அகலிகைப் படலம்

அகலிகைப் படலம்

bookmark

பாலகாண்டம்

பாலகாண்டம் என்பது இராமபிரானின் இளம்பிராய வாழ்க்கையை விவரிக்கும் பகுதி. பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிக்கும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டுள்ளது.

அகலிகைப் படலம்

(கௌதம முனிவனின் மனைவியும், சனகனின் புரோகிதனான சதானந்த முனிவனுடைய தாயுமான அகலிகை, இந்திரனால் ஏமாற்றப்பட்டு அவனோடு கூடி, பின்னர்க் கௌதம முனிவனது சாபத்தால் கல்லுருவம் அடைகிறாள். இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரனோடு மிதிலைக்குச் செல்லும்போது, இராமனது திருவடித் துகள்பட்டுத் தனது சாபம் நீங்கி, முன்னைய பெண் வடிவத்தை அடைந்த வரலாற்றைக் கூறுவது இப் படலம். விசுவாமித்திரன் முதலான மூவரும் சோணை நதியை அடைந்து சோலையில் தங்குகின்றார்கள்; பின்பு கங்கையைக் கண்டு மிதிலை நாடு சேர்கின்றார்கள். அப்பொழுது அதன் மதிற்புறத்தே கல்லாய்க் கிடந்த அகலிகைக்குப் பெண்ணுருவம் தருகின்றான் இராமன். வியப்புற்ற இராமன் கேட்டதற்கிணங்க விசுவாமித்திரன் அகலிகை வரலாறு கூறுகின்றான். பின்னர் மூவரும் அகலிகையைக் கௌதம முனிவனிடம் சேர்ப்பித்து மிதிலையின் புறமதிலை அடைகின்றார்கள்.)

அடர்ந்த கானகத்தின் வழியாகச் சென்ற விசுவாமித்திரர், இராமலக்ஷ்மணர் ஆகிய மூவரும், சோணை என்னும் நதியை அடைந்தார்கள். அவர்கள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்த நேரம் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. இரவுப் பொழுதைக் கழிக்க அம்மூவரும் அருகில் இருந்த ஒரு சோலைக்குச் சென்று தங்கினார்கள். இராமபிரான் அந்த சோலையின் அழகைக் கண்டு வியந்தபடி விசுவாமித்திரரிடம், "இந்தச் சோலையைப் பற்றித் தாங்கள் கூற வேண்டும்?" என்று கேட்டார்.

விசுவாமித்திரரும் இராமனின் விருப்பப்படி அந்த சோலையைப் பற்றிக் கூறத் தொடங்கினார், "சேனாதிபதி வேண்டுமென்று வேண்டிய தேவர்களின் வேண்டுதலால், வாயுதேவனைச் சகாயமாகக் கொண்ட அக்கினி தேவன் சிவபெருமானின் திருமேனியில் இருந்து வெளிப்பட்ட வீரியத்தைத் தாங்கிக் கங்கையில் விட்டான். கங்கை அதனைத் தாங்க மாட்டாமல் கைலாயத்தின் அருகேயுள்ள இந்த நானற்காட்டில் விட்டாள். அந்த வீரியத்தில் இருந்து சுப்பிரம்மணியக் கடவுள் அங்குத் தோன்றிக் கார்த்திகைப் பெண்கள் பால் கொடுக்க ஆறுமுகங் கொண்டு வளர்ந்தார். அக்கடவுள் வளர்ந்த இடமே இதுவாகும்!" என்று அந்த சோலையைப் பற்றிக் கூறி முடித்தார் கௌசிகர். பின்னர் அம்மூவரும் அந்த அழகிய சோலையில் இரவுப் பொழுதைக் கழித்தனர்.

