ஆற்றுப் படலம் - 21
வெள்ளம் கட்குடியரை ஒத்தமை
குடிகாரர் :வெள்ளம்
21.
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப, வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றியே,
தேக்கு எறிந்து வருதலின், - தீம் புனல் -
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே.
தீம்புனல் - இனிய நீர்ப்பெருக்கு; ஈக்கள் வண்டொடு
மொய்ப்ப-ஈக்கள் வண்டுகளோடு சேர்ந்து மொய்த்திட; வரம்பு இகந்து
- அணை கடந்து ஒழுகலாற்று எல்லையை மீறி; ஊக்கம் மிகுந்து-
எழுச்சி பெருகி (உற்சாகம் மிகுந்து); உள் தெளிவு இன்றியே -
உள்ளிடத்து (உள்ளத்திலே) தெளிவே இல்லாமல்; தேக்கு எறிந்து
வருதலின்-தேக்கு மரங்களை மோதி இழுத்து வருதலால் / ஏப்பமிட்டு
வருவதால்; தேன் நுகர் மாக்களை மானும்.
ஈக்களும் வண்டுகளும் மொய்ப்பது குடிகாரரிடத்து எழும் கள்
நாற்றம் காரணமாக, ஆற்று வெள்ளம் கரை கடப்பதையும், குடிகாரர்
ஒழுக்க எல்லையைக் கடப்பதையும் ‘வரம்பு இகந்த’ என்ற தொடர்
சுட்டிற்று. ஊக்கம்: வெள்ளத்துக்கு வேகமும் குடியருக்கு
எழுச்சியையும் குறித்தது. உள் தெளிவு இன்மை; வெள்ளத்தின்
உட்புறம் கலங்கியிருப்பது; மனத்திலும் அறிவிலும் தெளிவின்மை
குடியரிடம் இருப்பது. தேக்கு மரங்களை வீழ்த்தி இருத்திவருவது
வெள்ளம்; ஏப்பமிட்டுக் கொண்டு வருவது. தேக்கெறிதல். தேன்-கள்.
வாக்கு தேன்-வினைத்தொகை.
‘மஞ்சுலாம் சோலை’ என்று தொடங்கும் பெரிய திருமொழிப்
பாசுரத்தின் வியாக்கியானத்தில் இப்பாடலின் முதலடி
பெரியவாச்சான்பிள்ளையால் எடுத்தாளப்பட்டது. 10
