அகலிகைப் படலம் - 478

bookmark

மூவரும் சோணை நதியை அடைதல்

கலித்துறை
  
478.

அலம்பும் மா மணி ஆரத்தோடு
   அகில் அளை புளின
நலம் பெய் பூண்முலை. நாகு இள
   வஞ்சியாம் மருங்குல்.
புலம்பும் மேகலைப் புது மலர்.
   புனை அறல் கூந்தல்.
சிலம்பு சூழும் கால். சோணை ஆம்
   தெரிவையைச் சேர்ந்தார்.
 
அலம்பும்  மாமணி  ஆரத்தோடு   -    கழுவப்பட்ட    சிறந்த
இரத்தினங்களும்  சந்தனமும்;  அகில்  அளை  புளினம்  - அகிலும்
(தன்னிடம்)  பொருந்திய  மணற்  குன்றுகளாகிய;  நலம்  பெய்  பூண்
முலை  -   இன்பத்தைத்    தருகின்ற    ஆபரணங்களை   அணிந்த
தனங்களையும்; நாகு இள வஞ்சி ஆம் மருங்குல் - மிக இளமையான
வஞ்சிக்கொடி  போன்ற  இடையையும்; புதுமலர் புலம்பும் மேகலை -
அப்பெழுது    பூத்த   புது   மலரே  (ஒலிக்கும்)  மேகலை  என்னும்
அணிகலனாகவும்; புனை  அறல்  கூந்தல்  - அழகிய கருமணலாகிய
கூந்தலையும்;  சிலம்பு  சூழும்  கால்  -  மலையைச்சுற்றி  செல்லும்
வாய்க்கால்களாகிய   சிலம்பென்னும்   அணியைச் சுற்றிலும் பூண்டுள்ள
பாதங்களையும்  உடைய;  சோணை ஆம்  தெரிவையை - சோணை
என்னும்   நதியாகிய   பெண்ணை;  சேர்ந்தார்  -  (விசுவாமித்திரன்.
இராமன். இலக்குவன் ஆகிய) மூவரும் போய் அடைந்தார்கள்.  

இது     உருவக அணி. இங்கு நதி பெண்ணாக   உருவகப்படுத்தப்
பெறுகிறது;   அதனால்   பெண்ணின்  தன்மை   நதியிடத்து   ஏற்றிக்
கூறப்பட்டுள்ளது.  மணற்குன்று  -  முத்து  முதலிய  இரத்தினங்களும்.
சந்தனக்   கட்டையும்  அகிற்கட்டையும்   மலையிலிருந்து   ஓடிவரும்
ஆற்றினால்  கொண்டு  வரப்பட்டு  மணற்   குன்றைச்  சேர்ந்துள்ளன.
சிலேடை:   நதி   -   மாமணி   ஆரத்தோடு  அகில்  பொருந்துதல்;
மணற்குன்றுகள்;   வஞ்சிக்கொடி;  மலர்கள்;   கருமணல்   மலையைச்
சுற்றிச்  செல்லும்  வாய்க்கால்கள். பெண்: மாமணி ஆரத்தோடு  அகில்
பொருந்திய  அணிகளோடு  கூடிய   தனங்கள்;  இடை (வஞ்சிக்கொடி);
மேகலை  என்னும்  இடையணி   (மலர்வரிசை);   கூந்தல் (கருமணல்);
சிலம்பு   என்னும்   அணியை   அணிந்துள்ள   பாதங்கள்.  அறலும்
கூந்தலும்.  நெளிவாலும்  கருமையாலும் அழகாலும்  கூந்தலுக்கு அறல்
உவமையாயிற்று. சிலம்பு: மலை; காற்சிலம்பு. கால்:  வாய்க்கால்;  பாதம்.
சோணை:  மகத நாட்டின் வழியே ஓடுவதும் கங்கையில்  கலப்பதுமான
ஓர் உபநதி.                                               1