கைகேயி சூழ்வினைப் படலம் - 1637
காலைப் பாட்டு
1637.
மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு
தீயின் முழங்க, மேல்
வை அராவிய மாரன் வாளியும், வான்
நிலா நெடு வாடையும்,
மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு
மாதர்தம் மென் செவி,
பை அரா நுழைகின்ற போன்றன -
பண் கனிந்து எழு பாடலே.
மொய் அராகம் நிரம்ப - அடர்ந்த காம வேட்கை மனத்தில்
நிறையும்படியும்; ஆசை முருங்கு தீயின் முழங்க - ஆசை கிளர்ந்த
எரியும் நெருப்பைப் போல மிகுந்திடுமாறும்; மேல் - வெளியே; வை
அராவிய மாரன் வாளியும்- கூர்மை செய்யப்பட்ட மன்மதன்அம்புகளும்;
வான் நிலா நெடு வாடையும்- விண்ணில் நிலவும் நீண்ட வாடைக்காற்றும்;
மெய் அராவிட - உடலை அறுத்தலால்; ஆவி சோர - உயிர் தளர;
வெதும்பும்மாதர்தம் மென்செவி - வாடுகின்ற மகளிருடைய மெல்லிய
காதுகளில்; பண் கனிந்து எழுபாடல் - இசை முதிர்ந்து எழுகின்ற
பாடல்கள்; பை அரா நுழைகின்ற போன்றன - படத்தையுடைய பாம்புகள்
நுழைவனவற்றை ஒத்தன;
கணவனைப் பிரிந்த மாதரை மாரன் அம்புகளும், வாடைக் காற்றும்
இரவில் வருத்த. காலையில்எழுந்த பாடல்கள் அவ் வருத்தத்தை
மிகுவித்துத் துன்புறுத்தின. அராகம் - காதல்; பொருளிடத்துத் தோன்றும்
பற்றுள்ளம். ஆசை - உள்ளம்விரும்பியதைப் பெறவேண்டும் என்று மேலும்
மேலும் நிகழ்வது. நிலா நெடுவாடை - நிலாவும் நெடியவாடைக் காற்றும்.
பாடல் - பள்ளியெழுச்சிப் பாடல். ஏ - ஈற்றசை. 58
