அலாவுதீன் கொடிய இல்துமிஷ்ஷை கொலை செய்தல்

bookmark


அந்தப் பொல்லாத மந்திரவாதியின் பராமரிப்பில் அந்த மாளிகை இருந்தாலும் இளவரசியின் பழைய பணிப் பெண்கள் அனைவரும் அவளுடனே கூட அந்த மாளிகையில் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் இளவரசியிடம் மிகுந்த பாசத்துடன் நடந்து கொண்டனர். அது இளவரசிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அலாவுதீன் இளவரசியின் அந்தப்புர ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து இருந்ததைக் கண்ட இளவரசியின் பணிப் பெண் ஒருத்தி ஓடிச் சென்று இளவரசியிடம் விஷயத்தைக் கூறினாள். உடனே அதைக் கேட்ட இளவரசி ஓடி வந்து அலாவுதீனைப் பார்த்தாள். அலாவுதீனும் தனது ஆருயிர் மனைவியைக் கண்டான். இருவரும் சிறிது நேரம் ஆனந்தக் கண்ணீரை வடித்தனர். இளவரசிக்கும் மந்திரவாதியிடம் இருந்து இனி தான் தப்பி விடலாம் என்ற எண்ணம் பிறந்தது.

அலாவுதீன் தனது ஆருயிர் மனைவியிடம் கொடிய மந்திரவாதியைப் பற்றி விசாரித்தான். அதனைக் கேட்ட இளவரசி, "அந்தக் கொடியவன் இங்கு இல்லை. அவன் வருவதற்கு நேரமாகும். தவிர அந்த துஷ்டன் ஒவ்வொரு நாள் காலையிலும் வந்து என்னை பார்த்து விட்டுப் போகிறான். அத்துடன் நான் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறான். எனக்குப் பத்து நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளான். அதற்குள் நான் அவனைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவன் என்னைக் கட்டாயமாக மணந்து கொள்ளப் போவதாகக் கூறுகிறான். தினம், தினம் என்னிடம் வந்து மிக மோசமான வார்த்தைகளை பேசி மகிழ்கிறான்" என்றெல்லாம் சொல்லி அழுதாள்.

அதனைக் கேட்ட அலாவுதீன் தனது மனைவியிடம் அந்த அற்புத விளக்கைப் பற்றிக் கூறினான். அவளும் தான் செய்த தவறை உணர்ந்தவளாய் அலாவுதீனிடம் மன்னிப்பு வேண்டினாள். அலாவுதீனும் அவளை அன்புடன் மன்னித்தான். பிறகு தனது ஆருயிர் மனைவியிடம், "கண்ணே! அந்த துஷ்ட மந்திரவாதியின் கைகளில் அற்புத விளக்கு இருக்கும் வரையில் நாம் அவனை எதுவும் செய்ய முடியாது. அதனை நாம் கைப்பற்றி ஆக வேண்டும். அது சரி, அவன் அந்த அபூர்வ விளக்கை எங்கு வைத்து உள்ளான்? உனக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?" என்று கேட்டான்.

"தெரியும் அன்பே! அந்த துஷ்டன் அந்த அற்புத விளக்கை எப்போதுமே தன்னுடைய சட்டைப் பையில் தான் வைத்து இருப்பான். அதாவது சட்டையின் உட்பக்கம் உள்ள பையில் தான் அவன் வைத்து இருக்கிறான்" என்றாள் இளவரசி.

உடனே அலாவுதீனின் மனதில் வேகமாக ஒரு அற்புதத் திட்டம் தயார் ஆனது. அதன்படித் தனது கையில் இருந்த மோதிரத்தை உரசினான். வழக்கம் போல அதில் இருந்து சம்சுதீன் பூதம் வெளிவந்தது. அதைக் கண்ட இளவரசி சற்றே அதிர்ந்து போனாள். எனினும் அலாவுதீன் அவளைத் தேற்றி, "இதுவும் நமக்கு வேண்டிய பூதம் தான்" என்றான். அதைக் கேட்டு இளவரசி வியந்து போனாள். அத்துடன் இனி தனது மனைவியிடம் எதையும் மறைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தான் அலாவுதீன்.

பிறகு சம்சுதீனிடம்,"எனக்கு உடனே விவசாயி போன்ற உடையையும் உருவ அமைப்பையும் கொடு. மேலும் உடனே எனக்கு "பங்க" என்ற போதைப் பொருளும் வேண்டும்" என்று கேட்டான்.

