அகலிகைப் படலம் - 547
அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டை
மூவரும் காணுதல்
மிதிலை நகரின் மதிற்புறத்தே அகலிகை கல்லாய்க் கிடந்த
மேட்டைக் காணல்
547.
இனைய நாட்டினில் இனிது சென்று.
இஞ்சி சூழ் மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின்
புறத்து வந்து இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி
மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர்
வெள்ளிடைக் கண்டார்.
இனைய நாட்டினில் - இத்தகைய மிதிலை நாட்டிலே; இனிது
சென்று - இனிய மகிழ்ச்சியோடு அடைந்து; இஞ்சி சூழ் மிதிலை -
மதில்களால் சூழப்பட்டுள்ள மிதிலை நகரை; புனையும்
அலங்கரிக்கின்ற; நீள்கொடிப் புரிசையின் - உயர்ந்த
கொடிகளையுடைய புறமதிலின்; புறத்து வந்து இறுத்தார் - வெளியிலே
வந்து தங்கினார்கள்; மனையின் மாட்சியை - (அவ்வாறு தங்கி)
இல்லறத்திற்குச் சிறப்பான கற்பினை; அழித்து இழி -
அழியச்செய்ததால் இழிவை அடைந்தன; மாதவப் பன்னி -
பெருந்தவத்தனான கௌதமரின் மனைவியான அகலிகையின்;
கனையும் மேடு உயர் - (சாப உருவில்) அடர்ந்த மேடாக உயர்ந்து
தோன்றுகின்ற; கருங்கல் - கருங்கல்லாகக் (கிடப்பதனை); ஓர்
வெள்ளிடைக் - ஒரு வெட்டவெளியிலே; கண்டார் - கண்டார்கள்.
விசுவாமித்திரன் முதலிய மூவரும் மிதிலையின் மதிலுக்குப் புறத்தே
தங்கினர். அப்பொழுது கௌதம முனிவன் மனைவியான அகலிகை
அம்முனிவனின் சாபத்தால் கல்லாய்க் கிடக்கும் இடத்தைப்
பார்த்தார்கள். பன்னி: பத்நி(மனைவி) என்னும் வடசொல் பன்னி என
மருவியது. 13
