
வேள்விப் படலம்

பாலகாண்டம்
பாலகாண்டம் என்பது இராமாயணத்தின் முதல் காண்டமாகும். பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிக்கிறது. இராமபிரானின் இளம்பருவ வாழ்க்கையை விவரிப்பதால் இது பாலகாண்டம் எனப் பெயர் பெற்றது. பாலகாண்டம் மொத்தம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டுள்ளது.
வேள்விப் படலம்
(விசுவாமித்திரர் தனது வேள்வியைச் செய்து முடித்ததைக் கூறும் பகுதியாகும். தேவர்கள் கூறியபடி இராமனுக்கு விசுவாமித்திரன் படைக்கலம் தருவதும். அப்படைக் கலன்கள் இளையவனைப் போலப் பணிபுரிவோம் என முன்வருதலும் பிறகு மூவரும் வேள்வி செய்வதற்குரிய இடம் நாடிச் சேர்தலும் முனிவன் வேள்வியைத் தொடங்குவதும் அரக்கர் வருகையும் முனிவர்கள் ராமனைச் சரண் அடைய - அவர்களைக் கலங்க வேண்டா என்று கூறி இராமன் அரக்கரை அழித்தலும் சுபாகுவைக் கொன்று. மாரீசனைக் கடலில் சேர்த்தும். விசவாமித்திரன் இராமனைப் பாராட்டுதலும் சனகன் வேள்வியைக் காண மூவரும் மிதிலை நோக்கிச் செல்லத் தொடங்குதலும் வேள்விப் படலத்துள் கூறப்படும் நிகழ்ச்சிகளாகும்.)
தேவர்களின் விருப்பப் படியே தன்னிடம் இருந்த அனைத்து திவ்விய அஸ்த்திரங்களையும் அந்த தசரத குமாரர்கள் இருவரிடத்திலும் மகிழ்ச்சியுடன் கொடுத்தார் விசுவாமித்திரர் . அவற்றைப் பெற்றுக் கொண்ட அந்த இணை பிரியா சகோதரர்கள் விசுவாமித்திரரை வணங்கி ஆசி பெற்றார்கள்.
பின்னர் விசுவாமித்திரர் அஸ்திர மந்திரங்கள் அனைத்தையும் ஸ்ரீ ராமருக்கு உபதேசித்து, அஸ்திர தேவதைகளை இராமருக்கு வசப்படுத்த வேண்டி ஜபம் செய்தார். அந்தக் கணமே அந்த தேவதைகள் யாவும் ஒளிமயமான உடலுடன் முனிவரை வந்து வணங்கி, பின்னர் இராமபிரானை நோக்கி, "சக்கரவர்த்தித் திருமகனே! நாங்கள் உமக்குப் பணி செய்பவர்கள்" என்று சொல்லி நின்றன.
இராமர் அதைக் கேட்டு மகிழ்ந்து. அந்த தேவதைகளை வணங்கி, " யாம் அழைக்கும் போது தாங்கள் வந்து எனக்கு உதவ வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். பின்னர் விசுவாமித்திரரைப் பார்த்து ஸ்ரீ ராமர், " முனிவர் பெருமானே! அஸ்த்திரப் பிரயோகத்தை உபதேசித்தது போல உபஸம்ஹார மந்திரங்களையும் உபதேசிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். தசரத மைந்தன் இராமனின் வேண்டுதல் படி அம்மந்திரங்களையும் உபதேசித்து, அந்தத் தேவதைகளையும் ஸ்ரீ ராமருக்கு வசப்படுத்தினார் (கௌசிகர்). பின்பு மூவரும் இரண்டு காத வழி தூரம் நடந்து சென்றதும், ஸ்ரீ ராமர் பெருமான் பெரும் ஓசை ஒன்றைக் கேட்டார். அது பற்றி, விஸ்வாமித்திரர் அவர்களிடம் ஸ்ரீ ராமரே வினவினார். அதற்கு அந்த பெரும் தவசி "அன்பு ராமா, பிரம்மனின் மனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மானச சரசிலிருந்து உற்பத்தியாகி வரும் சரயூ ஆற்றில் கோமதி நதியும் வந்து கலப்பதால், இத்தகைய பெரும் ஓசை எழுகிறது" என்றார்.