அதன் படியே சம்சுதீன் பூதம் அலாவுதீன் கேட்ட அனைத்தையுமே கொண்டு வந்து கொடுத்தது. பிறகு தனது மனைவியிடம் பூதம் கொடுத்த "பங்க" என்ற போதைப் பொருளைக் கொடுத்தான் அலாவுதீன். அத்துடன் அவளைப் பார்த்து, "அன்பே நான் சொல்வதை கவனமாகக் கேள். நான் இந்த விவசாயி உடையில் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் இருப்பேன். ஒருவேளை அந்த துஷ்ட மந்திரவாதி என்னை தூரத்தில் இருந்து கண்டாலுமே கூட உண்மையில் ஒரு விவாசாயி தான் நிற்கிறான் என்று நினைப்பான். மறுபுறம் நீ செய்ய வேண்டியது எல்லாம் உன்னிடம் உள்ள நல்ல உடைகளில் ஒன்றை அணிந்து கொண்டு அவனிடம் அன்பு கொண்டவள் போல நடி. அவன் உனது நடிப்பை உண்மை என்றே நம்ப வேண்டும். அந்த அளவுக்கு நீ அவனிடம் நடிக்க வேண்டும். பிறகு அவன் அசந்து இருக்கும் நேரமாகப் பார்த்து மது வகைகளை அவனுக்கு நீ பரிமாற வேண்டும். அத்துடன் அந்த மதுவில் நீ இந்த "பங்க" என்ற போதைப் பொருளையும் அவனுக்குத் தெரியாமல் கலந்து விட வேண்டும். அந்த மந்திரவாதி மயங்கிப் போகும் அளவுக்கு நீ அவனைக் கொண்டு வர வேண்டும். அவன் மயங்கியவுடன் உனது பணிப் பெண்கள் மூலமாக நீ எனக்குத் தகவல் தர வேண்டும். நான் உடனே வந்து ஆக வேண்டிய அனைத்தையும் கவனித்துக் கொள்வேன்" என்றான்.

அலாவுதீனின் மேற்கண்ட வார்த்தைகளைக் கேட்ட இளவரசி அது தான் சரியான வழி என்ற முடிவுக்கு வந்தாள். பிறகு அன்புடன் அலாவுதீனுக்கு சாப்பிட உணவுப் பதார்த்தங்களை ரகசியமாகக் கொண்டு வந்து கொடுத்தாள். பசியுடன் இருந்த அலாவுதீனுக்கு அந்த உணவு வகைகள் யாவும் தேவாமிருதமாக இருந்தது. அதனை அவன் உண்டு மகிழ்ந்தான். பிறகு மெல்ல தான் முன்பு சொன்ன திட்டத்தின் படி அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்றான். அங்கு இளவரசியின் நல்ல செய்திக்காக காத்துக் கொண்டு இருந்தான்.

மறுபுறம் இளவரசி தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டாள். பின்னர் வாசனைப் பொருட்களை தனது உடல் எங்கும் பூசிக் கொண்டாள். அத்துடன் மந்திரவாதியை மயக்கத்தில் ஆழ்த்த தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணிடம் "பங்க" என்ற அந்தப் போதைப் பொருளை கொடுத்து அதனை என்ன செய்ய வேண்டும், எப்படிக் கலக்க வேண்டும் என்பதை எல்லாம் கூறித் தயாராக வைத்து இருந்தாள். அதே சமயத்தில் வழக்கம் போல இளவரசியைக் கண்டு ஆசை வார்த்தைகளைக் கூற மந்திரவாதி அவ்விடத்திற்கு வந்தான்.

இளவரசி இருந்த அறையில் இருந்து ஒரு இனிய நறுமணம் வரவும் மந்திரவாதி தன்னை மறந்தவனாய் உள்ளே சென்றான். இளவரசியோ அந்த மந்திரவாதியைக் கவரும் விதத்தில் அற்புதமான ஆடையை அணிந்து இருந்தாள். மேலும் அவள் மந்திரவாதியை புன்னகையுடன் வரவேற்றாள். அதைக் கண்ட மந்திரவாதி தான் காண்பது கனவா? அல்லது நிஜமா? என்பதை அறியாமல் திகைத்துப் போய் நின்றான். பிறகு எல்லாமே நிஜம் தான் என்பதை உணர்ந்தவனாக இளவரசியிடம்," என்ன இளவரசி, ஒரு வழியாக உனது மனதை மாற்றிக் கொண்டாயா?" என்றான்.

மந்திரவாதியின் வார்த்தைகளைக் கேட்ட இளவரசி, "மனம் மாறாமல் பிறகு என்ன செய்ய? எப்படியும் எனது கணவர் இங்கு வரப் போவதில்லை. அத்துடன் நான் இங்கு இருப்பதை எனது தந்தையால் கூட அறிய முடியாது. இந்நிலையில் நான் தங்களை பகைத்துக் கொண்டு என்ன செய்ய? அதனால் தான் தங்களுக்குப் பணிந்து போகத் தீர்மானித்து விட்டேன். என்னிடம் தாங்கள் உண்மையாக நடந்து கொண்டால் உங்களை விட்டு நான் எப்போதுமே பிரிய மாட்டேன்" என்றாள்.

அதைக் கேட்ட மந்திரவாதி ஆனந்தம் கொண்டான். அத்துடன் இளவரசியிடம், "இப்போதாவது உனக்கு புத்தி வந்ததே" என்று கூறி மகிழ்ந்தான். பிறகு தான் வெளியில் இருந்து வந்த களைப்பு நீங்க குடிக்க எதையாவது கொண்டு வந்து தருமாறு இளவரசியிடம் அவனாகவே கேட்டான். இதைக் கண்ட இளவரசி "பழம் நழுவி அதுவாகே பாலில் விழுகிறதே! பலி ஆடு தானாகவே வந்து தலையை கொடுக்கிறதே!" என்று சிந்தித்தபடி தனது தோழியிடம் சென்று முன்னமே பேசியபடி மது பாணத்துக்குள் "பங்க" என்ற போதைப் பொருளைக் கலந்து கொண்டு வந்து மந்திரவாதியின் வாயில் அவளாகவே ஊட்டிவிட்டாள். இளவரசி அப்படி ஊட்டிய மாத்திரத்தில் அந்த மந்திரவாதியும் கணக்கில்லா மதுக் கோப்பைகளைக் கொண்டு வருமாறு கூறி அனைத்தையும் சந்தோஷமாகப் பருகித் தீர்த்தான். ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறிய அந்த மந்திரவாதி அப்படியே மயங்கித் தரையில் விழுந்தான்.

