
மிதிலைக் காட்சிப் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
மிதிலைக் காட்சிப் படலம்
(விசுவாமித்திரன் முதலான மூவரும் மிதிலை நகருள் பல காட்சிகளைக் காண்கிறார்கள். கன்னி மாடத்தில் நின்ற சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்கின்றனர். இராமனது நினைவால் சீதை உற்ற துன்பநிலை - அம் மூவரும் சனகன் எதிர்கொள்ளச் சென்று மாளிகையில் தங்குதல் – இராமனுக்குச் சதனாந்தர் விசுவாமித்ரின் வரலாறு கூறுதல் - கௌசிக முனிவன் தவம் செய்தல் - தேவர்கள் கௌசிகனைப் பிரம ரிசியாக்குதல் - சீதையின் உரு வெளிப்பாடு கண்டு இராமன் கலங்குதல் - பின் அந்த இராமன், முனிவரோடும் தம்பியோடும் சனகனது வேள்விச் சாலையை அடைதல் - சனகன் விசுவாமித்திரனை வினவல் - அவரும் விடையளித்தல் ஆகியன அடங்கியுள்ளன.)
மிதிலா நகரத்தின் மாட மாளிகையின் மேல் அழகிய பட்டுக் கொடிகள் பறந்து கொண்டு இருந்தன. அக்கொடிகள் அனைத்தும், இராமபிரானை நோக்கி,"சீதா பிராட்டியை மணந்து கொள்ள விரைந்து வா!" என்று அழைப்பது போல அசைந்து, அசைந்து அவைகள் பறந்தன. விசுவாமித்திர முனிவருடன் இராம, லக்ஷ்மணர்கள் மிதிலையின் பெரிய வீதிகளில் சென்றார்கள். பெண்கள் தங்கள் கணவன்மாருடன் கொண்ட ஊடலினால், கழற்றி எறியப்பட்ட பூமாலைகள் வாடிக் கிடந்தன.