கன்னியாக்குமாரியில் சுவாமி விவேகானந்தர்

கன்னியாக்குமாரியில் சுவாமி விவேகானந்தர்

bookmark

பாரதத்தின் பல மாநகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் யாத்திரையாகச் சென்றவர் சுவாமிஜி. வட நாட்டில் யாத்திரை புரியும் போது அமெரிக்காவில் நடைபெற இருக்கும் சர்வசமய மகாநாடு பற்றிக் கேள்வியுற்றார். மராட்டிய மண்ணிலும் கூட மகாநாட்டுக்கு சுவாமிஜி செல்ல வேண்டுமென அன்பர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

சேதுக்கரையில் உள்ள ராமநாதஸ்வாமியை தரிசித்த பிறகே இதைக் குறித்து முடிவெடுப்பேன் என்றார் சுவாமிஜி.

தென்னகம் வந்தார். அங்கோ, சர்வசமய மகா நாட்டில் இந்து மதத்தின் அருமை பெருமைகளைக் கூறும் தகுதி சுவாமிஜிக்கு மட்டுமே உள்ளது என்றார்கள். அத்துடன் நில்லாமல் சென்னை பக்தர்கள் சுவாமிஜி வெளிநாடு செல்வதற்கான பணத்தை திரட்டவும் தொடங்கினார்கள். அதுபோல இராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியும் கூட விவேகானந்தர் வெளிநாடு சென்று இந்து மதத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூற வேண்டும் என்ற எண்ணத்தில் துடிப்புடன் செயல்பட்டார்.

அப்போதும் சுவாமிஜி ராமநாதஸ்வாமியை தரிசித்த பிறகு தான் எதுவும் கூற முடியும் என்று சொல்லி அவர்கள் அனைவரையும் தடுத்து விட்டார்.

சுவாமிஜி ராமேஸ்வரம் வந்தடைந்தார். ராமநாதஸ்வாமியை தரிசனம் செய்தார். பின்பு கன்னியாகுமரிக்கு வந்து, என்றும் கன்னியாக இருக்கும் அம்பிகையை தரிசித்து விட்டு முக்கடல் சங்கமத்தை அடைந்தார். சுவாமிஜியை "வா, வா" என்று ஆயிரமாயிரம் அலைக் கரங்கள் அழைத்தன.

அலை பெருகும் முக்கடலில் நீந்தியே சென்று சிறிது தொலைவில் இருந்த பாறை மீது அமர்ந்தார். அக்கணமே தனது குருவை நினைத்துக் கொண்டார். குருவின் அருளால் விவேகானந்தரின் மனம் கண நேரத்தில் தியானத்தில் ஒன்றியது. பின்பு எழுந்து நாற்புறமும் நோக்கினார். அவர் முன்னே பாரதம், அடிமைப்பட்டுக் கிடந்தது.

அவரது மனம் பரிதவித்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித குலத்துக்கு ஒப்பற்ற நாகரீகத்தையும் தர்ம சாஸ்திரங்களையும் வேத வேதாந்தங்களையும் அளித்த நாடு இன்று வறுமைப் பிணியில் சிக்குண்டு கிடக்கிறது. பெருமையை அறியாமல் உறங்கிக் கிடக்கிறது.

சகோதரர்களை விழித்து எழச் செய்ய வேண்டிய பொறுப்பை எவரேனும் ஏற்க வேண்டும்? சுவாமிஜியின் உள்ளமும் முக்கடலைப் போல ஆர்பரித்துக் கொண்டது.

பிறரை எதிர்நோக்கி இருப்பானேன். தாமே பணியை, பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற திடமான முடிவுக்கு ஸ்வாமிஜி வந்தார். ஆர்பரித்துக் கொண்டு இருந்த உள்ளம் அமைதியாயிற்று.

உலகுக்கும், பின்பு தாய் நாட்டிற்கும் பாரதத்தின் பெருமையைக் கூறி அதன் புகழை உலக அரங்கில் நிலை நாட்டுவேன் என்று சுவாமிஜி தமக்குத் தாமே பிரதிக்ஞை செய்து கொண்டார். இவ்வாறு கன்னியாகுமரிக்கு சென்ற விவேகானந்தர் புதிய விடியலைத் தேடிப் புறப்பட்டார்.

அவர் அன்று அமர்ந்து மூன்று நாட்கள் தவம் செய்த அந்தப் பாறை இன்றும் கூட விவேகானந்தரின் நினைவாக விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டு எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்டு வருகிறது.