மந்திரவாதியின் நிலை இப்படி இருக்க, தயாராக நின்ற இன்னொரு விசுவாசம் உள்ள பணிப்பெண் இளவரசியின் ஆணைப்படி தோட்டத்துக்குச் சென்று அலாவுதீனை அழைத்து வந்து விட்டாள். அலாவுதீன் கணப் பொழுதில், மந்திரவாதியின் நெஞ்சுப் பைக்குள் கையை விட்டு விளக்கை எடுத்து விட்டான். அதன் பின்னர் தனது வாளை எடுத்து அந்த மந்திரவாதியை கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டான். அதன் பிறகு தான் அலாவுதீன் நிம்மதி அடைந்தான்.

பிறகு அதிசய விளக்கை தேய்த்து பூதத்தை வரவழைத்தான் அலாவுதீன். அந்த மாளிகையை எடுத்துக் கொண்டு போய் பாக்தாத் நகரத்தில் தனது சொந்த உழைப்பில் வாங்கிய தான் காட்டும் நிலத்தில் வைக்குமாறு பூதத்திடம் கூறினான். அதன் படியே அந்தப் பூதம் அலாவுதீன் காட்டிய அவனது சொந்த நிலத்தில் அந்த மாளிகையை பத்திரமாகக் கொண்டு சென்று வைத்தது.

பின்னர் "வேறு எதாவாது வேண்டுமா உசூர்" என்று அலாவுதீனிடம் கேட்டது அந்தப் பூதம்.

உடனே அலாவுதீன், "ஆம் எனக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் கொண்ட மூட்டை ஒன்று வேண்டும்" என்றான். அதன் படியே அந்தப் பூதமும் அதனைக் கொண்டு வந்து கொடுத்தது. அந்தப் பொற் காசுகளை பாக்தாத் நகர ஏழை மக்களுக்கு வாரி, வாரி வழங்கினான் அலாவுதீன். அதனை அனைவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் இளவரசியிடம் அலாவுதீன் அவளது தந்தை (அவள் மந்திரவாதியால் கடத்தப்பட்ட சமயத்தில்) அவனை முன்பு அவமானம் செய்து கீழ்த்தனமாக  நடத்திய விதத்தை எல்லாம் எடுத்துக் கூறினான். சுல்தான் தனக்குக் கொடுத்த தவணைக் காலம் முடிய இன்னும் இருபத்தி ஐந்து நாட்கள் உள்ள நிலையில் அதற்குள்ளாகவே பாக்தாத் நகரத்தை அடைந்த அலாவுதீன். சுல்தானின் முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல் தான் வந்த செய்தியைக் கூட தெரியப்படுத்தாமல் இருந்தான்.

அதனைக் கண்ட ஊர் மக்கள் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் அலாவுதீனை மிகவும் கேவலமான முறையில் நடத்தியதால் அவன் இனிமேல் சுல்தானின் மாளிகைக்குச் செல்லப் போவதில்லை என்ற படி எல்லாம் பேசிக் கொண்டனர்.

அலாவுதீன் தனது மகளை அழைத்துக் கொண்டு பத்திரமாக வந்து சேர்ந்ததை அறிந்த சுல்தான் அலாவுதீன் தவறு இழைக்காதவன் என்பதை உணர்ந்தவராக தான் முன்பு அவனை நடத்திய விதத்திற்கு வருந்தினார். அத்துடன் மருமகன் அலாவுதீன் இனிமேல் தன்னுடன் பேச மாட்டான் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். இளவரசி பதர் அல் புதூரும் தனது கணவரை தவறாகப் புரிந்து கொண்டு கைது செய்து அவமானப் படுத்திய தனது தந்தையை வெறுத்தாள்.

ஊர் மக்களோ, "அலாவுதீன் தன்மானம் உள்ளவன். ரோஷக்காரன். சுல்தான் இப்படி நடந்து கொண்ட விதத்திற்கு எந்த மருமகன் தான் அவருடன் மீண்டும் உறவாடுவான்" என்று கூறி அலாவுதீனின் நிலையை ஆதரித்தனர்.

மறுபக்கம் தனது கணவரின் உயிரைக் காப்பாற்றிய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்தாள் இளவரசி. நாட்டு மக்கள் அனைவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். விருந்தை நல்ல முறையில் திட்டமிட்டு ஏற்பாடு செய்து இருந்ததால் விருந்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் திருப்தியுடன் உணவு உண்டனர். அந்த விருந்துக்கு அழைக்கப் படாமலேயே இளவரசியின் தந்தையான சுல்தான் கலந்து கொண்டார். வீட்டிற்கு வந்தவரை வெளியே போகும் படிச் சொல்ல அலாவுதீனுக்கும் மனம் இல்லை, இளவரசிக்கும் மனம் வர வில்லை. எனினும், சுல்தானை வர வேற்காமல் கோபத்துடன் காட்சி அளித்தாள் இளவரசி. சுல்தான் இளவரசியிடம் மன்னிப்பு வேண்டினார். ஆனால், இளவரசி சுல்தானை (தனது தந்தையை) மன்னிப்பதாக இல்லை.