சூரியன் உதயமானவுடன் அம்மூவரும் அங்கிருந்து புறப்பட்டு, அழகிய கங்கை ஆற்றை வந்து சேர்ந்தார்கள். கங்கையைக் கண்டு வியந்தபடி நின்று கொண்டிருந்தார் இராமபிரான். அப்போது விசுவாமித்திரர் ராமனிடம், "இந்தப் பரந்த நதி உனது குலத்தவர்களால் தான் இந்த பூமிக்குக் கிடைத்தது" என்று கூற. இராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரரிடம் ஆவலுடன் அந்த கங்கை நதியின் வரலாற்றைக் கூற வேண்டினர். விசுவாமித்திரரும் கங்கையின் அக்கதையை கூறத் தொடங்கினார், "ராமா கவனமாகக் கேள், முன்னொரு காலத்தில் சூரிய குலத்தில் பிறந்த சகரன் என்பவன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவன் இந்த பூமி முழுவதையும் ஒருவனாய் அரசாண்டவன். அந்த சகர மகாராஜனுக்கு இரண்டு மனைவியர்கள். விதர்ப்ப தேசத்து அரசனுடைய மகளாகிய கேசினி என்பவள் அவனுடைய முதல் மனைவி. காசியப முனிவருக்கு வினதையிடம் தோன்றியவளும், கருடனின் உடன் பிறந்தவளுமான சுமதி அவனுடைய இரண்டாவது மனைவி.

சகரச் சக்கரவர்த்தி தன் மனைவியருடன் இமயமலையின் அருகில் இருக்கும் பிருகுப்ரஸ்ரவணம் என்னும் மலைக்குச் சென்று தவம் புரிந்தான். பிருகு முனிவர் அவனது தவத்தினால் மகிழ்ந்து அங்கே தோன்றினார். அவனை நோக்கி, "சகர மன்னா! உனது மனைவி இருவரில் ஒருத்தி வம்சவிருத்திக்குரிய புத்திரன் ஒருவனைப் பெறுவாள். மற்றொருத்தி மகா பலசாலிகளான அறுபதினாயிரம் மக்களைப் பெறுவாள்" என்று கூறி, அங்கிருந்து மறைந்தார்.

இதனைக் கேட்டு மகிழ்ந்தான் சகரன். நாட்கள் நகர்ந்தன, பிருகு முனிவர் அருளியபடியே கேசனி ஒரு புத்திரனைப் பெற்றாள். அம்மைந்தனுக்கு அஸமஞ்சன் என்று பெயரிட்டனர். இளையவள் சுமதி சுரைக்காயைப் போல ஒரு கர்ப்பப்பிண்டத்தைப் பெற, அது வெடித்து அறுபதினாயிரம் குமாரர்கள் தோன்றினார்கள். அஸமஞ்சன் ஊரில் உள்ளவரின் குழந்தைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு போய்ச் சரயுநதி நீரில் தள்ளி, அவை துடித்து இறப்பதைக் கண்டு சிரித்து விளையாடும் கொடுந் தொழில் உடையவனாக விளங்கினான். அதனால் அவனை, அவனுடைய தந்தையான சகரன் காட்டுக்குத் துரத்தி விட்டார். மூத்தாள் மக்கள் போல இளையாள் மக்கள் பாவிகள் அல்லர்.

அக்காலத்தில் பூலோகத்தில் யாரேனும் நூறு அசுவமேக யாகம் நடத்தினால், அவர்களுக்கு இந்திரப் பதவி கிடைத்து விடும். அப்போது இருக்கிற தேவேந்திரன் அந்த நூறு அசுவமேக யாகத்தைச் செய்த அந்த நபருக்குத் தனது பதவியை விட்டுத் தந்தே ஆக வேண்டும். இதன் காரணமாக, அக்காலத்தில் பூலோகத்தில் யார் அசுவமேக யாகம் நடத்தினாலும் இந்திரன் அது நிறைவேறாதபடி தன்னால் ஆன அனைத்துக் கெடுதல்களும் செய்வது வழக்கம்.