பின்னர், அம்மூவரும் தங்களது பயணத்தை மேலும் தொடர்ந்தனர். அதன் பயனாய், பாவம் தீர்க்கும் அந்தப் புனித நதியை அடைந்தார்கள். அந்தப் பெரும் நதியைக் கண்ட ராமர் கௌசிகரிடம்," இந்த நதியின் வரலாறு என்ன? அதைத் தாங்கள் எனக்குக் கூறி அருள வேண்டும்" என்று வேண்டி நின்றார்.
கௌசிக முனிவர் அந்த நதியின் வரலாற்றை ஸ்ரீ ராம, லட்சுமணரிடம் கூறத் தொடங்கினார் " திருமாலின் திருவுந்தித் தாமரை மலரில் தோன்றிய பிரம்மதேவனின் மைந்தனும், அரசர்களுள் சிறந்த அரசனுமான குசனுக்கு வைதர்ப்பி என்ற பெயருடைய மனைவி இருந்தாள். அவர்கள் இருவரது இல்லற வாழ்வின் பயனாக குசன், குசநாபன், ஆதூர்த்தன், வசு என்ற நான்கு பிள்ளைகள் அவர்களுக்குப் பிறந்தார்கள். அவர்களுள் குசன் கௌசாம்பி நகரத்திலும், குசநாபன் மகோதய நகரத்திலும், ஆதூர்த்தன் தருமாரணிய நகரத்திலும், வசு கிரிவிரச நகரத்திலும் அரசு புரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
குசனாபனின் மனைவி கிருதாசி என்னும் தேவ மங்கை ஆவாள். குசனாபனுக்கு அவளிடத்தில் நூறு கட்டழகுடைய மகளிர் பிறந்தார்கள். பருவ வயதை நெருங்கிய போது அவர்கள் தங்கள் தோழி மார்களுடன் பூஞ்சோலைக்குச் சென்றனர். அப்போது அங்கே வந்த வாயு தேவன்.அந்தப் பெண்களின் அழகைக் கண்டு காமுற்றான். தன்னை மணந்து கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டினான்.
அதற்கு அந்தப் பெண்கள், "நாங்கள் தந்தைக்குக் கீழ்படிந்தவர்கள்.அவரிடம் சென்று தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள்.அதற்கு அவர் உடன் பட்டு, தாரை வார்த்து தங்களுக்கு எங்களைத் திருமணம் செய்து கொடுத்தால்.பின்பு நாங்கள் உங்களுடன் கூடுவோம்!" என்று பதில் உரைத்தனர்.ஆனால் , வாயுதேவன் அவர்கள் கூறியதை பொருட் படுத்தாமல் அப்பெண்களை மீண்டும், மீண்டும் வற்புறுத்தினான். அதற்கு, அந்தப் பெண்கள் இணங்க மறுக்கவே. கோபம் கொண்ட வாயுதேவன் உடனே அவர்களுடைய சரீரத்தில் புகுந்து அவர்களது முதுகை முறித்துக் கூனிகளாக்கினான். குசனாபனுடைய பெண்கள் நூறு பேரும், துன்பம் தாங்காமல் வாயு தேவனால் தங்களுக்கு நேர்ந்த கதியை அவர்களுடைய தந்தையிடம் விளக்கிக் கூறினார்கள். குசநாபன், தன் பெண்கள் வாயுதேவனை பதிலுக்கு சபித்து விடாமல் பொறுமையுடன் திரும்பி வந்ததன் பொருட்டு அவர்களை பாராட்டினான். பிறகு, தனது குரு மார்களின் ஆலோசனைப் படி, சூளி முனிவரின் புத்திரனான பிரம்மதத்தனுக்கு அவர்களைக் கன்னிகாதானம் செய்து கொடுத்தான்.
பிரம்மதத்தன் அவர்களை தனது கை கொண்டு தீண்டிய மாத்திரத்தில், அவர்களது கூன் நீங்கி அவர்கள் தங்களது பழைய அழகிய ரூபத்தை அடைந்தார்கள். அது கண்டு மகிழ்ந்த குசநாபன், தனது மகள்களையும், மருமகனான பிரம்மதத்தனையும் காம்பிலிய நகரத்துக்கு அனுப்பி வைத்தான். அவனுக்கு, வெகு காலமாக தனக்கு ஒரு புத்திரன் இல்லையே என்ற குறை இருந்ததால், அதனைப் போக்கிக் கொள்ள புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். அந்த யாகத் தீயின் மத்தியில் இருந்து காதி என்ற மகனைப் பெற்றான் குசநாபன். அந்த வேள்வியில் இருந்து பிறந்த, தனது மகனுக்கு முடி சூட்டி விட்டு குசநாபன் சுவர்க்கத்தை அடைந்தான். அந்தக் காதிக்குப் பிறந்தவர்கள் தான் நானும், சகோதிரி கௌசிகி என்பவளும்.
