ஆற்றுப் படலம் - 12

bookmark

நுவல்பொருள் உரைத்தல்

12.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
 

ஆக அலம்புரி-குற்றத்தை  மிகுதியாகச்  செய்கின்ற; ஐம்பொறி
வாளியும்- ஐந்து   பொறிகளாகிய  அம்புகளும்;  காசு    அலம்பு
முலையவர்- மணியாரங்கள்  ஒலிக்கின்ற  மார்பகங்களை   உடைய
பெண்களின்; கண்   எனும்    பூசல்   அம்பும் -  கண்களாகிய
போர்த்தொழில் வல்ல    அம்புகளும்;   நெறியின்புறம்   செலாக்
கோசலம் -ஒழுக்க நெறிக்கு  அப்பால் செல்லாத கோசல  நாட்டை;
புனை ஆற்று அணி  கூறுவாம்  -   அழகு   செய்கின்ற   (சரயு)
ஆற்றின்  அழகினைக் கூறுவோம்.

ஐம்பொறிகளும்  மாதர் கண்களும் பொதுவாகஒழுக்க நெறிகளை மீறி
நடக்கத்   தூண்டுவன;   கோசல    நாட்டின்  ஆட்சியிலே  செம்மை
இருப்பதால்  ஐம்பொறி  வாளியும்   மாதரார் கண்களும் நெறியின் புறம்
செல்லாதனவாயின.   ’நன்னடை   நல்கல் வேந்தர்க்குக் கடனே’ (புறநா.
312)  என்ற வாக்கு  நாட்டவரின்  செம்மைக்கு ஆட்சியே காரணம் என
அறிவுறுத்துதல் காண்க.

இலக்கு  நோக்கி விரைந்து பாய்தலின் ஐம்பொறிகளை வாளி (அம்பு)
என்றார்.  ஐம்பொறி வாளி, கண் எனும் அம்பும் இலக்குப்   பிழையாது
விரைந்து பாயும் இயல்பினது; இதுவும் உருவகமே.

மக்களின்     நல்லொழுக்கத்துக்கும்   தீயவொழுக்கத்துக்கும் அவர்
வாழும்   நிலத்தின்  தன்மை  காரணமாகும்    என்பர்;  கோசலத்தின்
நீர்/நிலவளமே அந்நாட்டு மக்களின் ஒழுக்க  மேம்பாட்டுக்குக் காரணம்
என்பது குறிப்பு.                                            1