்
செல்லும்போது அணை கட்ட வேண்டிய நிலையையும் பொருத்திக்
காண்க. இலை முதல் பொருள்; இலை, முதலானவை ஆற்று
வெள்ளத்தில் ஈர்த்து வரப்படுபவன, குரங்குகளுக்கு உணவாவன. 9
