அகலிகைப் படலம் - 479

bookmark

சூரியாத்தமன வருணனை

479.

நதிக்கு வந்து அவர் எய்தலும்.
   அருணன்தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான்
   தேரொடும். கதிரோன்.
உதிக்கும் காலையில் தண்மை
   செய்வான். தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்
   போல். கடல் குளித்தான்.
 
அவர்   -   அம்   மூவரும்;   நதிக்கு   வந்து  எய்தலும்  -
சோணையாற்றுக்கு  வந்து  சேர்ந்த  சமயத்தில்;  கதிரோன் உதிக்கும்
காலையில்  -  ஆயிரம்  கதிர்களையுடைய   சூரியன்  மறுநாள் தான்
கிழக்குத்   திசையில்  உதிக்கும்  பொழுது;  தண்மை  செய்வான்  -
(அம்மூவர்க்கும்)    குளிர்ச்சி   தரும்   பொருட்டு;  தனது  உருவில்
கொதிக்கும்   வெம்மையை  -   தனது   வடிவத்திலே   இயல்பாக
எப்பொழுதும்   கொதிக்கின்ற  வெப்பத்தை;   ஆற்றுவான்போல்  -
இப்பொழுது   தணித்துக்   கொள்பவனைப்போல;   அருணன்  தன் 
நயனம் - (தன் சாரதியாகிய) அருணனுடைய  கண்கள்; கதிக்கும்   - 
விரைந்து  செல்வதைக்  காட்டிலும்;   முந்துறு   கலினம்  மான்  -
முந்திச் செல்லுகின்ற  கடிவாளத்தைக்   கொண்ட  குதிரைகள்  பூட்டிய;
தேரொடும் - தனது  தேருடன்; கடல் குளித்தான் - மேற்குக் கடலில்
மூழ்கினான்.

தற்குறிப்பேற்ற  அணி:  மேற்கில் கதிரவன் மறைதலை. அவன் தன்
வெம்மையைத்  தணிக்கும்பொருட்டு   மேற்குக்  கடலில்  மூழ்கியதாக
வருணித்தார்.  கதிரவன் முதலான  கிரகங்கள். நட்சத்திரங்கள் மேற்கே
மறைந்து   கிழக்கே  உதிக்கும்.   அதனை  மேற்குக்  கடலில்  மூழ்கி
மறைந்து  கிழக்குக்  கடலில்   மீண்டும் எழுவதாகக் கூறுதல் கவிமரபு.
தேர்ப்பாகனும் குதிரையும்: தேர்ச்  சாரதியின் கண் பார்வை எவ்வளவு
தூரம்  செல்லுமோ  அதைவிட   அதிக  தூரம்  அவனது குதிரைகள்
செல்லும். அருணன்: கதிரவனின் தேர்ப்பாகன்.                   2