அகலிகைப் படலம் - 556
கௌதமன் அகலிகைக்குச் சாபங் கொடுத்தல்
556.
‘எல்லை இல் நாணம் எய்தி.
யாவர்க்கும் நகை வந்து எய்தப்
புல்லிய பழியினோடும்
புரந்தரன் போய பின்றை.
மெல்லியலாளை நோக்கி.
‘’விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி’’ என்றான்;
கருங்கல் ஆய். மருங்கு வீழ்வாள்.
புரந்தரன் எல்லை இல் - (தன் உடம்பு முழுவதும் சாபத்தால்
கெட்டு விட்டதனால்) இந்திரன் அளவில்லாத; நாணம் எய்தி -
நாணத்தை அடைந்து; யாவர்க்கும் - (தனது நிலையைப்
பார்த்தவர்கள். கேட்டவர்கள்) எல்லோர்க்கும்; நகை வந்து எய்த -
பரிகாசச் சிரிப்பு வந்தெய்தும்படி; புல்லிய பழியினோடும் - தனக்கு
நேர்ந்த பழியோடும்; போயபின்றை - வானுலகத்திற்குச் சென்ற பின்பு;
மெல்லியலாளை நோக்கி - (அம் முனிவன்) மெல்லியலாளான
தன் மனைவியைப் பார்த்து; விலைமகள் அனைய நீயும் -
(தீய ஒழுக்கத்தால்) வேசியைப் போன்ற நீயும்; கல் இயல் - கல்
வடிவம்; ஆதி என்றான் - ஆகுக என்று சபித்தான்; கருங்கல்ஆய்
- (உடனே) அவள் கருங்கல் வடிவாய்; மருங்கு வீழ்வாள் -
பக்கத்திலே வீழ்வாள் ஆயினாள்.
விலைமகள் அனையவள்: உண்மையில் அகலிகை நெஞ்சறியக்
கற்பிழந்தவள் ஆகாள். இருந்தும் கௌதமன் சினத்தால் உண்மையை.
ஆராய்ந்து பாராமல் ‘விலைமகள் போன்றவள்’ அகலிகை என்று
கூறுகிறான். 22
