அகலிகைப் படலம் - 559
விசுவாமித்திரன் இராமனைப் புகழ்தல்
559.
‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’
இவ் வண்ணம் - இச் செய்தியே; நிகழ்ந்த வண்ணம் -
(முற்காலத்து) நடந்த முறையாகும்; இனி இந்த - இனிமேல் (நீ
இவ்வுலகில் பிறந்து தீயவரை அழித்து நல்லவர்களைப் பாதுகாத்தல்
என்பது ஏற்பட்ட பிறகு) இந்த; உலகுக்கு எல்லாம் -
உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம்; உய்வண்ணம் அன்றி -
(துன்பம் நீங்கிக்) கடைத் தேறும் வழியே அல்லாமல்; மற்று
ஓர் துயர் வண்ணம் - அதற்கு வேறானதொரு துன்பத்தின்
வழியை; உறுவது உண்டோ - அடைதல் கூடுமோ? (கூடாது);
மழை வண்ணத்து அண்ணலே - மேகம் போன்ற கரிய
திருமேனியுடைய இராமனே! அங்கு - வருகிற வழியில் (வனத்தில்);
மைவண்ணத்து அரக்கி - அஞ்சனம் போலும் கரிய
நிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு; போரில் - செய்த
போரில்; உன் வைண்ணம் கண்டேன் - உன் கையின்
திறத்தைப் (வில்லினது ஆற்றலை) பார்த்தேன்; இங்குக் கால்
வண்ணம் - இந்த இடத்தில் உன் திருவடியின் திறத்தை;
கண்டேன் - பார்க்கலானேன்.
மழை வண்ணத்து அண்ணல்: கண்டாரின் மனக் கொதிப்பை
நீக்கும் குளிர்ந்த தன்மையுடையவன்; கருநிறம் பொருந்தியவன்;
கைம்மாறு கருதாது கருணையை மழையாகப் பொழிபவன் இராமன்.
மைவண்ணத்து அரக்கி: பொய். கொலை. வஞ்சனை முதலான
தீய பண்புகளுக்கு உறைவிடமானவள் தாடகை - இருவரின்
கருநிறத்துக்கும் வேறுபாடு காட்டப்பெற்றுள்ளது. கை வண்ணமும்
கால் வண்ணமும்: முறையே தீயவர்களை அழித்தலும்
நல்லவர்களைக் காத்தலும் ஆகிய இருவகைத் திறன்கள். 24
