அகலிகைப் படலம் - 557

bookmark

அகலிகை வேண்டக் கௌதமன் சாபம்
நீங்கும் வகை கூறுதல்

557.

‘’பிழைத்தது பொறுத்தல் என்றும்
   பெரியவர் கடனே; அன்பால்.
அழல் தருங் கடவுள் அன்னாய்!
   முடிவு இதற்கு அருளுக!’’ என்ன.
‘’தழைத்து வண்டு இமிரும் தண் தார்த்
   தசரதராமன் என்பான்
கழல்-துகள் கதுவ. இந்தக்
   கல் உருத் தவிர்தி’’ என்றான்.
 

(அவ்வாறு    விழுகின்ற  அகலிகை  அம்  முனிவனை நோக்கி)
அழல் தரும்   -   (தன்னுடைய    நெற்றிக்    கண்ணிலிருந்தும்.
புன்   சிரிப்பிலிருந்தும்)    நெருப்பைச்     சிதறறும்;     கடவுள்
அன்னாய் - உருத்திர  மூர்த்தியை ஒத்த முனிவனே!;  பிழைத்தது
பொறுத்தல் -  சிறியோர்  செய்த பிழையைப் பொறுப்பது; என்றும்
பெரியவர் கடனே -   எக்காலத்தும்  பெரியோர்களின் கடமையே
ஆகும்; என்பர் - என்று கூறுவர் (முன்னோர்);  இதற்கு  முடிவு -
(ஆதலால்) இச்  சாபத்திற்கு  ஒரு  முடிவை;  அருளுக  என்ன -
அருள்வீராக என்று வேண்டி நிற்க; தழைத்து வண்டு  -  (அதற்கு
இரங்கிய   அம்  முனிவன்) செழிப்புடையதாய் வண்டுகள்; இமிரும்
தண்தார் - ஒலிக்கும் குளிர்ந்த  பூமாலையை   அணிந்த;   தசரத
ராமன்  என்பான்  -  தசரத  ராமன் என்பவனது;  கழல்  துகள்
கதுவ - திருவடித்  தூள் உன்மேல் படியும்  போது;  இந்தக்  கல்
உரு - இந்தக் கருங்கல் வடிவம்;  தவிர்தி என்றான்  - நீங்குவாய்
என்று (சாபம் நீங்கும் வழியும்) அருளினான்.

சிறியர்   பெரியர்: சிறியவர் செய்த பிழை பெருங்கேடு தருவதாக
இருப்பினும்  பெரியவர் அதனைப்  பொறுக்க  வேண்டும்;  அதுவே
அவர்களது  உயர்வான  கடமையாகும்.    அழல்   தரும்  கடவுள்:
நெருப்புப்  போன்ற  செந்நிறம்   பொருந்திய   சிவன்:   அக்கினி
தேவனைப்  போன்ற  தூய்மையுடையவன் - என்று சொல்லலாம். 23