அகலிகைப் படலம் - 544

bookmark

யாறுகளின் சிறப்பு

544.

முறையினின் முது மேதியின்
   முலை வழி பாலும்.
துறையின் நின்று உயர்மாங்கனி
   தூங்கிய சாறும்.
அறையும் மென் கரும்பு ஆட்டிய
   அமுதமும். அழி தேம்
நறையும் அல்லது. நளிர் புனல்
   பெருகலா - நதிகள்.
 
நதிகள்  -  (மிதிலை நாட்டு) ஆறுகளில்; முறையினில் - ஒன்றைத்
தொடர்ந்து ஒன்றாக;  முது  மேதியின்  முலைவழி  பாலும் - முதிய
எருமைகளின்   மடிகளில்  இருந்து  பெருகின்ற  பாலும்;  துறையிலே
நின்று  -  கரைகளிலே   நிறைபெற்று;  உயர்  மாங்கனி  -  ஓங்கி
வளர்ந்துள்ள  மாமரங்களின்  பழங்களிலிருந்து;   தூங்கிய  சாறும் -
வழியும் சாறும்;  அறையும்  மென்  கரும்பு  - வெட்டப்பட்ட இனிய
சுவையான   கரும்புகளை;  ஆட்டிய  அமுதமும்  -    (ஆலையில்
வைத்து)  ஆட்டுவதால்  பெருகும்  அமுதம்  போன்ற  இனிய பாலும்
(கரும்புப்  பால்);  அழிதேன்  நறையும் - தேன் கூடுகள் சிதைவதால்
சிந்திப்  பெருகும்  மணமுள்ள  தேனும்; அல்லது - (என்னும்  இவை
மாறி   மாறிப்  பெருகுவதேயல்லாமல்)  இவையல்லாமல்;  நளிர்புனல்
பெருகலா - குளி்ர்ந்த நீர் பெருக இடம் பெறாதன.  

நதி  வளம்:  நதிகளை  வருணிக்குங்கால் தாமாகப் பால் சுரக்கின்ற
எருமை  வளம்.  மாமரச்  சோலை   வளம்  கரும்புக் குவியல். தேன்
பெருக்கம் ஆகியவற்றைக் கூறி நாட்டு  வளத்தையும்  புலப்படுத்தினார்.
முதுமேதி:  பருவம்  நிரம்பிக்  கன்றை   ஈன்ற  எருமை.  மேற்கோள்
‘கனைத்திளங்  கற்றெருமைகன்றுக்   கிரங்கி  நினைத்து  முலைவழியே
நின்று பால் சோர’ - திருப்பாவை-12                          10