கௌசிகி தன் கணவராகிய ரிசீக முனிவரை நன்கு வழிபட்டு வந்தாள். அதனால், அவள் தனது உடலுடன் சுவர்க்கம் சென்று அடைந்தாள். பின்பு, நான்முகனின் கட்டளைக்கு இணங்க, உலக மக்களின் துயர் துடைக்க இமயமலைக்கு வந்து, தேவர்கள் ஆசி கூற நதியாகப் பெருகினாள். அவளே இந்தச் சரயு நதி. நான் அவளுடன் பிறந்த தொடர்பினால் அம்மலைச் சாரலிலே வசித்து வருகிறேன். இப்போது நான் செய்ய விருக்கும் வேள்வியின் பொருட்டு சித்தாசிரமத்துக்கு வந்துள்ளேன்." என்று அந்த சரயு நதியின் வரலாற்றை தம்பிமார்கள் இருவரிடமும் கூறி முடித்தார் கௌசிகர் என்னும் பெயருடைய விசுவாமித்திரர்.
முனிவர் கூறிய செய்திகளை எல்லாம் கேட்டு மகிழ்ந்த ராமன், மேலும் அம்முனிவருடன் தனது நடை பயணத்தை தொடர்ந்தான், அப்போது அவர்களது பயணத்தின் நடுவே ஒரு அழகிய சோலை ஒன்று தென்படவே,ஸ்ரீ ராமர் "இந்த அழகிய சோலையைப் பற்றிய செய்தியையும் எங்களுக்குக் கூறி அருள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார் .விசுவாமித்திரரும் அந்தச் சோலையின் கதையை அவர்கள் இருவரிடமும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்." வீரத்தில் விளைந்த சத்திரிய குமாரர்களே, திருமால் தங்கி இருந்து நெடுங்காலம் தவம் செய்த பெருமையைப் பெற்ற இடம் இது. அவ்வாறு இருந்த அக்காலத்தில் மாவலி என்னும் சக்கரவர்த்தி, தனது வலிமையால் விண்ணையும், மண்ணையும் வசமாக்கிக் கொண்டான். மூவுலகங்களையும் வென்றான். தானே அனைத்தையும் ஆள முடியாத காரணத்தாலும், தனது நிலையில் அவன் திருப்தி அடையாத காரணத்தாலும், ஒரு மாபெரும் வேள்வியைத் தொடங்க நினைத்தான் .அதன் பொருட்டு தான் ஆண்ட இந்திர லோகத்தை தனது மந்திரிகளிடம் ஒப்படைத்தான். பின்பு அரக்கர் குலத்தில் பிறந்த மாவலி, தான் நினைத்த படியே அந்த யாகத்தை சிறப்பாக நடத்தத் தொடங்கினான். அந்த யாகத்தின் சமயத்தில், அவனிடம் யாசகம் கேட்டு வந்த அனைவருக்கும் இல்லை என்று கூறாமல், அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தான்.
மாவலியின் அந்த யாகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. ஒரு வேளை, அந்த யாகம் வெற்றி அடைந்து விட்டால். பிரகல்லாதனின் பேரனும், அசுர குலத்தின் தலைவனுமான மாவலி அதிக சக்தி படைத்தவனாக மாறிவிடுவான் என்ற உண்மையை அறிந்த இந்திரன், உட்பட அனைத்து தேவர்களும் கலங்கினர். அப்போது இந்த சோலையில் தவம் செய்து வந்த திருமாலை தேவந்திரன், தலைமையிலான அனைத்து தேவர்களும் சந்தித்து மாவலியிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும் படி வேண்டி நின்றனர். காக்கும் கடவுளான ஸ்ரீ ஹரி விஷ்ணு, அவர்களுக்கு அபயம் அளித்து மாவலியை தாம் பார்த்துக் கொள்வதாக, அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.
