ஆற்றுப் படலம் - 13
மேகம் கடலிற்படிந்து நீருண்டு மீண்டமை
13.
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
நீறு அணிந்த - திருநீற்றைத் திருமேனி முழுதும் பூசிய;
கடவுள்-சிவபிரானின்: நிறத்த- (வெள்ளை) நிறத்தை உடையவனாகிய;
வான்-மேகங்கள்; ஆறு அணிந்து சென்று-போகும் வழிகளைஅழகு
செய்து கொண்டு போய்; ஆர்கலி-கடல்நீரை; மேய்ந்து-குடித்து; அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்-அகிற் குழம்பாகிய
சேற்றினால் அழகு கொண்ட மார்பகத்தாளாகிய இலக்குமியால்
ஏற்பட்ட; வீறு அணிந்தவன் மேனியின்-தனிச் சிறப்புடையதிருமாலின்
(கரிய) நிறம் கொண்டு; மீண்டது-திரும்பின.
கடலை நோக்கிச் சென்றபோது நீறு பூசிய சிவன்போல
வெண்ணிறம் கொண்டு, கடலில் நீர் கொண்டு திரும்பும்போது
திருமகளால் சீர்பெறும் திருமால் போலக் கார்நிறம் கொண்டு
மேகங்கள் இயங்கினவாம். கார்மேகத்தின் நிறத்துக்குத் திருமால் நிறம்
உவமையாவதை ‘ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து’ என்ற
நாச்சியார் வாக்காலும் அறியலாம். உவமைப் பொருத்து காண்க.
பேராசை நிறைந்த தன்மை பற்றிக் கடலை ஆர்கலி (ஆர்: நிறைந்த,
கலி: ஒலி) என்றார்; வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை. வான் / ஆகுபெயர். 2