சகரன் அப்போது அசுவமேக யாகம் செய்யத் திட்டமிட்டான். பெரும் முனிவர்களைக் கொண்டு அவனது அசுவமேக யாகம் தொடங்கப்பட்டது. இந்திரனைப் பற்றி சகரனுக்குத் தெரியும், அதனால் அசுவமேக யாகத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் குதிரையை, அஸமஞ்சனின் மகனான அம்சுமானைக் கொண்டு பாதுகாக்கச் செய்தான். அம்சுமானும் குதிரையைக் கண் இமைக்காமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டு வந்தான், இருந்தாலும் இந்திர தேவன் அக்குதிரையை இரவோடு, இரவாக தனது மாயையினால் கவர்ந்து சென்று பாதாள உலகத்தில் கடும் தவம் புரிந்து வந்த கபிலரின் ஆசிரமத்தில், அம்முனிவருக்கே தெரியாமல் அவர் அருகில் இருந்த மரத்தில் கட்டிப் போட்டு விட்டுச் சென்று விட்டான். அசுவமேக யாகம் நிறைவடையும் சமயத்தில் அக்குதிரை காணாமல் போன செய்தியைத் தனது பாட்டனாரான சகரனுக்குத் தெரிவித்தான் அம்சுமான். சகரன் உடனே தனது மைந்தர்கள் அறுபதினாயிரவர்க்கும், குதிரை காணாமல் போன செய்தியைக் கூறி அதனை தேடிக் கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

இதனைக் கேள்விப்பட்ட சகரனின் அந்த பலசாலியான மகன்கள் அறுபதினாயிரவர்க்கும் கடும் கோபம் வந்தது. அவர்கள் பூமி முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் அக்குதிரயைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பிறகு வின்னுலகத்திலும் தேடினார்கள், அங்கும் அந்தக் குதிரை இல்லை. பாதாளலோகத்திலும் அக்குதிரையைத் தேட சித்தம் கொண்டு, பாதாளலோகம் சென்றார்கள். அப்போது கபிலரின் ஆசிரமத்தை அடைந்த அவர்களது கண்களில் (இந்திரன் அபகரித்துச் சென்ற) அந்த யாகக் குதிரை தென்பட்டது. விஷயம் அறியாமல், தீர விசாரிக்காமல் கபிலர் தான் குதிரையைத் திருடிக்கொண்டு வந்தார், என்று அவர் மீது குற்றம் சுமத்தி அவரைப் பல அவதூறு வார்த்தைகளைக் கொண்டு கண்டபடி பேசினார்கள். அத்துடன் அவரது தவத்திற்கும் இடையூறாகத் திகழ்ந்ததால், கோபம் கொண்ட முனிவர் அவர்கள் அறுபதினாயிரம் பேரையும் தனது தவ வலிமையால் எரித்துச் சாம்பலாக்கினார். இந்தச் செய்தியை ஒற்றர்கள் மூலம் சகரன் அறிந்து கொண்டு, ஆறாத துயரம் அடைந்தான். தன்னுடைய பேரனான அம்சுமானை அழைத்து "மைந்தர்களை இழந்த நான் யாகத்தையும் இழக்கக் கூடாது" என்று கூற. அம்சுமான் பாதாள லோகம் சென்று, கபிலரின் பாதத்தில் விழுந்து வணங்கி நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறினான். அம்சுமானின் பணிவான வார்த்தைகளைக் கேட்டக் கபிலருக்கு அவன் மீது இறக்கம் ஏற்படவே, குதிரையை அவிழ்த்துக் கொண்டு போகுமாறு அவனுக்கு மறு உத்தரவு அளித்தார். அம்சுமானும், கபிலரை மீண்டும் வணங்கி விட்டு அக்குதிரையை மீட்டு ஆயோத்தியா கொண்டு சென்றான்.