எனினும் இதற்கு இடையில் இளவரசி பாக்தாத் நாட்டு மக்களுக்கு அளித்த விருந்து நிகழ்ச்சி அற்புதமான முறையில் நடந்து முடிந்தது. உணவு உண்ட அனைவரும் இளவரசியையும், அலாவுதீனையும் வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

இப்படியாக அலாவுதீன் பாக்தாத் நகரத்தில் மீண்டும் புகழ் அடைந்து வந்தான். கொடிய இல்துமிஷ் இறந்து விட்டான் தனக்கு இனிமேல் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நிம்மதி அடைந்தான். ஆனால், அவனுக்கு இன்னொரு சோதனை காத்துக் கொண்டு இருந்தது.
~~chapter~~6
~~title~~இல்துமிஷின் தம்பி அம்ஜத் கானும் அலாவுதீனும்
~~page_heading~~இல்துமிஷின் தம்பி அம்ஜத் கானும் அலாவுதீனும்

இல்துமிஷுக்கு ஒரு தம்பி இருந்தான் அவன் பெயர் அம்ஜத் கான். அவன் மந்திர தந்திரங்களில் கை தேர்ந்தவன். இல்துமிஷ் அளவுக்குத் திறமைசாலி. சில சமயங்களில் மந்திர வித்தைகளில் இல்துமிஷ்ஷையே அவன் ஆச்சர்யப்படும் படியாக செய்ததும் உண்டு.

அவ்வளவு திறமை சாலியான அம்ஜத் கான் தனது சகோதரன் இல்துமிஷ் இறந்து விட்டதை அறிந்தான். அத்துடன் அவனைக் கொன்ற அலாவுதீனை பழிவாங்கத் துடித்தான். அவனது குடும்பத்தையே அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டான். விரைந்து பாக்தாத் நகரத்தை அடைந்தான். அந்த ஊரில் ஒரு விடுதியில் தங்கி அலாவுதீன் பற்றிய செய்திகளை சேகரித்தான்.

ஒரு நாள் அம்ஜத் கான் சந்தையில் சென்று கொண்டு இருந்த சமயம். அங்கு ஒரு இடத்தில் மக்கள் கூடி இருப்பதைப் பார்த்தான். அருகில் இருந்தவர்களிடம் அது பற்றி விசாரித்தான். "பாத்திமா வந்து இருக்கிறார். அவரிடம் ஆசி பெறுவதற்காக அவ்விடத்தில் மக்கள் கூடி உள்ளனர்" என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

"யார் பாத்திமா? அவர்கள் எந்த விதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள்?" என்று அங்கு கூடி இருப்பவர்களிடம் கேட்டான் அம்ஜத் கான்.

"பாத்திமா அல்லாவின் அருள் பெற்றவள். அப்படித் தான் இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். அவர்கள் கை வைத்து ஆசிர்வதித்தால் எப்படிப் பட்ட நோயும் குணமாகும். அதனால் தான் இத்தனை பேர் கூடி நிற்கிறோம்" என்றார் மற்றொருவர்.

இப்படியாக அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவருமே பாத்திமாவிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றனர். மந்திரவாதி அம்ஜத் கான் அந்தப் பாத்திமாவை தொடர்ந்து சென்றான். அவள் மலை உச்சியில் தனித்து இருந்த தனது குடிலை அடைந்தாள். மந்திரவாதி அம்ஜத் கானும் அந்தக் குடிலுக்குள் சென்றான். அவனைப் பார்த்த பாத்திமா, "இவனும் நம்மிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காகத் தான் வந்துள்ளான் போல" என்று நினைத்துக் கொடிய எண்ணம் கொண்ட அம்ஜத் கானை ஆசிர்வாதம் செய்யத் தொடங்கினாள். பாத்திமா அவனை ஆசிர்வாதம் செய்து கொண்டு இருந்த சமயம் தனது குறு வாளை எடுத்துப் பாத்திமாவை பல இடங்களில் குத்திக் கொன்றான். பிறகு தனது மந்திர சக்தியைக் கொண்டு தன்னைப் பாத்திமா போலவே உரு மாற்றிக் கொண்டான். தள்ளாடிய நடையையும் பழகிக் கொண்டான். அன்றைய தினம் பாத்திமாவின் பிணத்தை அகற்றி விட்டு அவளது குடிலில் தங்கிய வண்ணம். அவள் சமைத்த உணவு வகைகளை தின்றான். அத்துடன் ஒரு வாரம் முழுவதும் பாத்திமாவின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் தனது மந்திர சக்தி மூலமாக அறிந்து கொண்டான் அவற்றையும் பழகிக் கொண்டான்.

நான்கு நாட்கள் கழிந்தது. பாத்திமாவின் உருவத்துக்கு மாறிய மந்திரவாதி அலாவுதீன் இருந்த அரண்மனைக்கு அருகாமையில் சென்றான். அங்கு கூடி இருந்த மக்கள் அனைவரும் உண்மையாகவே பாத்திமா தான் வந்து இருக்கிறார் என்று நினைத்து அவளிடம் ஆசிர்வாதம் பெற நான் முந்தி, நீ முந்தி என்று முந்தி அடித்துக் கொண்டனர். அதனைக் கண்ட மந்திரவாதி மனதிற்குள் சிரித்துக் கொண்டான். மக்கள் கூடியதும் ஒரு வித இரைச்சல் ஏற்படும் அல்லவா? அப்படித் தான் பெரும் இரைச்சல் அவ்விடத்தை ஆக்கிரமித்தது. அந்த இரைச்சலைக் கேட்ட இளவரசி தனது பணிப் பெண்களிடம், "வெளியில் என்ன இரைச்சல் ஒரு வேளை ஏதேனும் கலவரமா? சென்று பார்த்து வாருங்கள்" என்று கூறினாள்.

