அன்னை சாரதா தேவி விவேகானந்தருக்கு அளித்த உத்தரவு

அன்னை சாரதா தேவி விவேகானந்தருக்கு அளித்த உத்தரவு

bookmark


அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு சுவாமிஜி அன்னை சாரதாதேவிக்கு கடிதம் ஒன்று எழுதினார். தாம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் சர்வமத மகா நாட்டுக்குப் போக விரும்புவதாகவும் அன்னையின் கருத்தை அறிய விளைவதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தார்.

இந்தக் கடிதத்தைக் கண்டதும் அன்னை சாரதா தேவிக்கு தாம் அடிக்கடி காணும் ஒரு கனவுக் காட்சியைப் பற்றிய நினைவு எழுந்தது. அன்னை கங்கையாற்றின் கரையில் அமர்ந்து இருக்கிறார்.

அப்போது நிலவுக் காலம். வெள்ளை ஆறாக கங்கை ஓடிக் கொண்டு இருக்கிறது. திடுமென்று தம்மை யாரோ தள்ளிக் கொண்டு கங்கையில் இறங்குவதை அன்னை அறிந்தார்.

ஆம். அவ்வாறு இறங்கியவர் குருதேவர் தாம். நடந்து நடந்து கங்கையோடு அவர் கரைந்து விட்டது போல மறைந்தும் போனார். அன்னை இக்காட்சியை வியப்புடன் பார்த்து இருந்தார்.

அடுத்த வினாடியில் கங்கையில் நரேந்திரர் தோன்றினார். அவர் குனிந்து கங்கை நீரை இரு கைகளாலும் அள்ளி அள்ளி 'ஜெய் ஜெய் ராமகிருஷ்ணா" என்று கூவியவாரே எல்லோர் மீதும் தெளிப்பது போன்ற காட்சியை அன்னை அங்கே கண்டார்.

இந்தக் காட்சி வெகு காலம் வரை அன்னையின் மனத்தை விட்டு அகலாது இருந்தது.

இன்று நரேந்திரன் கடிதம் வந்ததும் அன்னை மீண்டும் அதே காட்சியில் லயித்தார்.

குருதேவரின் லட்சியங்களையும் உபதேசங்களையும் உலகில் பரப்பப் போகிறவர் நரேந்திரர் என்பதையே அக்காட்சி விளக்கியது.

குருதேவரின் அன்புச் சீடரும் அருமை மகனுமாக இருந்த நரேந்திரரை அன்னை ஆசிர்வதித்தார்.

நரேந்திரர் எடுத்து வைக்கிற ஒவ்வொரு பணியிலும் குருதேவரின் லட்சியங்களே சுடர்விட்டன. அமெரிக்கப் பயணத்துக்கு ஆசியளித்து உடனே பதில் கடிதத்தையும் அன்னை உடனுக்குடன் அனுப்பி வைத்தார்கள். அது கண்டு விவேகானந்தர் மகிழ்ந்தார். இவ்வாறு இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்திக ஞானம் விவேகானதர் மூலமாக அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகம் எங்கும் பரவித் துளிர்த்தது.