சகரனும் அவ் வேள்விக் குதிரை கிடைத்த சந்தோஷத்தில் வெற்றிகரமாக அந்த அசுவமேக யாகத்தை முடித்தான். ஆனால், அவனது அறுபதினாயிரம் புத்திரர்களின் ஆத்மாவும் முக்தி கிடைக்காமல் நரகத்தில் அலைந்து வருவதை அம்சுமானுக்குத் தெரிவித்தான் சகரன். அம்சுமானும், அதனை உணர்ந்தான். அம்சுமானுக்கு திலீபன் என்ற மகன் பிறந்தான், திலீபன் தனது முன்னோர்களான அறுபதினாயிரம் பேரையும் நரகத்தில் இருந்து மீட்டு எடுக்க முயற்சி செய்தும், அவன் தனது முயற்சியில் வெற்றி அடையவில்லை. அவனது ஆயுட் காலம் முடிந்தது தான் மிச்சம். தீலிபனுக்குப் பகிரதன் என்ற மகன் பிறந்தான், பகீரதனுக்குத் தனது தந்தையின் ஆசைப்படி தனது முன்னோர்களை சுவர்கத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் வரவே. சிரஞ்சீவியும், தனது குலகுருவுமான வசிஷ்டரிடம் அதற்கான வழியைக் கேட்டான். அதனைக் கேட்ட வஷிஸ்டர் பகீரதனிடம் "அது சாதாரண வேலை இல்லை மகனே, அதற்கு பிரம்மனின் கருணை வேண்டும். நீ அதற்குக் கடுமையான தவத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கும்" என்று பகீரதனிடம் பதில் உரைத்தார்.

வசிஷ்டரின் மொழிப்படி இமயமலைச் சாரலில் பதினாறாயிரம் ஆண்டுகள் பகீரதன் தவம் செய்ய, பிரம்மன் தோன்றினார். அப்படித் தோன்றிய பிரம்மன் பகீரதனை நோக்கி, "பகீரதனே! உனது சிறந்த தவத்தைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். கபிலமுனிவரின் கோபத்தினால் அழிந்தவர்கள் உன்னுடைய முன்னோர்கள், ஆகையால் ஆகாய கங்கையின் நீரிலே, அவர்களுடைய எலும்பு படியுமானால் அவர்கள் நற்கதி அடைவார்கள். அதே சமயத்தில் ஆகாய கங்கை நேரடியாக இந்த பூமியில் விழுந்தால், அதன் வேகத்தை பூமியினால் தாங்க முடியாது. அத்துடன் மட்டும் அல்ல. அதனைத் தாங்கும் வலிமை சிவ பெருமான் ஒருவருக்கே உண்டு. ஆகையால், கங்கையைத் தாங்கும் படி வேண்டி முதலில் சிவ பெருமானிடம் வரம் பெறுவாயாக!” என்றார்.

பிரம்மன் கட்டளைப் படி பகீரதன் சிவ பெருமானை நோக்கிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். சிவபெருமான் பகீரதனின் தவத்தைக் கண்டு மகிழ்ந்து அவன் கேட்கும் வரத்தைத் தர அவன் முன் தோன்றினார். அப்போது பகீரதன் பிரம்மன் சொன்னபடி, சிவ பெருமானிடம், கங்கை பூமிக்கு வரும் போது அதனைத் தாங்க வேண்டும் என்று வரம் கேட்க. சிவ பெருமானும், அந்த வரத்தை பகீரதனுக்கு அளித்தார்.

பின்பு, பகீரதன் கங்காதேவியைப் பூமியில் வரும் படி வேண்டுவதற்காக, அவளை நோக்கி ஐயாயிரம் வருடம் தவம் செய்தான். அதனைக் கண்டு மகிழ்ந்த கங்கா தேவி, பகீரதன் முன் தோன்றினாள். பகீரதன் தனது வேண்டுதலை கங்கா தேவியிடம் சொல்ல, அதற்குக் கங்கை "நான் இந்த பூமியில் நதியாக வருவதைப் பற்றி ஒன்றும் எனக்கு விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால், சிவபெருமான் உன்னுடைய விருப்பத்தை நிறை வேற்றுவதற்காகச் சொன்ன வார்த்தைகள் வெறும் விளையாட்டாகச் சொன்னவை. ஆதலால், மீண்டும் அவர் கருத்தை நீ நன்றாக அறிய, சிவனை நோக்கி மேலும் சிறந்த தவத்தைச் செய்வாயாக!" என்று கூறி விட்டு மறைந்தாள்.