தேவர்களுக்கு கொடுத்த வாக்கின் படி மாவலியை கொல்லத் தீர்மானித்தார் விஷ்ணு. அதன் பொருட்டு வாமன அவதாரம் எடுத்தார். கைகளில் கமண்டலம், குள்ள உருவம், இன்னொரு கையில் ஒரு குடை, நெற்றியில் திருமண். மொத்தத்தில் பார்ப்பவர்கள் அனைவரும் தங்கள் மனதை பறிகொடுக்கும் படியான ஒரு அந்தண சிறுவனின் வடிவத்தை எடுத்தார் விஷ்ணு. மாவலி சக்கரவர்த்தியின் யாக சாலைக்கு சென்றார். அச்சமயம் சரியாக அன்றைய நாள் யாகம் முடிந்து மாவலி சக்கரவர்த்தி தன்னை நாடி வந்த அந்தணர்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்டபடி தானங்களை செய்து கொண்டு இருந்தார். வந்தவர்கள் அனைவரும், மனம் நிறைய திருப்தியுடன் சென்றார்கள்.
இப்போது, வாமன அவதாரம் எடுத்த மகா விஷ்ணுவின் முறை. வாமண ரூபம் எடுத்த விஷ்ணு, மாவலியிடம் சென்று பலவாறு அவரைப் புகழ்ந்து உரைத்தார். அப்புகழ் உரையைக் கேட்டு மகிழ்ந்த மாவலி சக்கரவர்த்தி," தேவரீர்! தங்களுக்கு என்ன வேண்டும்? கூறி அருளுங்கள் உடனே அவற்றை தருகிறேன்" என்றார்.
"அப்படியா? மிக்க மகிழ்ச்சி. மாவலி மன்னனே! என்னிடம் உனக்குக் கருணை உண்டென்றால், என் காலால் மூன்றடி நிலம் தருக!" என்று சொல்லி முடித்தார் வாமன ரூபத்தில் வந்த விஷ்ணு. அவ்வாறு அவர் கூறி முடிப்பதற்குள் மாவலி " தந்தேன்" என்று சொன்னார்.
அப்போது மாவலியின் அருகில் இருந்த அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மனம் நெருடவே. தனது ஞானக் கண் கொண்டு, வந்திருக்கும் அந்தச் சிறுவன் யார் என்று உற்று நோக்கினார். அவரது அந்தத் தவ மிகுதியான பார்வையால் அச்சிறுவனின் ரூபம் அகன்று நான்கு கைகளுடன் ,சங்கு , சக்கரம் , கதை, மற்றும் அழகிய செந்தாமரையுடன், பச்சை மா மலை போல, செம்பவள வாய் மலர மகா விஷ்ணு தனது உண்மையான தோற்றத்துடன் காட்சி அளித்தார். கண்ட காட்சியை மனதில் பதியவைத்து திடுக்கிட்டார் சுக்கிராச்சாரியார்.
மாவலியை அருகில் அழைத்தார் சுக்கிரர், அவரிடம் " சக்கரவர்த்தியே, நீ இந்தச் சிறுவனுக்கு எந்த தானமும் செய்யாதே, காரணம் வந்திருப்பது மகா விஷ்ணு. உன்னை மோசம் செய்யவே அந்தக் கபடதாரி வந்துள்ளான். எச்சரிக்கை" என்றார்.
அதைக் கேட்ட மாவலி, " அதுவா உண்மை? அப்படியானால் மிக்க மகிழ்ச்சி. நான் கண்டிப்பாக தானம் செய்தே தீர வேண்டும். எல்லோரைக் காட்டிலும் சிறந்தவர் திருமால். அவரே தமது பெருமைகளைக் குறைத்துக் கொண்டு யாசகனாய் என்னிடம் பொருள் வேண்டி நிற்கிறார். அப்படி அவரே வந்து வேண்டும் போது, அதனை அவருக்குக் கொடுப்பதே எனக்குப் பெருமையாகும்! "என்று கூறி மூன்றடி நிலத்தை வாமனனாக வந்த திருமாலுக்கு தாரை வார்த்துக் கொடுக்க, திருமால் தன் சிறிய கைகளைக் கொண்டு அந்த மாவலியின் தான நீரைப் பெறுவதற்கு நீட்டினார். அப்போது சுக்கிரன், தனது வார்த்தையை மாவலி கேட்காததால், ஒரு சிறு வண்டு வடிவங் கொண்டு நீர் பாத்திரத்தின் துவாரத்திலே நுழைந்து நீர் விழாதபடிக்கு தடுத்தார். அதனை அறிந்த திருமால் துவார சோதனை செய்பவர் போலத் தமது கையில் வைத்திருந்த தருப்பைப் புல்லை அதனுள் விட்டுக் குத்தினார். அந்தத் தருப்பைப் புல் சுக்கிரனின் ஒரு கண்ணைக் குத்திக் குருடாக்கியது. அதனால், சுக்கிரன் மிகவும் துன்பப்பட்டு அந்த இடத்தை விட்டு சென்றார். இப்போது அடைப்பு நீங்கியதும் துவாரத்தில் இருந்து நீர் கொட்டியது. மாவலி சக்கரவர்த்தி எதிர்ப்புகள் ஏதும் இன்றி திருமால் கேட்ட அந்த மூன்றடி நிலத்தை அவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.
