அகலிகைப் படலம் - 494

bookmark

துருவாசமுனிவன் இந்திரனுக்குச் சாபமிடுதல்

494.    

‘ “இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு.
   உவகையின் ஈந்த
மன்றல்அம் தொடை இகழ்ந்தனை;
   நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும்
   உவரி புக்கு ஒளிப்ப.
குன்றி. நீ துயர் உறுக” என
   உரைத்தனன். கொதித்தே.
 
உவரி- உப்புச் சுவையுடையது;  இங்கே  பாற்கடலைக்   குறித்தது;
குன்றி - பெருமை குறைதல். மனவேதனையால் உடல் குன்றுதல்.

‘உலா   வருகின்ற   உன்   சிறப்பைக்   கண்டு    இம் மாலையை
உனக்குத்   தந்தேன்;   நீயோ   அதனை இகழ்ந்தாய். ஆதலால். உன்
பெருநிதிகளும்.     செல்வங்களும்    மறையட்டும்’  என்று துருவாசன்
இந்திரனை நோக்கிச் சபித்த செய்தி கூறுவது இப்பாடல்.         3-14