ஆண் யானைகள் பெண் யானைகளுடன் வருவது போல ஆண்கள் பெண்களுடன் நீர் நிலையை நோக்கி வந்தார்கள். அந்தத் தெள்ளிய நீர் நிலையில் அவர்கள் தங்க மீன்களைப் போல நீந்தி விளையாடினார்கள். அச்சமயத்தில் நீர் நிலையில் பூத்து இருந்த குவளை மலர்கள் அப்பெண்களின் அழகிய கண்களைப் போல காட்சி அளித்தன. அது போல, அங்கு காணப்பட்ட தாமரை மலர்கள், அப்பெண்களின் முகத்தைப் போலக் காட்சி அளித்தன. ஆழ் நீரில் கணவரது மார்பைத் தழுவி நின்ற பெண்கள் திருப்பார் கடலில் திருமாலின் மார்பைத் தழுவிய லக்ஷ்மியைப் போலக் காட்சி அளித்தனர்.
அந்த நீர் நிலையில், பெண்கள் நீரை எடுத்து கையில் இருந்த, நீர் வீசும் கருவிகள் கொண்டு வாரி இறைக்க அதன் காரணமாக அந்த நீர் நிலையில் காணப்பட்ட வாளை மீன்கள் நீருக்கு மேல் துள்ளி விழுந்தன. இது கண்ட பெண்கள் சிலர் பயத்தில் கணவனின் தோள்களைத் தழுவிக் கொண்டார்கள். அக்காட்சி, வெற்றித் திருமகள் அந்த வீரர்களை அணைத்துக் கொண்டது போலத் தோன்றியது.
அந்த நீர் தடாகத்தில் சில பெண்கள் புனுகு தைலத்துடனே கஸ்துரியையும் கொண்டு தூவினார்கள். சிலர் மலர் மாலைகளை வீசி எறிந்தார்கள். வேறு சிலர் தன் கணவரின் மீது பீச்சாங் குழலால் நீரைச் சொரிந்தார்கள்.
அப்போது நீரில் தான் சிரிக்கும் போது, கூடவே சேர்ந்து சிரிக்கும் பிரதிபிம்பத்தைக் கண்ட ஒருத்திக்கு, தன்னுடன் வாழ்ந்த இணைபிரியாத் தோழி ஒருத்தியின் ஞாபகம் வர, மனமுவந்து தான் அணிந்து இருந்த விலை உயர்ந்த முத்தாரத்தை, அப்பிரதி பிம்பத்திடம் தனது தோழியாகவே நினைத்து எடுத்துக் கொடுத்தாள்.
இன்னும் சில மாதர்கள் தனது கணவரின் தோள்களைத் தழுவும் ஆசையால் தடாகத்தின் தரையில் அமர்ந்து இருந்த தங்கள் கணவர்களை நோக்கி மயில் போல நடந்து சென்றார்கள். அவ்வாறு நடந்து செல்கையில் அப்பெண்கள் காதில் அணிந்து இருந்த குண்டலங்கள் ஒளி வீசியது, மார்பில் அணிந்து இருந்த முத்தாரங்கள் மின்னின!
வாசுகி என்னும் பாம்பைக் கடை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு தேவாசுரர்கள் முன்பு திருப்பார் கடலைக் கடைந்தார்கள். அப்போது கடலில் இருந்து தோன்றிய தெய்வ மகளிர்கள் அந்த மலையைச் சுற்றி நின்றார்கள். அதே போல ஒரு வேந்தனைச் சுற்றி நீரில் மூழ்கி விளையாடிய பெண்கள் சிலர் சூழ்ந்து நின்றார்கள். அதுமட்டும் அல்ல, அவ்வாறு அந்த அரசனை அப்பெண்கள் சூழ்ந்து நின்ற காட்சி, காட்டாற்றிலே ஆண் யானையைச் சூழ நின்ற பெண் யானைகளைப் போல இருந்தது.
சில பெண்கள் அந்த நீர் நிலையில் சுழன்று சுழன்று தங்களின் பார்வையை ஆண்களின் மீது ஏவினார்கள். கண்ணடி பட, அந்த ஆண்கள் நெஞ்சத்தில் வலிமிகக் கொண்டார்கள். அந்த வலியால் அவர்கள் துடித்தே போனார்கள். அப்போது அவர்கள் "அந்தப் பெண்களின் கண்கள் அம்போ?வேற்படையோ ?" என்று வியப்புடன் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.
எவருக்கும் இல்லாதப் பேரழகு படைத்த ஒருத்தி நீரில் மூழ்கினால். சிறிது நேரம் கழித்து அவள் தனது முகத்தை நீருக்கு மேலே தூக்கி நிமிர்த்திப் பார்த்தாள். அப்போது தெளிந்த நீரிலே தோன்றிய சந்திரனுடைய பிரதி பிம்பம் போல அவளுடைய அழகிய அந்த முகம் காணப்பட்டது.
நல்லவருடன் கூடி அவர் குணத்தைப் பெறுவது போல, தடாகத்தில் வாழும் மீன்களும் பெண்கள் அந்நீரில் விளயாடுவதனால் ஏற்பட்ட நறுமணத்தை தாங்கி உலாவின.
ஒருத்தி தனது கணவனின் தோள்களில் சந்தனக் குழம்பால் கோலம் தீட்டி இருந்தாள். அவன் நீராடிய பொழுது அந்தக் கோலம் அழிந்து விட்டது. அவனைப் பார்த்த போது தான் தீட்டிய கோலம் அழிந்திருப்பதைக் கண்ட அவள்," மற்றொருத்தியுடன் சேர்ந்ததனால் தான் இவர் தோள்களில் நான் எழுதிய சந்தனக் கோலம் அழிந்தது" என்று எண்ணிக் கோபம் கொண்டாள். அக்கோபத்தின் விளைவாக அவளது கண்கள் கோவைப் பழமாகச் சிவந்தன.
அரச யானை தனது கையினால் நீரைக் கொண்டு லக்ஷ்மியை நீராட்டுவது போல, ஓர் அரசன் தனது கையினாலேயே நீரை மொண்டு எடுத்து ஒருத்திக் கூந்தலிலே சொரிந்தான்.
நீர் நிலையில் தங்கி இருந்த அன்னப் பறவைகள் நடை அழகால் தம்மை வென்ற பெண்களை ஒன்றும் செய்ய முடியாததால், அவைகள் தம் கோபத்தை தாமரை மலர்கள் மீது காண்பித்தன; அம்மலர்களின் அழகை காலால் மிதித்துக் கெடுத்தன.
இவ்வாறு நீரில் மூழ்கியும் நீந்தியும் பெண்கள் விளையாடியதால், அந்தத் தடாகத்தில் அலை எழ இப்படியும் அப்படியுமாக அசைந்தும் நீரில் மூழ்கியும் காட்சி அளித்தன அங்கிருந்த தாமரை மலர்கள்.
இவ்வாறு நீர் விளையாட்டுச் செய்த ஆண்களும், பெண்களும் கரை ஏறி புத்தாடை உடுத்தினர். அப்போது சூரியன் மேற்குத் திசையில் விழ, சந்திரன் தண்ணொளி வீசிக் கிழக்குத் திசையில் எழுந்தான்!