மாவலி தாரை வார்த்துக் கொடுத்ததும் வாமனனான திருமால் பேருருவம் கொண்டார்.அந்தக் கணத்திலேயே தமது ஓரடியால் மண்ணுலகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார்.மூன்றாவது அடிக்கு இடமில்லாது போகவே, மாவலியை நோக்கி " மன்னனே மூன்றாவது அடியை வைக்கும் இடத்தைக் காட்டு!" எனக் கேட்டார்.தான் கொடுத்த தானம் நிலை பெற தனது தலையையே சமர்பிக்க விரும்பி, " தேவரீர் உமது பொற் பாதத்தை எனது தலை மீது மூன்றாக அடியாக வைத்து அருள் புரியுங்கள்" எனக் கூறி மண்டியிட்டு தலை குனிந்தான் மாவலி.அதன்படியே வாமனனும் மாவலியின் சிரசின் மேல் தமது திருவடியை வைத்து அழுத்தி அவர் உயிர் நீங்கும் படி செய்தார்.இந்திரனுக்காக முன்பு தம்முடைய திரிலோகத்தைக் கொடுத்திருந்தார் திருமால்.அதனைக் கவர்ந்து கொண்ட மாவலி இறந்ததும், மீண்டும் அந்த லோகத்தைத் தேவேந்திரனுக்கே திருமால் திருப்பித் தந்தார்.
இப்படி இந்த இடத்தில் தவம் செய்து கொண்டே கிருதயுகத்தில் மாவலியை வதம் செய்தார் திருமால். அது மட்டும் அல்ல,இந்த சோலையில் அமைந்துள்ள ஆசிரமத்தில் தான் காசியப முனிவர் பிற்காலத்தில் தவம் செய்து சித்தி பெற்றார்." என்று விசுவாமித்திரர் அந்தச் சோலையின் சிறப்பை அந்த சத்திரிய சகோதரர்கள் இருவரிடமும் கூறி முடித்தார்.
பின்னர் விசுவாமித்திரர் மேலும் தொடர்ந்தார் "ராமா, இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த இடத்தைத் தான் நானும் எனது யாகம் நிறைவேறத் தேர்ந்தெடுத்து உள்ளேன். அதே சமயத்தில் , அரசிளங் குமாரர்களே! இந்த இடத்தில் அரக்கர்கள் அதிக அளவில் நடமாடி வருவதால். அவர்களிடம் இருந்து எனது யாகத்தைக் நீர் இருவரும் காப்பீராக" என்று கூறி விட்டு, யாகத்திற்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு, யாகத்தை தொடங்கினார் விசுவாமித்திரர்.
தசரத சக்கரவர்த்தியின் அந்த இரு மைந்தர்களும் ஆறு நாட்கள் விசுவாமித்திரர் செய்த அந்த யாகத்தைக் கண் இமைக்காமல் காத்து வந்தார்கள். ஆறாவது நாள் தாண்டியவுடன், ஆகாயத்தில் இடியும் அஞ்சும் படி, கார் காலத்து நீர் கொண்ட மேகம் போல சுபாகு மற்றும் மாரீசன் தலைமையில் பெரும் அரக்கர் கூட்டம் பறந்து வருவதை இராம, லக்ஷ்மணர் கண்டனர்.
அப்போது ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனிடம் மேலே பறந்து வந்த அந்தக் கொடிய அரக்கர்களை சுட்டிக் காட்டி, " முனிவர் பெருமான் சொன்ன கொடிய அரக்கர்கள், இவர்கள் தான்!" என்றார்.