அதன் படியே இளவரசியின் தோழிகள் வெளியில் சென்று பாத்திமா வந்திருக்கும் செய்தியை இளவரசிக்குத் தெரிவித்தனர். அந்தப் பாத்திமா மீது இளவரசிக்கும் மிகவும் மரியாதை இருந்தது. சிறு வயதில் ஒரு சமயம் இளவரசிக்கு கடும் நோய் வந்த சமயத்தில் இந்தப் பாத்திமாவின் அருளால் அந்த நோய் நீங்கியதாக சுல்தான் முன்பு ஒருமுறை அவளிடம் கூறியதை இப்போது இளவரசி நினைத்துப் பார்த்தாள். மேலும், இவ்வளவு அருள் பெற்றப் பாத்திமாவை எப்போதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று இளவரசிக்குத் தோன்றியது. உடனே அங்கு கூடி இருக்கும் மக்கள் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாத படி அவர்கள் பாத்திமாவிடம் ஆசிர்வாதம் பெற்ற பிறகு பாத்திமாவை அழைத்து வருமாறு தனது தோழிகளிடம் கூறினாள் அவள்.

அதன் படியே இளவரசியின் தோழிகள் பாத்திமாவை அழைத்து வர உடனுக்குடன் அவ்விடத்துக்கு விரைந்தார்கள். அங்கு கூடி இருப்பவர்கள் அனைவரும் பாத்திமாவிடம் (பாத்திமா உருவில் இருந்த மந்திரவாதியிடம்) ஆசிர்வாதம் பெரும் வரையில் காத்திருந்து இளவரசி அழைப்பதாகப் பாத்திமாவை அரண்மனைக்கு அழைத்து வந்தனர். பாத்திமா உருவில் இருந்த அந்த மந்திரவாதியும் அரண்மனையை அடைந்தான். இதற்காகத் தானே அவனும் காத்துக் கொண்டு இருந்தான்.

அரண்மனையை அடைந்த அந்த மந்திரவாதி "அலாவுதீனை குடும்பத்துடன் ஒழித்துக் கட்ட வேண்டும்" என்று தீர்மானம் செய்து கொண்டான்.

மறுபுறம் அப்பாவி இளவரசி வந்திருப்பது பாத்திமா தான் என்று நம்பிக் கொண்டு எழுந்து நின்று அந்த மந்திரவாதிக்கு வணக்கம் தெரிவித்தாள். பாத்திமா உருவில் இருந்த அந்த மந்திரவாதியும் இளவரசிக்கு ஆசி கூறினான். பாத்திமா பெண் தானே என்று நினைத்த இளவரசி பாத்திமா மீது கொண்ட மரியாதையின் காரணமாக தனது ஆசனத்துக்கு அருகிலேயே உட்காரவைத்துக் கொண்டு அன்புடன் உபசரித்தாள். பணிப்பெண்கள் ஓடிச் சென்று பாத்திமா குடிக்க பழ ரசங்களைக் கொண்டு வந்து கொடுத்தனர். அத்துடன் இளவரசி தங்களது மாளிகையில் ஒரு சிறிய அறையிலேயே தங்கிக் கொள்ளுமாறு பாத்திமாவை மீண்டும், மீண்டும் உருக்கமாகக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

இளவரசியின் நினைப்பு யாதெனில் தனது மாளிகையில் பாத்திமா தங்கினால் அதனால் தனது அரண்மனைக்கே பெருமை வந்து சேரும் என்பது தான். அதனால் தான் மீண்டும், மீண்டும் வந்திருப்பது யார் என்று அறியாமல் இளவரசி பாத்திமா உருவத்தில் இருந்த மந்திரவாதியிடம் அந்த மாளிகையிலேயே தங்கி விடுமாறு கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

மந்திரவாதிக்கோ மனதிற்குள் ஏக குஷி. தான் நினைத்ததை முடிப்பதற்குச் சிரமப்பட வேண்டுமோ என்று எண்ணி இருந்த அந்தக் கொடிய நெஞ்சம் படைத்த மந்திரவாதிக்கு எல்லாம் கை கூடி வருவது போலத் தெரிந்தது. இறுதியில் அவன் அந்த மாளிகையிலேயே தங்க ஒப்புக் கொண்டான். அதைக் கேட்டு இளவரசி சந்தோஷம் அடைந்தாள். பின்னர் மந்திரவாதியின் உருவத்தில் இருந்த பாத்திமாவிற்கு உணவு பரிமாறப்பட்டது. தனி அறையை சுத்தம் செய்து தருமாறு தனது தோழிகளிடம் இளவரசி கூற, அதற்கான ஏற்பாடுகள் உனக்குடன் நடந்தது.