கங்கை கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டு பகீரதன் முதலில் துன்பம் அடைந்தாலும். தனது முன்னோர்களின் முக்தியின் பொருட்டு, மீண்டும் சிவ பெருமானை நோக்கி இரண்டாயிரத்து ஐநூறு வருடம் கடும் தவம் புரிந்தான். அதன் பயனாய் சிவ பெருமான் அவன் முன் தோன்றி, "பகீரதா! உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு பகீரதன் சிவனை நோக்கி, "எம்பெருமானே! கங்கா தேவி தாங்கள் கூறிய சொற்கள் வெறும் விளையாட்டாகக் கூறியவை என்று சொன்னார்கள். ஆகவே, தங்களை நோக்கித் தவம் செய்தேன். என்னுடைய முன்னோர்கள் நற்கதி அடைய, தாங்கள் தான் கருணை செய்ய வேண்டும்!" என்று வேண்டினான்.

இதற்கு மறுமொழியாக சிவ பெருமான், "இதற்காகவா இத்தனை கடுமையான தவத்தைச் செய்தாய்? கங்கையின் சொல்லுக்காகக் கலங்காதே. எனது வார்த்தைகள் ஒன்றும் விளையாட்டு இல்லை. நான் உனக்கு மீண்டும் வாக்களிக்கிறேன், யாம் கங்கையின் நீர் சிறிதும் சிந்தாதபடி, அதனைத் தடுத்துப் பூமியைக் காத்து அருள்வோம்" எனக் கூறி விட்டு மறைந்தார் ஈசன்.

பகீரதன் மீண்டும் கங்கையை நோக்கி இரண்டாயிரத்து ஐநூறு வருடகாலம் தவம் செய்தான். பகீரதனுடைய தவம் முடிந்த உடனே கங்கை, பிரம்மனுடைய சத்தியலோகமும் இந்திரனுடைய சுவர்க்க லோகமும் நடுங்கப் பேராரவாரத்துடன் பூலோகத்தில் வந்து சேர்ந்தாள். அவ்வாறு, கங்கா தேவி பூமிக்கு வரும் சமயத்தில் ஈசன் கங்கை நதியின் அதீத பிரவாகத்தைத் தனது சடையில் தாங்கி, பூமி தாங்கும் அளவுக்கு மிகச் சிறியதொரு பாகத்தை வெளியிட்டார்.

பூமியில் இறங்கிய கங்கை பகீரதன் வழிகாட்ட, விரைந்து சென்றாள். அப்போது வழியில் இருந்த ஜஹ்நு முனிவரின் யாகத்தை தனது பிரவாகத்தால் அழித்தாள். கோபம் கொண்ட அந்த முனிவர் கங்கையை அப்படியே வற்றும் படி தனது தவ வலிமையால் பருகி விட்டார். பகீரதன், முனிவரின் இந்தச் செயலால் மிகவும் மனம் நொந்து, அவரிடம் தனது சூழ்நிலையை கண்களில் கண்ணீர் வர எடுத்துரைத்தான். அவன் மீது கருணை கொண்ட ஜஹ்நு முனிவர் கங்கை நதியை தனது காதின் வழியாக, வெளியிட்டார். மீண்டும் கங்கையின் பிரவாகம் தொடங்கியது. ஜஹ்நு முனிவர் மீண்டும் அவ்வாறு வெளியிட்டதால் "ஜாஹ்நவீ" என்ற பெயரையும். பகீரதன் மூலம் இந்த பூமிக்குக் கொண்டு வரப்பட்டதால் "பகீரதி" என்ற பெயரையும் கங்கை பெற்றாள்" என இவ்வாறு கங்கையின் கதையை விசுவாமித்திரர் ஸ்ரீ ராமனுக்குக் கூறி முடித்தார்.

