
வரைக்காட்சிப் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
வரை காட்சிப் படலம்
(மாண்புமிக்க சந்திர சைலத்தின் தோற்றத்தையும் நிகழ்ச்சிகளையும் மாந்தர் காணுகின்றார்கள். சிறந்த மலைக் காட்சிகளைக் கண்டு வியக்கின்றார்கள். அம்மலைமேல் இனிதாக விளையாடுகின்றார்கள். அந்திக் காலத்தில் மலையினது காட்சியைக் கண்டு மகிழ்கின்றார்கள். இருளிலே தீப ஒளி எங்கும் விளங்குகின்றது. அப்பொழுது வானில் மதி தோன்றியதால் மகளிர் மகிழ்ச்சியடைகின்றார்கள். கூத்தர் ஆடுகின்றார்கள். மலையில் பலவகை ஓசைகள் எழுகின்றன. மாந்தர் இரவை ஒருவாறு கழிக்கின்றனர்.)
அந்த சந்திர சைலத்தில் அந்திப் பொழுதும் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. நிலவின் வெளிச்சத்தில் செந்தளிர் விட்ட மரங்கள் நிறைந்த அந்த மலை அப்போது செந்நிற மணியால் இழைக்கப்பட்டது போல் தோன்றியது. அந்த அழகைப் பார்க்கும் போது ஆழ்வார்கள் பாடிய பாடலின் வரியான "பச்சை மா மலை போல் மேனி" என்ற வரிகளுக்கு அந்த மலை பொருத்தமாக (அப்பொழுது) காட்சி அளித்தது.
இரவுப் பொழுதில் சேனை தங்கி இருந்த இடம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. அக்காட்சி கடல் முழுவதும் செந்தாமரை பூத்தது போல இருந்தது. அந்நேரத்தில், வானில் சந்திரனைக் கண்டப் பெண்களின் முகங்கள் மலர்ந்தது. அந்த மகிழச்சி, அவர்கள் மீட்டிய யாழின் இசையிலேயே தெரிந்தது. அப்பொழுது ராஜ குலத்தை சேர்ந்த பெண்கள் குளிர்ச்சிக்காக அதுவரையில் அணிந்து இருந்த மல்லிகை மாலையை நீக்கி கருமுகை மாலையை அணிந்தார்கள்.
சேனையில் இருந்த சில ஆண்கள் மதன நூலில் சொல்லப்பட்ட படி தங்கள் மனைவி மாருடன் கூடி இன்பம் கண்டார்கள். சிலர் தங்கள் மனைவியரின் கோபம் தீர்க்க அவர்களைப் பல வகையில் புகழ்ந்தார்கள். இன்னும் சிலர், அந்நேரத்தில் ஆடல், பாடல்கள் என அந்த இரவுப் பொழுதை களித்தனர். இப்படி அந்த மலை பலவகை உணர்ச்சிகளாலும், செயல்களாலும் சூழப்பட்டு இரவு முழுவதும், தான் ஒன்றும் அறியாதது போல மௌனமாகக் காட்சி அளித்தது.