'அலாவுதீன் அந்த மாளிகையில் எங்காவது காணப் படுகிறானா?' என்று அந்த பாத்திமா உருவில் இருந்த மந்திரவாதி கண்களை சுழற்றி சுழற்றிப் பார்த்தான். அதனைக் கண்ட அந்த இளவரசி, "தாங்கள் ஏன் இப்படி எங்கள் மாளிகையை பார்க்கின்றீர்கள்?" என்று பாத்திமாவிடம் கேட்டாள்.

உடனே பாத்திமா உருவில் இருந்த அந்த மந்திரவாதி இளவரசியிடம்," ஒன்றும் இல்லை அம்மா, இந்த மாளிகையில் ஒரே ஒரு சின்னக் குறை உள்ளது. அந்தக் குறை நீங்க வேண்டும்; ஆம் அது நீக்கப்பட வேண்டும்" என்றான்.

"அந்தக் குறை நீங்க நாங்கள் என்னம்மா செய்ய வேண்டும்?" என்று கேட்டாள் அப்பாவி இளவரசி.

"ஒன்றும் பெரிதாக அல்ல. "ருக்" என்னும் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறாயா, அதன் முட்டையைக் கொண்டு வந்து இந்த மாளிகை விதானத்தில் கட்டித் தொங்கவிட்டால் போதும், இந்த மாளிகை சுத்தமாகி விடும். இதில் இருக்கும் குறைகள் எல்லாம் சரியாகி விடும். ஆம், நிச்சயமாக சரியாகி விடும். அத்துடன் நல்ல விஷயங்கள் எல்லாம் இந்த மாளிகையில் நடந்தேறும்" என்றான் பாத்திமா உருவில் இருந்த அந்த மந்திரவாதி.

உடனே இளவரசி," அம்மா! நான் "ருக்" என்ற அந்தப் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. தயை கூர்ந்து எனக்கு அதைப் பற்றிச் சொல்லுங்கள். அது எங்கு இருக்கும்" என்று கேட்டாள்.

"இளவரசி நன்றாகக் கேள் "ருக்" என்னும் அந்தப் பறவை ராட்சப் பறவை. இந்தப் பறவை ஒட்டகத்தையும் ஏன் யானையைக் கூட தனது கால் நகத்தால் தூக்கிச் செல்லக் கூடியது. "கொல்கொத்தா" என்ற மலையில் தான் இந்தப் பறவையை அதிகம் காண முடியும். அது இஸ்ரேல் நாட்டில் உள்ளது. அந்த முட்டையை மட்டும் உங்கள் அரண்மனை சேவகர்களை வைத்துக் கொண்டு வந்து விடுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் மாளிகையின் வளர்ச்சியை" என்று இளவரசியிடம் மறுமொழியாகக் கூறினான் அந்த மாறுவேடம் தாங்கிய மந்திரவாதி.

இளவரசி நன்றாக அதனைக் கேட்டுக் கொண்டாள். பிறகு பாத்திமா வடிவில் இருந்த மந்திரவாதியை மாளிகையின் அறையில் கொண்டு சென்று விட்டாள்.

மாலை வேளையில் வேட்டைக்குச் சென்ற அலாவுதீன் தனது மாளிகைக்குத் திரும்பினான். அவனை இளவரசி அன்புடன் வரவேற்றாள். அத்துடன் பாத்திமா வந்து மாளிகையில் தங்கி இருக்கும் விஷயத்தை அலாவுதீனிடம் கூறி மகிழ்ந்தாள். மேலும் மந்திரவாதி உருவில் இருந்த பாத்திமா தன்னிடம் கூறிய அனைத்து விஷயங்களையும் அலாவுதீனிடம் கூறி முடித்தாள். அந்த வகையில் அலாவுதீன் "ருக்" என்ற அந்தப் பறவையைப் பற்றி அறிந்து கொண்டான். அதனைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்தான். அவனுக்கு "ருக்" என்ற பறவையின் முட்டையை மாளிகைக்கு கொண்டு வருவது எளிதான செயல் இல்லை என்று தோன்றியது. அப்படித் தோன்றிய மாத்திரத்தில் தனது தனி அறைக்குச் சென்று விளக்கை எடுத்துத் தேய்த்தான்; உடனே பூதம் விளக்கில் இருந்து வெளிப்பட்டது. அத்துடன் அவ்வாறு வெளிவந்த பூதம் அலாவுதீனின் கட்டளைக்காகக் காத்துக் கொண்டு இருந்தது.

அந்த பூதத்திடம் அலாவுதீன், "எனக்குப் புரியாத ஒன்றைத் தெரியாத ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன். "ருக்" என்று ஒரு பறவை உள்ளதா? அப்படி ஒரு பறவை இருப்பது உண்மை தானா?அதன் முட்டையை உன்னால் கொண்டு வர முடியுமா? அதனை அரண்மனை விதானத்தில் கட்டினால் நல்லதா?" என்றெல்லாம் கேட்டான்.

அதனைக் கேட்ட பூதம் அதிர்ச்சி அடைந்து நின்றது. அது நாள் வரையில் அந்தப் பூதம் அவ்வாறு அதிர்ச்சி அடைந்து அலாவுதீன் பார்த்ததே இல்லை. பூதத்திடமே அலாவுதீன் அதைப் பற்றிக் கேட்டான்.

