அகலிகைப் படலம் - 548

bookmark

அகலிகை முன்னைய வடிவம் பெறுதல்

இராமனது திருவடி பட அகலிகை முன்னை வடிவம் பெறல்.
 
548.

கண்ட கல்மிசைக் காகுத்தன்
   கழல் - துகள் கதுவ.-
உண்ட பேதைமை மயக்கு அற
   வேறுபட்டு. உருவம்
கொண்டு. மெய் உணர்பவன்
   கழல் கூடியது ஒப்ப.-
பண்டை வண்ணமாய் நின்றனள்;
   மா முனி பணிப்பான்;
 
கண்ட  கல்மிசை  - (அவ்வாறு) கண்ட கல்லின்மேலே; காகுத்தன்
கழல் துகள் - இராமனது திருவடித் துகள்; கதுவ - பட்டதால்; உண்ட
பேதைமை - (தான்) மனத்திற் கொண்டுள்ள அறியாமையாகிய;  மயக்கு
அற - இருள் மயக்கம் நீங்குமாறு; மெய் உணர்பவன் -  உண்மையான
தத்துவ  ஞானம்  பெற்றவன்;  வேறுபட்டு  - தனது  அஞ்ஞானமாகிய
அறியாமை  நிலை  மாறி; உருவம் கொண்டு - உண்மை வடிவம்  (புது
ஞானஸ்வரூபி)   அடைந்து;   கழல்   கூடியது   ஒப்ப  -  பரமனது
திருவடிகளை  அடைவதைப்  போல; பண்டை வண்ணமாய் -  (அந்த
அகலிகை) முன்னைய வடிவத்தோடு; நி்ன்றனள் -  எழுந்து  நின்றனள்;
மா   முனி   பணிப்பான்   -  (அதனைக்  கண்ட)  விசுவாமித்திரன்
இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்.  

அகலிகை   நல்லுருவம் பெறல்: திருமாலின்திருவடி  சேர்பவர்  தம்
கருமம்  ஒழிந்து  இப்  புன்மையான  உடம்பை  ஒழித்து    ஒளிமிக்க
உருவத்தை   அடைவதுபோல.  இராமனது  திருவடிப்பொடி   சேர்ந்த
அளவில்   இவளது   சாபம்   நீங்கியது.  தனது  கல்லுருவம்   மாறி
முன்னைய  நல்லுருவத்தைப் பெற்றாள். பேதைமை  மயக்கு:  அவிச்சை
(அஞ்ஞான)   யின்   தொடர்ச்சி.  மெய்யுணர்தல்:   பிறப்பு.   இறப்பு.
வீடுகளையும்  அவற்றின்  காரணங்களையும்   விபரீத  ஐயங்கள் நீங்கி
உண்மையாக   அறிதல்.   முக்தி   பெறுவார்நிலை:   நிலம்  முதலான
ஐம்பூதங்களாலான   இந்தக்  கரும  வினையுடலை   நீக்கி.  ஒளிமிக்க
தெய்வீக  உடம்பைப்  பெறுதல்  வான்மீகம்  - மிதிலைக்கு   அருகில்
செல்லும்  போது  ஆச்சிரமம்  ஒன்று  பாழடைந்து கிடப்பது  குறித்து
இராமன்  விசுவாமித்திரனைக் கேட்டான். அப்பொழுது அம்  முனிவன்
அகலிகையின்   வரலாறு   கூறி.   அந்த   ஆச்சிரமம்   செல்லுமாறு
வேண்டுகிறான்.  இராமனும் சாப விமோசனம் உண்டாகுமென்று  கருதி
அங்கே சென்றான்.                                        14