ஸ்ரீ ராமர் இதனைக் கேட்டு வியப்புற்று கங்கையை வணங்கினார். இளவல் லக்ஷ்மணனும் கங்கையைத் தொழுது கொண்டான். பின்பு கங்கையைக் கடந்த அம்மூவரும் விசாலை நகரத்தை அடைந்தார்கள். அந்த நாட்டு அரசன் அம்மூவரும் வந்த செய்தி கேட்டு, அவர்களை வரவேற்று உபசரித்தான். பின்னர் மூவரும், அந்த அரசனிடம் இருந்து விடைபெற்று விதேக நாட்டை அடைந்தார்கள். அந்த விதேக நாட்டைக் கடந்து தான் மிதிலை செல்ல வேண்டும். அங்கிருந்து பார்த்தாலே மிதிலையின் மதில்களைக் காணலாம். ஸ்ரீ ராமர் அந்த இடத்தை சுற்றிப் பார்த்த போது ராமரின் பூ போன்ற பாதங்கள், அவரை அறியாமல் ஒரு கல்லின் மீது இடரவே. அந்தக் கல் ஒரு அழகிய பெண்ணின் ரூபத்தை எடுத்து ஸ்ரீ ராமரைக் கை கூப்பி வணங்கியது.

"இது என்ன ஆச்சர்யம், ஒரு கல் அழகிய பெண் ஆனதே! ஒரு வேளை இது கூட அரக்கர்களின் மாயையோ" என்று ஸ்ரீ ராமர் நினைக்க. அதனைக் குறிப்பால் அறிந்த விசுவாமித்திரர் இராமபிரானை நோக்கி, "பகீரத சக்கரவர்த்தியின் வம்சத்திற் பிறந்த குமாரனே! இப்போது சிலை வடிவம் நீங்கிப் பெண் வடிவு பெற்று, மகிழ்வோடு நாணத்தினால் இங்கு ஒதுங்கி நிற்பவள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகை. தேவேந்திரன் தீவினையை விரும்பிச் செய்ய, அதனால் கௌதம முனிவர் அவனுக்கு ஆயிரம் கண் ஏற்படச் சாபம் அளித்தார்" என்று கூறினார்.

அதைக் கேட்டு வியப்புற்ற ஸ்ரீ ராமர், விசுவாமித்திரரிடம் "முனிவர் பெருமானே! இவளோ உலகத்தாய் போன்று குற்றமற்றவலாகத் தோன்றுகிறாள். இப்படிப் பட்டவளுக்கும் கல்லாக மாறும் நிலை நேரிட்டதென்றால், இந்த உலகின் நடப்பை என்னவென்று சொல்வது? இப்படி இவள் உருவம் மாறுபட்டதற்க்குக் காரணம், முற்பிறவியின் ஊழ்வினையா? அல்லது இப்பிறப்பில் ஏதேனும் நேர்ந்தது உண்டா? இதனை விளக்கிக் கூற வேண்டுகிறேன்" என்று, கேட்டுக் கொண்டார்.

விசுவாமித்திரர் அக்கணமே இராமச்சந்திர மூர்த்தியின் விருப்பத்திற்கு இணங்கி, அகலிகை சாபம் பெற்ற அந்தக் கதையைக் கூறத் தொடங்கினார்.