அப்போது அந்தப் பூதம் அலாவுதீனிடம், "உசூர், யாரோ உங்களை அழிப்பதற்காகத் தான் "ருக்" என்ற அந்தப் பறவையின் முட்டையை அரண்மனை விதானத்தில் கொண்டு வந்து கட்டுமாறு உங்களைத் தவறாக வழி காட்டி உள்ளார்கள். அந்த முட்டை இந்த அரண்மனைக்கு வந்தால் இந்த அரண்மனை மட்டும் அல்ல தங்கள் சந்ததியே அழிந்து விடும். ஆம்! மந்திரவாதிகள் தீய காரியங்களை செய்யத் தான் அந்த முட்டையை கேட்பார்கள். அந்த முட்டை இங்கு வந்தால் அரண்மனையில் இருக்கும் நல்ல சக்திகள் எல்லாம் ஓடி விடும். ஏன் நீங்கள் விளக்கை தேய்த்தால் எந்நாளும் கூட உங்கள் கட்டளைக்கு அடி பணிந்து இங்கு வர இயலாது. அவ்வளவு தீய சக்திகளை தன்னகத்தே கொண்டது அந்த முட்டை. சுருக்கமாகச் சொல்லப் போனால் அந்த முட்டையை இங்கு கொண்டு வருவது என்பது சொந்தக் காசில் சூனியம் வைப்பது போன்றது" என்று முழு விவரத்தையும் அலாவுதீனிடம் கூறி முடித்தது அந்தப் பூதம். அதைக் கேட்ட அலாவுதீன் திடுக்கிட்டான். பிறகு சற்று நேரம் யோசித்த அலாவுதீன் மீண்டும் அந்த பூதத்திடம்," அன்பு பூதமே! பாத்திமா போன்ற இறை அருள் பெற்ற மங்கை ஏன் அந்த முட்டையைக் கொண்டு வருமாறு எனது மனைவியிடம் கூற வேண்டும். பாத்திமா ஏன் அவ்விதம் எனது அழிவை விரும்ப வேண்டும்" என்று வினவினான்.

அதைக் கேட்ட பூதம் அலாவுதீனிடம் சத்தியத்தை கூறத் தொடங்கியது. "உசூர் வந்திருப்பது பாத்திமா அல்ல. தாங்கள் கொலை செய்தீர்களே இல்துமிஷ் அவனது உடன் பிறந்த தம்பியான அம்ஜத் கான் தான் தங்களை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இங்கு வந்து உள்ளான். மேலும் உங்களை மட்டும் அல்ல. உங்கள் குடும்பத்தையே அவன் அழிக்க இங்கு வந்து உள்ளான். ஏன்? தனது ஆறாத கொலை வெறியால் உண்மையான பாத்திமா அம்மையாரையே அவன் கொலை செய்து விட்டு அவர்களது ரூபத்தை எடுத்துக் கொண்டு இங்கு வந்து நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறான்" என்று கூறி முடித்தது.

அனைத்து உண்மைகளையும் கேட்ட அலாவுதீனுக்கு தலை சுற்றியது. அவனுக்குத் தலைவலியே வந்து விட்டது. "வந்திருக்கும் அம்ஜத் கானைப் போல இன்னும் எத்தனை தம்பிகள் இல்துமிஷ்ஷுக்கு இருப்பார்கள்? இன்னும் எத்தனை பேர் இதுபோலக் கிளம்பி உள்ளார்களோ?" என்று அவன் நினைத்த போது அவனது தலைவலி இன்னும் அதிகமானது. துடித்துப் போனான் அலாவுதீன்.

தலைவலியால் தனது ஆருயிர் கணவர் துடித்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்த இளவரசி "நோய் தீர்க்கும் வள்ளல் பாத்திமா அம்மையார் கை வைத்தால் எல்லாம் சரியாகி விடும் அவர்களை உடனே அழைத்துக் கொண்டு போய் தனது ஆருயிர் கணவருக்காக ஜெபிக்கச் சொல்லுங்கள்" என்று தனது தோழிகளிடம் கூறினாள். அதன் படியே இளவரசியின் தோழிகள் பாத்திமாவை சந்தித்து விஷயத்தைக் கூறினார்கள். பாத்திமாவும் அலாவுதீனைக் காணத் தயார் ஆனாள். பிறகு இளவரசியே சென்று அலாவுதீனுக்கு ஆறுதல் கூறி பாத்திமா அம்மையாரை தான் அழைத்து வரச் சொல்லி இருப்பதைக் கூறினாள். தவிர பாத்திமாவின் கை பட்ட மாத்திரத்தில் எல்லாம் சரியாகி விடும் என்று தனது கணவரிடம் கூறினாள்.

அலாவுதீன் தனது மனைவியிடம் அவள் பயந்து விடுவாள் என்று எதையுமே கூறாமல் அமைதியாக இருந்தான். அத்துடன் மனைவியின் வார்த்தைகளுக்கு அவன் பதில் வார்த்தைகள் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அந்த நேரத்தில் போலி பாத்திமா அலாவுதீனைக் காண அவ்விடத்துக்கு வந்தாள். அனைத்து விஷயங்களையும் அலாவுதீன் அறிந்து இருந்தாலுமே, அதனை பாத்திமாவிடம் அவன் காட்டிக் கொள்ளவில்லை. உண்மையான பாத்திமாவை வணங்குவது போன்றே அவளை வணங்கினான். அதைக் கண்ட மந்திரவாதிக்கு ஒரே மகிழ்ச்சி; அலாவுதீன் தன்னைப் பாத்திமா என்று நம்பிக் கொண்டு இருப்பதாக எண்ணி மன நிறைவை அடைந்தான். பின்னர் அலாவுதீனின் தலைவலி தீர தனியாக இறைவனிடம் தான் ஜபிக்க விரும்புவதாக அந்தப் போலி பாத்திமா இளவரசியிடம் கூறினாள்.