வானில் பறந்து வந்த அந்த அரக்கர் கூட்டத்தார் அனைவரும் விசுவாமித்திரர் செய்த யாகத்தைக் கண்டு கோபம் கொண்டு, நர, நர வென்று தங்களது கொடிய பற்களைக் கடிக்கத் தொடங்கினர். பின்னர் வசைச் சொற்களை எல்லைகள் இன்றிப் பேசினர்.
இராமபிரான் அந்த அரக்கர்களைக் கொல்லத் தீர்மானித்தார். அவர்களைக் கொல்லும் போது வெளிப்படும், அவர்களுடைய இரத்தமும், மாமிசத் துண்டுகளும் ஓம குண்டத்தில் விழுந்து அதனால் ஓமம் பங்கம் அடையாதபடி, ஸ்ரீ ராமர் முதலில் கௌசிக முனிவர் யாகம் செய்யும் இடத்திற்கு அம்புகளைக் கொண்டே ஒரு மேல் மறைவைச் செய்தார்.பிறகு சுபாகு, மாரீசன் தலைமையில் வந்த அரக்கர் படைகளை எதிர்கொள்ளத் தயாரானார்.
முதலில் மாரீசன் மேல் மானவாஸ்த்திரத்தைப் பிரயோகித்தார். அந்த அஸ்திரம் அவனைக் கொண்டு போய் சமுத்திரத்துக்கு அப்பால் பல யோசனை தூரம் தாண்டிச் சென்று வீசியது. அடுத்து சுபாகுவின் மீது ஆக்கினேயாஸ்திரத்தை ஏவ, அது அவனை ஆகாயத்திலேயே வைத்து சாம்பல் கூட மிஞ்சாத படி எரித்தது. மற்ற அரக்கர்களின் மீது வாயவியாஸ்திரத்தைப் பிரயோகித்தார். அதனால் அஞ்சிய அந்த அரக்கர்கள் வான வீதியெங்கும் பயங்கரக் கூச்சலுடன் ஓடித் திரிந்தார்கள். ஆனாலும் ஸ்ரீ ராமரின் அந்த அஸ்திரம் அவர்களை துரத்திக் கொண்டு போய் சம்மாரம் செய்தது. மொத்தத்தில் சுபாகு, மாரீசன் தலைமையில் வந்த அரக்கர் படையில் மாரீசன் தவிர ஏனைய அரக்கர்கள் அனைவரும் அழிந்தார்கள். மாரீசன் மீது ஏனோ கருணை காட்டியே அவனை ஆகாயத்தில் தனது அஸ்திரத்தால் வீசி எறிந்தார் ராமர். இவ்வாறாக அப்பகுதியில் அன்று முதல் அரக்கர்கள் அட்டகாசம் ஒழிந்தது, அந்த வனத்தில் இருந்த முனிவர்கள் எல்லோரும் அந்த கோதண்டராமனை இதன் பொருட்டு வாழ்த்தினார்கள்.
தேவர்கள் வானுலகில் இருந்த படி வாசனை மலர்களை ராமன் மீது பொழிந்தனர். அச்சமயத்தில் விசுவாமித்திரரும் அவரது யாகத்தை வெற்றியுடன் முடிக்கவே, அவரும் ராமனை வாழ்த்தினார். இவ்வாறு அன்றைய பொழுதும் மங்களகரமாக முடிந்தது.
அடுத்த நாள், காலைப் பொழுதும் பூபால இசை கேட்க விடிந்தது, தசரத குமாரர்கள் இருவரும் தங்கள் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு. நெற்றியில் திருமண் அணிந்து, விசுவாமித்திரரை பார்க்கச் சென்றனர். அப்போது அந்தத் தவயோகி தியானத்தில் இருந்து எழுந்தார், ஸ்ரீ ராமர் அந்த முனிவரை நோக்கி "ஐயனே ! இன்று நான் செய்யும் பணி யாது?" என்று வினவினார்.
அம்முனிவர் அதற்கு," ஞானத்தின் பிறப்பிடமே, செய்வதற்கு இன்னும் நிறைய காரியங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பின்பு செய்யலாம். இப்பொழுது மிதிலாபுரியை ஆளும் ஜனகமகாராஜன் செய்யும் யாகத்தை நாம் போய்ப் பார்ப்போம், மிதிலாபுரியின் திசை நோக்கிப் புறப்படுக!" என்று ஆணையிட. இராம, லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரரைப் பின் தொடர்ந்தனர்.