"ராமா, முன்பு ஒரு காலத்தில் படைத்தற் கடவுளான பிரம்மதேவன், முன்பு தன்னால் படைக்கப்பட்ட மக்களின் அங்கங்களில் உள்ள சிறப்பை எல்லாம் எடுத்து அழகு மிகுந்த பெண் ஒருத்தியைப் படைத்தார். அவளுக்கு அகல்யா என்று பெயரிட்டார். இந்திரன் அந்தப் பெண் அழகியைக் கண்டு மோகித்தான். பிரம்மனிடம் சென்று தேவேந்திரன் என்ற செருக்குடன் அகலிகையை தனக்குக் கொடுக்குமாறு கேட்டான். அவனுடைய செருக்கை உணர்ந்த பிரம்மதேவன், அகலிகையை இந்திரனுக்குக் கொடுக்காமல் கௌதம முனிவரிடத்தில் ஒப்படைத்து "இவளைப் பாதுகாத்து வருவீராக!" என்று கட்டளையிட்டார். வெகுகாலம் அம் முனிவர் அவளைப் பாதுகாத்த பின், மீண்டும் பிரம்மனிடமே அவளைக் கொண்டு போய் சேர்த்தார். இத்தனைக் காலாமும், இவ்வளவு அழகான பெண்ணை ஒழுக்கத்துடனும், சபலம் கொள்ளாமலும் அம்முனிவர் பாதுகாத்து வந்ததன் காரணமாக பிரம்மதேவன் மகிழ்ந்து அகலிகையை அவருக்கே மணம் முடித்துக் கொடுத்தார். அதனால் பொறாமையும் கோபமும் கொண்டான் இந்திரன்.

ஒரு நாள் கௌதம முனிவரின் தவக் கூடத்தின் அருகே ஒரு சேவல் வடிவங் கொண்டு, நடு இரவில் கூவினான். முனிவர் பொழுது விடிந்து விட்டதாக எண்ணி நீராடச் சென்றார். உடனே, இந்திரன், இது தான் சமயம் என்று கௌதம முனிவரின் வேடம் கொண்டு, அகலிகையிடம் சென்று அவளுடன் கூடி இன்பம் அடைந்தான். ஒரு கட்டத்தில் வந்திருப்பவன் தனது கணவன் அல்ல என்பதை ஸ்பரிசத்தால் (தொடு உணர்ச்சியால்) அகலிகை அறிந்து கொண்டாலும், இந்திரனின் அந்த அரவணைப்பை அகலிகை விரும்பினாள். "இது தனது கற்புக்குத் தகுதி இல்லை" என்பதையும் மறந்தாள்.

நீராடச் சென்ற கௌதமமுனிவர், தாம் எழுந்து புறப்பட்டு வந்தது நடுநிசி என்பதை அறிந்தார். அவ்வாறு தான் ஏமாந்தது இந்திரனின் வஞ்சனையால் என்பதைத் தம் ஞானக் கண்ணால் அறிந்தார். அதனால் எழுந்த பெருங் கோபத்துடன் முனிவர் தமது தவக் கூடத்துக்கு வந்தார்.

கௌதம முனிவரைக் கண்டதும், கூடிக் குலாவிக் கொண்டிருந்த தேவேந்திரனும், அகலிகையும், வெட்கித் தலை குனிந்தார்கள். இந்திரன் வஞ்சிப்பதில் வல்ல பூனையின் வடிவத்தைப் பெற்று அங்கிருந்து மெதுவாகச் செல்லத் தொடங்கினான். உடனே கௌதம முனிவர் தனது தீப்பொறி பறக்கும் பார்வையால் இந்திரனை நோக்கி, "இந்திரனே! ஒரு பெண்ணின் குறியில் ஆசைப்பட்டு இன்று நீ பெரும் பாவத்தைப் புரிந்து விட்டாய். பிறன் மனைவியைப் பெண்டாள நினைத்த உனக்கு, இதோ நான் கொடுக்கும் சாபத்தைப் பெற்றுக் கொள்! உனக்கு இனி ஒரு போதும் காம இச்சை ஏற்படாமல் இருப்பதற்காக உன் மேனியெங்கும் ஆயிரம் பெண் குறிகள் தோன்றட்டும்!" என்று சபித்தார்.