அப்பாவி இளவரசியும் அலாவுதீனைப் போலி பாத்திமாவிடம் தனியாக விட்டு விட்டுத் தனது தோழிகளை அழைத்துக் கொண்டு மெல்ல வெளியே நகர்ந்தாள். இப்போது அந்த அறையில் போலி பாத்திமாவும், அலாவுதீனும் தான் இருந்தனர்.

அந்தப் போலி பாத்திமா அலாவுதீனைக் கொல்ல இதுவே சரியான தருணம் என்று முடிவு செய்து குறு வாளை மறைத்து வைத்தபடி அலாவுதீனை நெருங்கினாள். அலாவுதீன் அப்போதே சுதாரித்துக் கொண்டான். மேலும் போலி பாத்திமா குறு வாளால் அலாவுதீனை கொல்ல முற்படுகையில் அலாவுதீன் முந்திக் கொண்டு போலி பாத்திமாவை கொன்று தீர்த்தான். போலி பாத்திமா அலறிக் கொண்டே கீழே விழுந்து மடிந்தாள். அவளது உயிர் போன மறுகணம் மந்திரவாதியின் நிஜ உருவம் வெளிப்பட்டது. அலாவுதீனின் அறையில் அலறல் சத்தத்தைக் கேட்ட இளவரசி ஓடோடி வந்தாள். கீழே ஒரு ஆண் பிணம் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். அப்போது தான் அலாவுதீன் இளவரசியிடம் அனைத்து உண்மைகளையும் சுருக்கமாகக் கூறி முடித்தான். அந்த சமயத்தில் தான் இளவரசியும் தான் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள். அதற்காக அலாவுதீனிடம் கண்ணீர் மல்க மன்னிப்பும் வேண்டினாள். அலாவுதீன் அவளது கண்ணீரைத் துடைத்து, "இனிமேல் கவனமாக இரு. நடந்தது அனைத்தும் அல்லாவின் கருணையால் நல்லதாகவே முடிந்தது. இனி ஒரு பயமும் இருக்காது" என்று ஆறுதல் கூறினான்.

பிறகு அம்ஜத் கானின் சடலத்தை அப்புறப்படுத்தினான் அலாவுதீன். பாத்திமா இறந்த செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் ஊர் மக்கள் அனைவரும் வருந்தினர். அலாவுதீன் ஊர் மக்களின் துயரத்தைப் போக்கிய பாத்திமாவுக்கு அவள் வாழ்ந்த இடத்தில் நினைவு மண்டபத்தை எழுப்பினான். அங்கு வந்து பிரார்த்தனை செய்த மக்களின் நோய் நீங்கியது கண்டு பொது மக்கள் பாத்திமாவை தெய்வப் பிறவி என்றே துதித்தனர். அதனால் அலாவுதீனுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. காலங்கள் கடந்தது அலாவுதீனுக்கும், இளவரசிக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இப்ராகிம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அதனைக் கேள்விப்பட்ட சுல்தான் மகிழ்ந்தார். பிறகு சில காலம் பேரனுடன் சந்தோஷமாக நாட்களை கழித்த சுல்தான். வயோதிகம் காரணமாக இறந்தார்.

பாக்தாத் நகரத்து மக்கள் ஆட்சிப் பொறுப்பை அலாவுதீன் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி அவனது மாளிகையின் முன்னாள் திரண்டு நின்று வேண்டினார்கள். அலாவுதீனும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு மன்னனாக முடி சூடிக் கொண்டான் அத்துடன் இளவரசி ராணியாக அறிவிக்கப்பட்டாள். அந்த வைபவத்தில் அலாவுதீனின்  தாயாரும் கலந்து கொண்டு அலாவுதீனை வாழ்த்தினாள். இப்படியாக அலாவுதீனின் வாழ்க்கை அன்றைய தினம் முதற்கொண்டு சிறந்து விளங்கியது. பாக்தாத் நகரத்தின் மக்கள் அவனது புகழ் பாடி மகிழ்ந்தனர் என்று அலாவுதீனின் கதையை ஷாரஜாத் பல நாள் இரவுகளாக மன்னர் ஷாரியரிடம் தொடர்ந்து கூறி முடித்தாள்.

கதையை முழுவதுமாகக் கேட்டு முடித்த ஷாரியர்," அலாவுதீன் கதை மிகவும் அருமையாக உள்ளது" என்று கூறி ஷாரஜாத்தைப் பாராட்டினான். அப்போது ஷாரஜாத் ஷாரியரிடம், "இது என்ன பிரமாதம் 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' என்ற கதையை நான் அடுத்து சொல்லவிருக்கிறேன். அந்தக் கதை இதைக் காட்டிலும் பிரமாதமானது" என்றாள்.

உடனே அந்தக் கதையையும் சொல் என்று ஆவலுடன் கேட்கத் தயார் ஆனான் ஷாரியர். ஷாரஜாத்தும் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற அந்தக் கதையை சொல்லத் தொடங்கினாள்.