
பூக்கொய் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பூக்கொய் படலம்
சூரியன், தன் கதிர்களை செந்நிறம் கொண்டு விரித்தது. அச்சமயத்தில் தசரத சக்கரவர்த்தி தனது பரிவாரங்களுடன் சோணை ஆற்றை அடைந்தார். அதன் அருகே இருந்த சோலையினுள் அவர்கள் உச்சி நேரத்தில் நுழைந்தார்கள்.
சோலையில் நுழைந்த பெண்களின் அழகைக் கண்ட மயில்கள், தங்களின் நடை அழகைக் காட்டிலும், இவர்களின் நடை அழகு சிறந்து காணப்படுகிறேதே! என்று நினைத்து, அந்த நினைப்பினால் வந்த வெட்கத்தால் அப்பெண்கள் முன்னிலையில் அந்த மயில்கள் நிற்க முடியாமால் கூசி சோலையை விட்டே பறந்து சென்றன. அச்சோலையின் அழகைக் கண்ட இளம் பெண்கள், அங்கு தனது தோழிகளுடன் விளையாடத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் பாடிய இனிய பாடல்களைக் கேட்ட குயில்கள் மதிமயங்கி சற்று நேரம் கூவாமல் காணப்பட்டன. அந்த சோலைகளில் உள்ள மலர்களைக் கொண்டு சில பெண்கள் மலர் மாலையை தொடுக்க ஆசைப்பட்டார்கள். அதற்கான வேலையையும் துவங்கினார்கள். வலிய ஆண்களே பெண்களின் மென்மையான கை தீண்டும் போது வளைந்து கொடுக்கிறார்கள் என்றால், அந்தப் பூங்கொடிகள் எம்மாத்திரம்?.
அந்த சோலையில் இருந்த வண்டுகள், அயோத்தியின் இளம் பெண்களின் கைகளை காந்தள் மலர் எனவும், முகத்தை செந்தாமரை எனவும், கண்களை கருங்குவளை எனவும், மூக்கை எட்பூ எனவும், உதடுகளை பவளவல்லி எனவும், காதுகளை வெள்ளரிப் பூ எனவும், கைகளை தாழம்பு எனவும், பாதங்களை செவ்வல்லி எனவும் மொத்தத்தில் அப்பெண்களே ஒரு மலர் காடு என்று நினைத்துக் கொண்டு அவர்களை சுற்றிச் சுற்றி வந்தது. அவர்கள் அதனால் சிறிதே அஞ்சினார்கள்.