இந்திரன் தனது உடம்பு முழுவதும் முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட குறிகளைக் கண்டு வெட்கம் அடைந்தான். ஆயினும் வேறு வழியில்லாமல் அந்த உடம்புடன் தனது உலகத்துக்குச் சென்றான். இந்திரன் போன பின்பு, தன் மனையாளைப் பார்த்து, "அகல்யா! பெண்களுக்கு அணிகலனே கற்பு தான். அதனை விட்டு விட்டு வேசியைப் போல ஒழுக்கம் தவறிய நீ கல்லாகக் கடவாய்!" என்று சாபமிட்டார். உடனே அகலிகை அந்த இடத்திலேயே கருங்கல் வடிவமாய் விழுந்தாள்.

கருங்கல்லாக மாறும் முன் அவள்; தன் கணவரை நோக்கி "மணாளரே! நான் அறியாமல் செய்த இந்தக் குற்றத்தைப் பொறுத்தருளக் கூடாதா? நான் பெற்ற இந்த சாபத்துக்கு விமோசனம் தான் என்ன?" என்று வேண்டினாள். அகலிகையின் வேண்டுகோளுக்கு இணங்கிய கௌதமுனிவர், "பெண்ணே! தசரத குமாரனாகிய ஸ்ரீ ராமருடைய திருவடி உன் மீது படும் போது, நீ மீண்டும் உனது கல் வடிவம் நீங்கி சுய ரூபம் பெறுவாய்" என்று சாப விமோசனம் அளித்தார்.

மறுபுறம், தன் உலகத்துக்குச் சென்ற இந்திரனைப் பார்த்த தேவர்கள், பிரம்ம தேவனையும் இந்திரனையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு கௌதம முனிவரிடத்தில் வந்தார்கள். அவரிடம் இந்திரனின் தவறை பொறுத்தருளும் படி வேண்டி நின்றார்கள். தன் கோபம் தீர்ந்த முனிவர். இந்திரனின் உடம்பு முழுவதும் இருந்த ஆயிரம் பெண் குறிகளையும், ஆயிரம் கண்களாக மாற்றி அருள் புரிந்தார். பின்பு, தேவர்களும் தங்கள், தங்கள் உலகத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்" என்று அகலிகையின் கதையை விசுவாமித்திரர் இராமனிடத்தில் கூறி முடித்தார்.

பின்னர் இராமபிரான் அகல்யா தேவியிடம் "தாயே! இது வரை ஏற்பட்ட துன்பத்திற்கு தாங்கள் வருத்தப்படாதீர்கள். நடந்தது, நடந்ததாகவே இருக்கட்டும். இனி வரப் போகும் நாட்களில் தாங்கள் கௌதம முனிவரிடத்தில் மீண்டும் சென்று அவருக்குப் பணி விடை செய்து எஞ்சிய நாட்களை இனிதே கடத்துங்கள்" என்று கூறி முடித்தார். அந்நேரம், இமயமலைச் சாரலில் தவம் செய்து வந்த கௌதம முனிவர் தனது ஞானக் கண்ணால் மனைவின் சாப விமோசனத்தை அறிந்து அவ்விடம் வந்து சேர்ந்தார். அப்போது கௌதமரைக் கண்ட விசுவாமித்திரரும், ஸ்ரீ ராமரும் அவரைப் பணிந்து கொண்டு அவரிடம் அகலிகையை ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடினார்கள். அவர்கள் விருப்பப்படியே கௌதம முனிவர் அகலிகையின் குற்றத்தை மன்னித்து மீண்டும் அவளை தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

அகலிகையை, இவ்வாறு கௌதமரிடம் ஒப்படைத்த விசுவாமித்திரர் மற்றும் இராமலக்ஷ்மணர்கள் மேலும் தங்களது பயணத்தை தொடர்ந்தார்கள். அதன் பயனாய் மிதிலை நகரின் மதிலை வந்து அடைந்தார்கள்.